செய்திகள்

5 ஆண்டுகளில் 500 ரெயில்கள் தனியார் மயமாக்கப்படும் : இந்திய ரெயில்வே திட்டம்

Spread the love

புதுடெல்லி, பிப்.12-

அடுத்த 5 ஆண்டுக்குள் 500 ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்திய ரெயில்வே ஏற்கெனவே 150 ரெயில் சேவைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது கூடுதலாக 350 ரெயில்களை தனியாரிடமே ஒப்படைக்கவுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. ஆக மொத்தம் இந்திய ரெயில்வேயிடம் உள்ள 500 ரெயில் சேவைகள் அடுத்த 5 ஆண்டுக்குள் தனியாரிடம் ஏலம் மூலம் ஒப்படைக்கவுள்ளது.

இந்திய ரெயில்வே நாள்தோறும் 13 ஆயிரம் பயணிகள் ரெயில்களை இயக்கி வருகிறது. இது போதுமான அளவுக்கு இல்லை எனவும் இன்னும் கூடுதலாக

3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரெயில்களை இயக்க வேண்டும் எனவும் பயனாளிகளின் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுபோன்ற திட்டம் மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

150 நவீன ரெயில்களை 100 வழித்தடங்களில் தனியார் ரெயில்வே நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. அந்த ரெயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஏ.சி., வைஃபை போன்ற உலகத்தரம் வாய்ந்த நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேலும் அந்த ரயிகள் காலதாமதம் இன்றி சரியான நேரத்தில் புறப்பட்டு குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைகின்றன.

500 ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கான எழுத்துப்பூர்வமான கடிதத்தை அரசாங்கத்தின் கொள்கை சிந்தனைக் குழுவான என்.ஐ.டி.ஐ (NITI) ஆயோக் வெளியிட்டது. இந்த ரயில்களை இயக்க சுமார் ரூ.22 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்யப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கணித்துள்ளது.

ரெயில்களின் உள்கட்டமைப்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை ரெயில்வே துறையால் கையாளப்பட்டு வருகிறது. இதேபோன்று தனியார் ரெயில்வே நிறுவனங்களும் ரெயில்களை பராமரிப்பார்கள். மேலும் அவர்கள் பயணிகளுக்கு உணவு வழங்குதல், பொழுதுபோக்கு போன்ற சிறந்த சேவைகளை வழங்குவார்கள்.

இதுகுறித்து ரெயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்ததாவது:-

தனியார் ரெயில்வே நிறுவனங்கள் இதற்கான ரெயில் பெட்டிகளைத் தயார் செய்த பிறகு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஏலம், ரெயில் பெட்டிகளை வாங்குவது போன்ற பணிகளைச் செய்து முடிக்க ஒன்றரை முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும்.

இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்ற ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் அந்த ரெயில் பெட்டிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுமா? இல்லையா? என்பது இன்னும் முடிவாகவில்லை. ஏலம் கோரும் போதுதான் இது முடிவு செய்யப்படும்.

இவ்வாறு ரெயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *