செய்திகள்

கிறிஸ்துமஸ் நட்சத்திரம்! டாக்டர் வி.ஜி.சந்தோசம்

கிறிஸ்துமஸ் விழா என்றால், நட்சத்திரம் இல்லாமல் ஒரு வீடும் அலங்கரிக்கப்படுவதில்லை. காரணம் என்ன? கிறிஸ்துமஸ் நட்சத்திரம் அது கிறிஸ்துவின் நட்சத்திரம். அந்நாளில் ஏசு கிறிஸ்து பிறந்த போது, வான சாஸ்திரிகள், அந்நாட்டு ராஜாவான ஏரோது என்னும் மன்னனிடம், ‘‘யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம்’’ என்றார்கள்.

ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும், அவனோடு கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன், பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர்கள் எல்லோரையும் கூடி வரச் செய்து’; ‘‘கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று’’ அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள், ‘‘யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல, என் ஜனமாகிய இஷ்ரேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்’’ – என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது’’ என்றார்கள். (மத்தேயு 2: 2 முதல் 6)

வானசாஸ்திரிகள் ஏரோது அரண்மனையில் இல்லாததினால், தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள், அவர்களுக்கு நட்சத்திரம் வழிகாட்டியது.

‘‘இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம், பிள்ளையிருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது’’

சாஸ்திரிகள் என்பவர்கள், வானத்தின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள். வான ஞானிகள் வானத்தில் ஓர் அதிசயமான நட்சத்திரம் தோன்றியதைப் பார்த்து, அதன் முக்கிய காரணத்தை அறிந்து கொள்ளும் வல்லமை பெற்றவர்கள். அதனால், அந்த அதிசய நட்சத்திரம் தோன்றியது. பூமியிலே ஒரு அரசன் பிறப்பதை முக்கியப்படுத்தியுள்ளதை அவர்கள் உணர்ந்ததினால், அந்த நட்சத்திரத்தின் பின்னே நடந்துச் சென்றனர்.

அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷம் அடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும், அதன் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து, அதைப் பணிந்து கொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும், தூப வர்க்கத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

இன்றைய அறிவு உலகத்தில், அந்த வான சாஸ்திரிகள் ‘வானவியலின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்கள். அவர் வான் ஆராய்ச்சியாளர்களாகவும், சமுதாயத்தில் செல்வமிக்கவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தார்கள். ஆனாலும், குழந்தை ஏசுவை, நெடுஞ்சாண் கிடவையாக விழுந்து, துதிக்கிறார்கள். அவர்களின் பணிவும், அந்த குழந்தை ஒரு நாள் இந்த உலகத்தையே ஆளப்போகும் கிறிஸ்து என்பதை உணர்ந்ததால் தான் அவ்வாறு ஏசுவைத் தொழுது கொண்டார்கள்.

பிரியமானவர்களே! நம் வீடுகளில் நட்சத்திரத்தைத் தொங்கவிட்டு மகிழும் நாம், அந்த ஆற்றல் மிக்க, செல்வம் படைத்த வான சாஸ்திரிகளின் உள்ளம் பெற்றவர்களாக, நம்மைத் தாழ்த்தி, ஏசு கிறிஸ்துவை வணங்குவோமாக!

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நன்நாள் வாழ்த்துக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *