செய்திகள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-ம் சட்டப்பிரிவு ரத்து வழக்கு:உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி, டிச. 10–

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பாஜக அரசால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

நாடு விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்டது. அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இரட்டை குடியுரிமை, தனி அரசியல் சாசனம் உள்ளிட்ட சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது பிரிவும் இந்தியா–காஷ்மீர் அரசுக்குகளுக்கு இடையில் உருவாக்கப்பட்டது. ஆனால் 1950 களில் இருந்தே இந்த 370-வது பிரிவுக்கு எதிரான குரல்களும் ஒலித்து வந்தன.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஒன்றிய பாஜக அரசால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. மேலும் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந்தேதி ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது.

நாளை தீர்ப்பு

அப்போது ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு ஓராண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் முற்றாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமானோர் வழக்குகள் தொடர்ந்தனர். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்த வழக்குகளைத் தொடர்ந்தனர். 370-வது பிரிவு ரத்துக்கு எதிராகவும் ஜம்மு காஷ்மீர் 2 ஆக பிரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இந்த வழக்குகள் தொடரப்பட்டன.

370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 2023 ஆகஸ்ட் 2 ந்தேதி முதல் தொடங்கியது. இந்த வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

மொத்தம் 16 நாட்கள் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 370-வது பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கில் நாளை டிசம்பர் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என 8 ந்தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *