செய்திகள்

99,604 விவசாயிகளுக்கு ரூ.692.06 கோடி பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை, பிப். 25–

திருவண்ணாமலை மாவட்டத்தில் 99,604 விவசாயிகளுக்கு ரூ.692.06 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிழ் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், எஸ்.வி.நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்ற 99,602 விவசாயிகளின் ரூ.692.02 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் வழங்கி, துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

அம்மா, விவசாயிகளுக்கு துயர் ஏற்படும்போதெல்லாம், உதவிக்கரம் நீட்டி, விவசாயிகளை காப்பாற்றி வந்தார். அம்மா 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன், 31.03.2016 வரை நிலுவையில் இருந்த ரூ.5318.73 கோடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். இதனால் 12.02 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் 5–ந் தேதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் ஆற்றிய உரையில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்று 31.01.2021 அன்று நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் ரூ.12,110.74 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், 13–ந் தேதி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கி, துவக்கி வைத்தார்.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கிகளில் பயிர்கடன் பெற்று நிலுவையில் உள்ள 99,604 விவசாயிகளின் ரூ.692.06 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில், அசல் ரூ.640.10 கோடி, வட்டி ரூ.48.04 கோடி, அபராத வட்டி ரூ.3.56 கோடி, பிற கட்டணங்கள் ரூ.34.26 லட்சம் ஆகும்.

இதில், ஆரணி சட்டமன்ற தொகுதியில் மட்டும் வங்கிகளில் பயிர்கடன் பெற்று நிலுவையில் உள்ள 8422 விவசாயிகளின் ரூ.53.62 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில், அசல் ரூ.51.20 கோடி, வட்டி ரூ.2.25 கோடி, அபராத வட்டி ரூ.16.23 இலட்சம், பிற கட்டணங்கள் ரூ.77 ஆயிரம் ஆகும்.

மேலும், எஸ்.வி.நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் வங்கிகளில் பயிர்கடன் பெற்று நிலுவையில் உள்ள 593 விவசாயிகளின் ரூ.3.88 கோடி பயிர்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில், அசல் ரூ.3.70 கோடி, வட்டி ரூ.16 லட்சம், அபராத வட்டி ரூ. 2 லட்சம் ஆகும்.

வேளாண் பெருமக்களின் பயிர்க்கடன் நிலுவை தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், விவசாயிகள் எந்தவித சிரமமும் இன்றி, வரும் ஆண்டில் பயிர் சாகுபடியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமரசாமி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் காமாட்சி, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் பூங்கொடி, துணைப்பதிவாளர்கள் கமலக்கண்ணன், சரவணன், ஆரோக்கியராஜ், பிரேம், எஸ்.வி. நகரம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பாலு முதலியார், அசோக்குமார், பாரி.பாபு, பிஆர்ஜி. சேகர், பச்சையம்மாள் சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.வி. நகரம் வாசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *