செய்திகள்

19 பேர் உயிரை பலி வாங்கிய கள்ளச் சாராய வழக்கில் 9 பேருக்கு தூக்கு; 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை

பாட்னா, மார்ச் 6–

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு மரண தண்டனையும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 2016–ம் ஆண்டு பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்தனர். 2 பேருக்கு பார்வை போனது. இது தொடர்பாக போலீசார் 4 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி லவகுச குமார், குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தார். இதில் ஒருவர் காலமாகி விட்டார்.

குற்றவாளிகளில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தார்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கள்ளச்சாராயம் தயாரித்து கடத்தி, அதை ரகசியமாக விற்றதாக இவர்கள் மீது புகார் சொல்லப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ரூபேஷ் சுக்லா எனப்படும் பண்டிட். இவன் தலைமறைவாக இருக்கிறான். இவனை பகிரங்க குற்றவாளியாக பிரகடனம் செய்து நீதிமன்றம் ‘ரெட்வாரண்டை’ பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *