செய்திகள்

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்: போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை, ஏப்.27-–

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதையொட்டி மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த 6-ந்தேதி அன்று சென்னையில் இருந்து நெல்லை நோக்கி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ஏ.சி. பெட்டியில் 3 பேர் கட்டுக்கட்டாக பணம் எடுத்து வருவதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் வைத்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறிப்பிட்ட ஏ.சி.பெட்டியில் சோதனை நடத்தினார்கள்.

இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.3 கோடியே 99 லட்சத்தை, 3 பேர் எடுத்து வந்திருந்தனர். அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணத்தை எடுத்து வந்தவர்களிடம் தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள், தமிழக பா.ஜ.க. துணை தலைவரும், நெல்லை தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரிய வந்தது.

இந்த பணத்தை நயினார் நாகேந்திரனுக்கு எடுத்து செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நயினார் நாகேந்திரன் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மற்றும் வீடு போன்ற இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 10 நாட்கள் அவகாசம் கேட்டார். இதைத்தொடர்ந்து வருகிற மே 2-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சி நடந்துள்ளதாக நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடனடியாக விசாரணையை தொடங்க உள்ளனர். தாம்பரம் போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற இருக்கிறார்கள். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *