செய்திகள்

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மகாராஷ்ட்ராவில் வறுத்தெடுக்கும் வெயில்: 25 பேர் பலி

நாசிக், மே.3–

மகாராஷ்ட்ராவில் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் தாக்குதலுக்கு 25 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவில் நடப்பு ஆண்டில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருக்கிறது. வெப்ப அலையால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். அனல் காற்றும் வீசி வருகிறது.

வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல்வேறு வடமாநிலங்களில், மாணவர்களின் நலனை முன்னிட்டு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்ட்ரா சுகாதார துறை வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், மகாராஷ்ட்ராவில் கடந்த 2016ம் ஆண்டு வெயில் தாக்குதலுக்கு 19 பேர் உயிரிழந்தனர். அதற்கு பின் 6 ஆண்டுகள் கழித்து நடப்பு (2022) ஆண்டில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

நாக்பூரில் அதிக அளவாக 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அவுரங்காபாத்தில் 5 பேரும், நாசிக்கில் 4 பேரும் அடுத்தடுத்து உயிரிந்துள்ளனர். நாக்பூரில் 300 பேர் வெயிலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்த 2 நாட்களுக்கு மராட்டியத்தின் பல பகுதிகளில் கடுமையான வெப்பஅலை இருக்கும் என்றும் சுகாதாரத் துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கோடை வந்துவிட்டால் போதும் மகாராஷ்ட்ரா மாநில மக்கள் மகாபலேஷ்வர் மலைவாசஸ்தலத்துக்கு படை எடுக்க ஆரம்பித்து விடுவது வாடிக்கை. இங்கு வெயிலே தெரியாது. இதே போலத்தான் பஞ்ச்கனி பகுதியும். குளுகுளுவென்றே இருக்கும். சந்திராபூர் – வெயல் 114 டிகிரியைத் தொடும். கொளுத்தோ கொளுத்தென்று கொளுத்தி வறுத்தெடுத்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.