செய்திகள்

பக்க விளைவு எதிரொலி: உலகம் முழுவதும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி வாபஸ்

அஸ்ட்ராஜெனெகா அறிவிப்பு

லண்டன், மே 8–

உலக சந்தையில் இருந்து தங்களது கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியின்போது அஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனா பாதிப்புக்கு தடுப்பூசியை உருவாக்கின. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து கொரோனாவுக்கான தடுப்பூசியாக ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்தது. இதன் மூலம் உலக நாடுகளை சேர்ந்த பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சுமார் 175 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டது.

பக்க விளைவு

இந்த சூழலில் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக சொல்லி பிரிட்டன் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. ரூ.1,047 கோடி இழப்பீடு வழங்க மனுதாரர்கள் கோரி உள்ளனர்.இந்த சூழலில் அண்மையில் லண்டன் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கில் பதிலளித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம், கோவிஷீல்ட் தடுப்பூசி மிக அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது மிகவும் அரிதாக ரத்த உறைதல் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தது. இது, அந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாபஸ்

இந்த நிலையில்தான் தடுப்பூசியை சர்வதேச சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இனி அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரிப்பதையும், விநியோகம் செய்வதையும் நிறுத்திக் கொள்கிறது. இதனை பிரிட்டன் நாட்டு செய்தி நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. இந்த முடிவு முற்றிலும் தற்செயலானது. வர்த்தக ரீதியிலான காரணங்களுக்காக இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், வணிக காரணங்களுக்காக இந்த தடுப்பூசியை திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது. புதிய வகை கோவிட் திரிபுகளை சமாளிக்கும் வகையிலான புதிய மருந்துகள் வந்துவிட்டது. இனிமேல் இந்த மருந்துகள் உற்பத்தி செய்யப்படாது. பயன்படுத்த முடியாது. முதல்கட்டமாக ஐரோப்பிய யூனியனில் இந்த மருந்து திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அடுத்தடுத்து உலகளவில் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தடுப்பூசியை திரும்பப் பெறுவது தொடர்பான விண்ணப்பத்தை ஐரோப்பிய ஆணையத்தின் வசம் அஸ்ட்ராஜெனெகா சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *