போஸ்டர் செய்தி

17–வது மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு

Spread the love

புதுடெல்லி,ஜூன்.19–

17 -வது மக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று பதவியேற்றார். அவரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் வழிமொழிந்து பேசினார்கள்.

மத்தியில் பா.ஜ.க. மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுள்ள நிலையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாபண்டி பாராளுமன்றத் தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா (வயது 57) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது மனுவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் முன்மொழிந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாலை வரை எதிர்க்கட்சி சார்பில் எந்த வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை. ஓம் பிர்லாவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன. ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். ஓம் பிர்லாவை, அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார். திமுக சார்பிலும், காங்கிரஸ் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டதால் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வானார். மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை நியமிக்கும் தீர்மானத்தை மக்களவையில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு முன்மொழிந்தார்

பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து சபாநாயகர் இருக்கையில் ஓம் பிர்லாவை அமர வைத்தனர். இதையடுத்து அவர் சபாநாயகராக பொறுப்பேற்றார். பின்னர் புதிய சபாநாயகரை வாழ்த்தி பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாராளுமன்றத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம். அவருக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்போம். பிர்லா சிறப்பாக செயல்படுவார் என்பது இங்கிருக்கும் பெரும்பாலான எம்.பி.க்களுக்கு தெரியும். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஓம் பிர்லா மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், இரண்டு முறை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு மனதாக லோக்சபா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம்பிர்லாவுக்கு வாழ்த்துக்கள். ஓம்பிர்லா சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சி. ஓம்பிர்லா அறிவின் ஊற்றுக்கண். ஒருநாள் கூட ஓய்வின்றி, உழைத்து தொடர்ந்து மக்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஓம்பிர்லா. மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடக் கூடியவர்.

பெரும்பாலான எம்.பி.,க்களுக்கு ஓம்பிர்லாவை நன்கு தெரியும். ராஜஸ்தான் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடியவர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *