செய்திகள்

பிளஸ் -2 தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

கமிஷனர் ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி

வணிகவியலில் – 16 பேர், கணினி அறிவியலில் 9 பேர், பொருளாதாரத்தில் 12 பேர் 100க்கு 100 மதிப்பெண்

சென்னை, மே 7–

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 87.13 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

12–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதைத் தொடர்ந்து, டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை பள்ளிகளின் தேர்ச்சி விவரம் குறித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:– சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் 1.2 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

2023–-24–ம் கல்வியாண்டில் நடைபெற்ற 12–ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினார்கள். இதில் 1,750 மாணவர்கள் (81.78%) மற்றும் 2,605 (91.15%) மாணவியர் என மொத்தம் 4,355 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 87.13% ஆகும். (கடந்த 2022–-23ஆம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் 86.86%.)

பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்: வணிகவியல் பாடப்பிரிவில் 16, கணினிப் பயன்பாடுகள் பாடப்பிரிவில் 14, பொருளாதாரம் பாடப் பிரிவில் 12, கணினி அறிவியல் பாடப்பிரிவில் 9, கணக்கியல் பாடப்பிரிவில் 2, புவியியல் பாடப்பிரிவில் 1, கணிதப் பாடப்பிரிவில் 1, விலங்கியல் பாடப்பிரிவில் 1 என 56 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

எம்.எச்.சாலை பள்ளி முதலிடம்

மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் 5 இடங்களில் உள்ள பள்ளிகள் :

எம்.எச்.சாலை -சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 578 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கொளத்தூர் -சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் புத்தா தெரு- சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 575 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், எம்.எச். சாலை- சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 573 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் மற்றும் 600 மதிப்பெண்களுக்கு 572 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தையும், தரமணி-சென்னை மேல்நிலைப்பள்ளி, எம்.எச். சாலை -சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் 600 மதிப்பெண்களுக்கு 571 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன.

தேர்ச்சி சதவீத அடிப்படையில் முதல் ஐந்து இடங்களில் உள்ள பள்ளிகள் :

நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தையும், அப்பாசாமி தெரு -சென்னை மேல்நிலைப்பள்ளி 98 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், திருவான்மியூர் -சென்னை மேல்நிலைப்பள்ளி 96.43 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும், புல்லா அவென்யூ -சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.05 சதவீத தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும், கொளத்தூர் -சென்னை மேல்நிலைப்பள்ளி 94.16 சதவீத தேர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன. ‘

மதிப்பெண்கள் அடிப்படையில், 42 மாணவ, மாணவியர்கள் 551க்கு மேல் 600 வரை மதிப்பெண்களும், 210 மாணவ. மாணவியர்கள் 501லிருந்து 550 வரை மதிப்பெண்களும், 467 மாணவ, மாணவியர்கள் 451லிருந்து 500 வரை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *