சிறுகதை

பிள்ளைத்தமிழ் – ராஜா செல்லமுத்து

எங்கும் தமிழ் .எதிலும் தமிழ். பேசுவதும் எழுதுவதும் தமிழ் என்று தன் தமிழ் முழக்கத்தை எங்கு சென்றாலும் பறைசாற்ற தவறுவதில்லை திருமலை. அவர் ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியர். எப்போதும் தமிழ் பற்றியே பேசுவார். யாராவது தப்பித் தவறி ஆங்கிலத்தில் பேசி விட்டால், தவறு தமிழில் தான் பேச வேண்டும் என்று அங்கேயே அழுத்தம் திருத்தமாகச் சண்டைப் போட்டுச் சொல்வார்.

அவர் டீக்கடையில் இருந்தால் யாராவது காபி கொடுங்கள் என்று கேட்டால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு எப்படி நீங்கள் காபி என்று கேட்கலாம்? கொட்டை வடிநீர் கொடுங்கள் என்று கேளுங்கள் என்பார் .

யாராவது டீ வேண்டும் என்று கேட்டால் தவறு ,தவறு தேநீர் கொடுங்கள் என்று திருத்திச் சொல்லுங்கள் என்பார்.

பேப்பருக்கு காகிதம். டிபனுக்கு காலை உணவு. லஞ்சுக்கு மதிய உணவு .டின்னருக்கு இரவு உணவு என்று அவர் சொல்லும் தமிழ் வார்த்தைகளைக் கேட்டு கிறங்கி போவார்கள் அந்தப் பகுதி மக்கள் .

திருமலையைச் சுற்றிலும் உள்ள அவரது உறவினர்கள் ,நண்பர்கள் அவரைக் கண்டால் காத தூரம் பறந்து ஓடுவார்கள்.

‘ஐயோ இந்த ஆளு கிட்ட போனோம்னா நம்மள எல்லாத்தையும் தமிழ் படுத்தச் சொல்லிக் கொன்றுவிடுவான்’ என்று அவரைப் பற்றிய தவறான எண்ணங்கள் எல்லோருக்கும் மேலோங்கி நின்றன.

‘ என்ன இந்த மனுசங்க. தமிழ்நாட்டில தமிழை வளக்கலாம்னு நினைச்சா ஒரு பயலும் என்ன ஏதுன்னு கேட்க மாட்டேங்கிறானுக . நாம மட்டும்தான் தமிழ இங்க வளக்க வேண்டியதிருக்கு . இங்க இருக்கிற யாருக்கும் தமிழ் மீது அக்கறையோ தமிழ வளக்கிறனும்கிற ஆசையோ இல்ல. அதனால தான் தமிழ்நாடு இந்த நிலைமையில இருக்கு என்று தனக்குத் தானே’ புலம்பி கொள்வார் திருமலை.

அவர் தமிழ் வளர்க்கிறாரோ இல்லையோ ? அவரைச் சுற்றி வரும் ஆட்களைத் தமிழ் சொல்லியே விரட்டி விடுவார் என்ற நகைச்சுவை பேச்சும் அந்தப் பகுதியில் நிறைய இருந்தது. ஒரு பக்கம் இப்படிப்பட்ட மனிதர்கள் இந்தப் பூமியில் இருக்கிறார்கள். அதனால் தான் தமிழ் கொஞ்சமாவது தலை தூக்குகிறது. அவர் ஒருவராவது தூய தமிழ் பேசுகிறாரே… இதுதான் சிறப்பு என்று பாராட்டுவோர்களும் உண்டு.

இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியப்படாது எல்லா மொழிகளும் ஒன்று சேர்ந்துதான் இப்போது தமிழாக இருக்கிறது . திருவள்ளுவர் காலத்தில் வேண்டுமானால் தமிழ் கலப்படமில்லாமல் இருந்திருக்கலாம். இப்போது கலப்படமான மொழியைத்தான் நாம் பேசியாக வேண்டும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்ற விவாதங்களும் போய்க் கொண்டிருக்கும்.

இப்படியாக திருமலை பற்றிய நல்ல அபிப்பிராயங்களும் கெட்ட அபிப்பராயங்களும் கூடவே இருந்தன .

ஒரு நாள் தன் பேரனுடன் திருமலை வீதி வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.

‘ஐயோ தமிழ் ஐயா வருகிறார்’ என்று பறந்து கொண்டு இருந்தார்கள் அந்தப் பகுதி மக்கள் .

‘என்னைப் பாத்து ஏன் இப்படி பயந்து ஓடுறீங்க? தமிழ் படிங்க. தமிழ்ல பேசுங்க அப்படின்னு சொல்றது தப்பா என்ன? என்ன பாத்தா வில்லங்கன் மாதிரி தெரியுதா உங்களுக்கு ? நீங்க என்னைப் பழிக்கல. நம்தமிழைப் பழிக்கிறீங்க. தமிழ் உங்களை சும்மா விடாது ‘ என்று கொஞ்சம் கோபத்துடனே தன் பேரனைக் கூப்பிட்டுக் கொண்டு சென்றார் . அது ஒரு நடை பயணப் பூங்கா. .சாயங்கால வேளையில் மக்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்தார்கள்.

“வணக்கம் தமிழ் ஐயா. பேரனுடன் நடை பயணமா? “என்று ஒருவர் தமிழில் கேட்க

ஆமாம் தம்பி என்று அவரும் தனித் தமிழில் பேசிக்கொண்டே நடந்தார்.

நடை பயிற்சியின் போது நம்மைத் தமிழ் பேச சொல்லிக் துன்புறுத்த மாட்டார் என்ற எண்ணத்தில் சில பேர் திருமலையைப் பார்த்து பயம் இல்லாமல் நடந்து கொண்டிருந்தார்கள் .அவரும் அந்த இடத்தை தமிழ் படுத்தும் இடமாக மாற்றவில்லை. தன் பேரனைக் கையில் பிடித்துக் கொண்டு நடைபாதையில் நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திருமலையைப் பார்த்த அவரின் பேரன்

“கிராண்ட்ஃபா . ஐ நீட் வாட்டர். ஐ ஆம் தர்ஸ்ட்டி .ப்ளீஸ் ஐ நீட் வாட்டர்” என்று திருமலையின் கையைப் பிடித்து இழுத்தான் பேரன்.

திருமலைக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.

“ஐ நீட் வாட்டர் கிராண்ட் ஃபா” என்று திரும்பத் திரும்பக் கேட்டான். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்த திருமலை தன் பேரனிடம் அக்கம் பக்கம் பார்த்துவிட்டு,

“வெயிட்.. ஐ பிரிங் சம் வாட்டர்” என்று தன் பேரனிடம் சொல்லிவிட்டு நடந்தார்

“சார் ஷாப் இஸ் நியர். கோ அண்ட் பை த வாட்டர் “என்று ஒருவர் சொல்ல

“எஸ் ” என்று திரும்பினார் திருமலை. அப்போது அவருக்குத் தூக்கி வாரி போட்டது.

தம்பி என்றார்

“தமிழ் ஐயா, ஊருக்கு தான் நீங்க தமிழ்ல பேசணும்னு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஆனா உங்க வீட்டில ஆங்கிலம் வளந்துக்கிட்டு வருது .உங்க வீட்ல இருக்கிற பிள்ளைக தமிழ் பேசாம ஆங்கிலத்தில் பேசுறாங்க. அவங்களுக்கு வேற மொழியும் தெரியும்னு நினைக்கிறேன். ஆனா நீங்க மட்டும் வீதியில் வந்து தமிழ் வளக்கிறேன்னு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்க . முதல்ல தமிழ் வளக்கிறத உங்க வீட்டுல இருந்து ஆரம்பிங்க. அடுத்து மத்தவங்கள திருத்துங்க ” என்று அந்த நபர் சொன்னபோது,

“பிரதர் … டோன்ட் மிஸ்டேக் மீ. ஐ அம் கோயிங் டு பை வாட்டர் … பை வாட்டர்” என்று குரல் தழுதழுக்கக் கத்திக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினார், திருமலை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *