சிறுகதை

தாகம் – ராஜா செல்லமுத்து

எதிர்நோக்கும் திசைகள் எல்லாம் கானல் கதகதவென்று தகித்துக்கிடந்தது. மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த காக்கைகள் கூட வெக்கை தாங்காமல் தங்கள் இறக்கைகளை அடித்து அடித்து தன் உடலெங்கும் காற்று வாங்கிக் கொண்டிருந்தன. இலைகளால் நிறைந்திருந்த மரங்கள் எல்லாம் தலையசைக்காமல் காற்றைக் குடித்து நின்று கொண்டிருந்தன.

வெப்பம் கொதிக்கும் உச்சி வேளையில் ஒரு பெரியவர் வீதி வழியே நடந்து வந்தார். அவர் நடந்து வந்தார் என்பதை விட தள்ளாடி தள்ளாடியே வந்தார் என்பதே உண்மை. அவர் உடலில் இருந்த நீர் எல்லாம் வேர்வையாக வெளியேறி அவரை உலர்ந்த மனிதனாக மாற்றியிருந்தது .அந்த வெப்ப நேரம் அவர் கையில் குடை இல்லை. காலில் செருப்பு உண்டு. ஒதுங்குவதற்கு நிழல் இல்லை. தொண்டை வறண்டு தாகம் ; வறட்சி தண்ணீர் கேட்டது நாக்கு .

முன்பெல்லாம் நடந்து வருபவர்கள் அமர்வதற்காக வீடுகளின் முன்னால் திண்ணை கட்டி வைத்திருந்தார்கள் . நிழலுக்கு மரம் வைத்திருந்தார்கள்.

இப்போதெல்லாம் காம்பவுண்ட் சுவர் எழுப்பி நாய்கள் ஜாக்கிரதை என்ற போர்டை தான் சில வீடுகளில் தொங்க விட்டிருக்கிறார்கள்.

அந்த வயதான பெரியவர் யாரிடமாவது தண்ணீர் கேட்கலாம்? என்று நினைத்தால் கூட அந்த வீதியில் இரு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் தான் பறந்து கொண்டு இருந்ததே தவிர வேறு யாரும் இல்லை. எந்த வீட்டுக் கதவைத் தட்டுவதற்கும் அவருக்கு மனது ஒப்பவில்லை . யாரிடமாவது தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டால் நம்மைத் தவறாக நினைத்து விடுவார்களோ? என்ற அச்சம் அவர் உள்ளுக்குள் கிடந்தது இல்லை என்று சொன்னால் அவமானம். கேட்டால் நமக்கு மரியாதை குறைவு என்று நினைத்துக் கொண்டு தான் அடைய வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது என்று நினைத்த அந்தப் பெரியவர் தன் உள்நாக்கை இழுத்து உதட்டில் தொட்டுக்கொண்டு எச்சிலைத் தொண்டையில் இருந்து வர வைக்க முயற்சி செய்தார் .அது நீரற்ற பூமியின் தண்ணீர் தாகத்தைப் போல உலர்ந்து கிடந்தது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் கீழே விழுந்து விடுவோம் என்ற எண்ணத்திலேயே நடந்த அந்தப் பெரியவர், தூரத்தில் சந்திரசேகர் வருவதைப் பார்த்தார். இவரிடம் தண்ணீர் கேட்கலாமா? தண்ணீர் கேட்டால் கொடுப்பாரா? இல்லை முகம் சுளித்து திட்டி விட்டுப் போவாரா ?என்று நினைத்தவரே வீட்டிலிருந்து வெளியே வந்த சந்திரசேகரை இடைமறித்தார் ..

” தம்பி தாகமா இருக்கு. தண்ணீர் தரீங்களா? என்று கொஞ்சம் கெஞ்சும் குரலில் கேட்டார் .

“ஐயா என்ன இப்படி சொல்லிட்டீங்க. இருங்க “என்று சொன்ன சந்திரசேகர் வீட்டிற்குள் போய் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். வெடித்து கிடக்கும் பூமியில் தண்ணீரை ஊற்றியதும் விர் என்று உரிவதைப் போல அந்தப் பெரியவர் தண்ணீரை வாங்கி மடக்கு மடக்கு மடக்கென்று குடித்தார். அவர் தொண்டைக் குழி நரம்புகள் மேலும் கீழும் ஏறி இறங்கியதை பார்த்த சந்திரசேகருக்கு என்னவோ போலானது.

‘என்ன மனுஷன் எவ்வளவு தாகத்துடன் இருக்காரே. ஏன் இந்த அரசாங்கம் அங்கங்கே இந்த கோடை காலங்களில் தண்ணீர் வைக்க கூடாது. இந்த மாதிரி கால்நடையா போறவங்க தண்ணீர் குடிச்சிட்டு இளைப்பாறிட்டு போவாங்களே? நிழலுக்கு ஒதுங்க மரமும் இல்லை குடிக்க தண்ணீரும் இல்லை; என்ன நாடு இது? ‘ என்று யோசித்த சந்திரசேகர் அவரின் கையில் முழுதாக அடைக்கப்பட்ட ஒரு தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தார்.

” இல்ல தம்பி வேண்டாம்” என்றார் அந்தப் பெரியவர் .

“இல்லையா நீங்க வச்சுக்கோங்க; நீங்க இன்னும் கொஞ்சம் தூரம் நடக்கணும்னு நினைக்கிறேன். போறது வரைக்கும் இந்த தண்ணி உங்களுக்கு தாகம் தீர்க்கும்; பாதுகாப்பாய் இருக்கும் ” என்று சொல்லிய சந்திரசேகர் அந்தப் பெரியோரின் கையில் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தார்.

” ரொம்ப நன்றி தம்பி ” என்ற அந்தப் பெரியவர் தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு நடந்தார் .

அதன் பின் சந்திரசேகருக்கு யோசனை பலமாக தோன்றியது. அலுவலகத்துக்குக் கிளம்பிய அந்த அவசரம் சற்று தணிந்திருந்தது. மேலே போனார் . மண்பானை எடுத்து வந்தார். அதில் தண்ணீர் ஊற்றினார் .அதற்கு மூடியும் வைத்தார் .அதில், வெப்பம் தணிக்கும் நன்னாரி வேரையும் உள்ளே போட்டார். அவர் வீட்டு வாசலில் வைத்தார்.பக்கத்தில் ஒரு தம்ளரையும் வைத்துவிட்டு கிளம்பினார்.

தன் மனைவியிடம் தண்ணீர் தீர்ந்ததும் பானையில்அடிக்கடி குடிதண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும் என்று கட்டளையும் இட்டுப் போனார். அவர் தண்ணீர் வைத்த நாளிலிருந்து இன்று பத்தாவது நாள் .தினமும் பத்துப் பானை தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார் சந்திரசேகரும் அவர் மனைவியும். அவரின் வீட்டு வழியாகச் செல்லும் மனிதர்கள் எல்லாம் தண்ணீர் குடித்து விட்டுத் தான் செல்கிறார்கள் .

அதைப் பார்த்த சந்திரசேகருக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோஷம்.

‘ யார் என்றே தெரியாத இந்த மனிதர்கள் நாம் செய்கின்ற உதவி தான் உண்மையான உதவி’ என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

காலையில் எழுந்து அலுவலகம் செல்லும் போது அந்தப் பானையில் சந்திரசேகரும் ஒரு தம்ளர் தண்ணியை அருந்திவிட்டுத்தான் செல்கிறார்.

இப்போது அவர் மனிதர்களுக்கு மட்டுமல்ல . பறவைகளுக்கும் மொட்டை மாடியில் தண்ணீர் வைக்கிறார். பானையில் தண்ணீர் இல்லை என்றால், தண்ணீர் கொடுங்கள் ஏன் தண்ணீர் இல்லை? என்று கேட்பதில்லை.ஆனால் மொட்டை மாடியில் தண்ணீர் இல்லை என்றால் பறவைகள் சந்திரசேகரைக் கத்திக் கத்தி கூப்பிடும் .

இந்த கோடை வெப்பத்தை யார் யாரோ எந்தெந்த விதங்களிலோ தணிக்கிறார்கள். தன் வீடிருக்கும் வீதி வழியாகச் செல்லும் சிலரின் தாகங்களைத் தணிக்கிறார் , சந்திரசேகர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *