சிறுகதை

கிழிந்த நோட்டு- எம். பாலகிருஷ்ணன்

நல்ல வெயில். மதியம் ஆகாயத்தில் கதிரவன் தன்னுடைய உக்கிரமான பார்வையில் பூமியை அனலாக்கிக் கொண்டிருந்தது.

அடடா என்ன வெயில். உச்சி மண்டையை பிளக்குது. மனுசன் ரோட்டில நடக்க முடியல.

சிறுகைக்குட்டையை தலையில் வைத்தபடி கொத்தனார் காளியப்பன் முணு முணுத்தபடி சாப்பிட ஓட்டலுக்குள் நுழைந்தான். அவனுக்கு நல்லபசி. பக்கத்து தெருவில் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கே கொத்தனாராக வேலை பார்க்கிறான்.

ஓட்டலுக்குள் சென்றவன் சப்ளையரை அழைத்து சாப்பாட்டை கொண்டு வரச்சொல்லி சாப்பிட்டுவிட்டு கல்லாவில் இருந்தவரிடம் ஐந்நூறு ரூபாயை கொடுத்தான் காளியப்பன். அதை அவர் வாங்கிக் கொண்டு சாப்பிட்டதுக்கு போக மீதி ரூபாயை கொடுத்தார். அதில் இரண்டு நூறு ரூபாயும் நான்கு ஐம்பது ரூபாயும் கொடுத்தார்.

கொத்தனார் காளியப்பன் அதை வாங்கி தன்னுடைய சட்டைப்பையில் திணித்து விட்டு வேலை செய்யும் இடத்திற்கு வேகமாக நடந்தான். மாலை ஐந்து நாற்பத்தைந்துக்கு பணி முடிந்து மற்ற பணியாட்களுடன் வீட்டுக்குச் செல்ல தனது இரு சக்கரவாகனத்தில் புறப்பட்டான்.

காளியப்பனின் வீடு பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அவன் பாதி தூரம் சென்று கொண்டிருக்கும் போது தனது மனைவி சொன்ன ஒரு விசயம் மின்னலாய் வந்தது. அது வீட்டுக்கு அரிசியும் காய்கறி சாமான்களும் தான் அவன் மனைவி வாங்கச் சொன்ன விசயம்.

காளியப்பனுக்கு அதன் நினைவு வர உடனே தனது இரு சக்கரவாகனத்தின் வேகத்தை குறைத்து இரண்டு பக்கமும் திரும்பி பலசரக்கு கடையை பார்க்கலானான். அப்போது ஒரு பெரிய பல சரக்குக்கடை அவன் கண்களில் பட்டது.

கடையருகில் சென்றவன் வண்டியை நிறுத்தி விட்டு வீட்டுக்குத் தேவையான அரிசி பருப்பு காய்கறிகள் மற்ற பொருட்களை வாங்கி விட்டு பொருட்களுக்கு உண்டான பணத்தை எடுத்துக் கடைக்காரரிடம் நீட்டினான். கடைக்காரரும் காளியப்பன் கொடுத்த பணத்தை வாங்கி அதை எண்ணிப் பார்த்தார்.

அதில் ஒரு நூறு ரூபாய் தாள் கிழிந்து இருந்ததை பார்த்து விட்டு இந்த நூறு ரூபாய் கிழிஞ்சி ஒட்டு போட்டு இருக்கு வேற தாளை கொடுங்க என்றுக் கூறி கிழிந்த ரூபாயை காளியப்பனிடம் நீட்டினார்,. அதை வாங்கியவன் என்ன நூறு ரூபாய் கிழிஞ்சிருக்கா கொண்டாங்க பார்ப்போம்

காளியப்பன் ரூபாயை வாங்கி பார்த்தவன் அதிர்ச்சியடைந்தான். இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் கடைக்காரரிடம் அண்ணே நோட்டு லேசா தானே கிழிஞ்சிருக்கு வாங்கிக்கோங் கண்ணே என்றான்.

நான் உன்கிட்ட வாங்கிட்டா இதை யாரு வாங்குவாங்க வேற நோட்டு கொடுப்பா. வேற நோட்டு என் கிட்ட

இல்லண்ணே என்றான். அதுக்கு நான் என்ன செய்யமுடியும். அண்ணே இந்த நோட்ட ஒரு ஓட்டல்காரன் தான் கொடுத்தான்.

அப்ப அங்கேயேகொடுத்து வேற நோட்ட வாங்கிட்டு வா என்றார் கடைக்காரர். அவர் சொல்லவும் காளியப்பன் வேறு வழி இல்லாமல் சரி நான் போய் கிழிஞ்ச நோட்ட ஓட்டல் கடையிலேயே கொடுத்து வாங்கி வர்றேன் என்றபடி கடையில் வாங்கிய அரிசி பருப்பு பையை அவரிடமே கொடுத்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து வந்த வழியிலேயே வேகமாக கிளம்பினான் ஓட்டலை நோக்கி. சிறிது நேரத்திற்குள் ஓட்டல் கடைக்கு சென்றான். கடையில் கல்லாவில் ஏற்கனவே உட்கார்ந்திருந்தவர் இருந்தார். அண்ணே நான் மதியம் நம்மக் கடையில சாப்பிட்டேன். சாப்பிட்டதுக்கு ஐந்நூறு ரூபாயை கொடுத்தேன். மிச்ச சில்லறை நீங்க கொடுக்கும் போது நூறு ரூபாயை கிழிஞ்ச நோட்டா கொடுத்திட்டீங்க. நானும் கவனிக்காம வாங்கி பல சரக்கு கடையில் அரிசி வாங்கினேன். அவங்க நீங்க கொடுத்த கிழிஞ்ச ரூபாயை வாங்க மாட்டேங்கிறாங்க என்றுக் கூறி காளியப்பன் கிழிந்த நூறு ரூபாயை அவரிடம் நீட்டினான்.

உடனே கல்லாவில் இருந்தவர் நோட்டை வாங்கி பார்த்துவிட்டு இந்த கிழிஞ்ச நோட்டு நான் கொடுக்கல வேற எங்கேயாவது வாங்கி இருப்பீங்க என்று சொல்லவும். காளியப்பன் அண்ணே நீங்க தானே கொடுத்தீங்க நான் பொய் சொல்ல மாட்டேன் என்றான்.

அதற்கு கல்லாவில் இருந்தவர் அப்போ நான் பொய் சொல்றேனா என்று கேட்க.

அண்ணே நான் அப்படி சொல்லல. இந்த ரூபாவை நீங்க தான் கொடுத்தீங்கன்னு சொல்ல வந்தேன் என்றான். ஏய்யா திரும்பத் திரும்ப இதே வார்த்தையை சொல்லிட்டு இருக்கே.

சரி அப்படியே நான் கொடுத்திருந்தாலும் கிழிஞ்ச நோட்ட சாயந்தரம் வரை வச்சிருப்பீயா, நீ சொல்லுறது நம்புற மாதிரி இல்லையே.

மதியம் இந்த நோட்டை வாங்கி வேலை முடிஞ்சி இப்பத்தான் பார்க்குறேன். அதுவரை எந்த செலவும் பண்ணல என்று சொன்ன காளியப்பனை பார்த்து

சரிப்பா நான் அதுக்கு என்ன செய்யமுடியும் . ஆனா இந்த நோட்ட நான் கொடுக்கல. அதை மட்டும் உறுதியா சொல்றேன்.

ஏங்க நான் வேணுமுன்னா பொய் சொல்றேன் நீங்க பேசுறது ஞாயமா?

பணத்தை கிழிஞ்ச நோட்ட கொடுத்துட்டு ஏங்க எங்கள பாடா படுத்துறீங்க என்றான் காளியப்பன்.

கல்லாவில் இருந்தவர் நீ ரொம்ப அதிகமா பேசுறே முதல்ல கடைய விட்டு வெளியே போய்யா.

நானும் எவ்வளவோ சொல்லி பாக்குறேன் புரிஞ்சிக்க மாட்டேங்கிற. இப்படி எத்தனை பேரு கிழிஞ்ச நோட்ட கடை கடையா காட்டி கொள்ளை அடிக்க வந்துட்டீங்க என்று ஓட்டலில் சாப்பிடுபவர்கள் அதிர்ந்து பார்க்கும் அளவுக்கு காட்டு கத்தலாய்கத்த அங்கே கூட்டம் கூடியது.

பெரிய கலவரத்தை பார்த்தது போல்

அனைவரும் பார்க்க காளியப்பனுக்கு தன்மான பிரச்சினையாக அவன் மனதில எழுந்து ஆத்திரத்தை மூட்டியது.

ஏய்யா எங்கள பார்த்தா திருட்டு பசங்கள மாதிரித் தெரியுதா? உனக்குத் தான் அந்த புத்தி இருக்குது என்றபடி காளியப்பன் கையை நீட்டி பேசவும்

ஓட்டலில் பணி பார்க்கும் மற்ற ஊழியர்கள் ஓடிவந்து

ஏய்யா ஓட்டல வந்து சண்டியர் தனம் பண்ணுறீயா? என்று காளியப்பனை தாக்க போக

கல்லாவில் இருந்தவர் கோபக்கனலில் இவனை நாலு சாத்து சாத்துங்க. போலீஸ் ஸ்டேசனுக்கு ரிப்போர்ட் பண்ணி இவனை உள்ளே தள்ளுவோம் என்று அவரும் அடிக்க கை ஓங்க.

போலீஸ் வரட்டும்டா அவங்க வந்து நியாயம் சொல்லட்டும் என்னை அடிச்சிடுவீங்களா. என் மேல கைவச்சி பாருங்கடா என்று காளியப்பனும் விடாமல் கத்த. ஓட்டலில் சாப்பிட வந்தவர்கள் காளியப்பனை பார்த்து தம்பி விடுப்பா. வீட்டுக்கு போப்பா என்று சொல்ல

இல்லங்க போலீஸ் வரட்டும் அப்பத்தான் நல்லாயிருக்கும் என பிடிவாதமாக சொல்ல

அதில் ஒருவர் காளியப்பனின் கையைப் பிடித்து தனியாக அழைத்து தம்பி நூறு ரூபாய்க்காக சண்டை போடணுமா விடுப்பா என்று அமைதிப்படுத்த

காளியப்பன் முடியாதுங்க. இவங்க எனக்கு திருட்டு பட்டம் கட்டுறாங்க. தரக்குறைவா பேசுறாங்க. இவங்களப் போய் சும்மா விடச் சொல்றீங்களா?

அந்த ஓட்டலில் கூட்டம் சேர்ந்து ஒரே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

ஓட்டல்காரர்கள் கத்த காளியப்பனும் கத்த அடுத்து என்ன நடக்குமோ என்று பயத்துடன் கடையில் வெளியே இருந்து சிலர் எட்டி பார்த்தனர்.

அப்போது அங்கு ஒரு பெரியவர் வந்தார், அவரை பார்ப்பதற்கு அந்தப் பகுதியில் முக்கிய நபராகத் தெரிந்தார் வெள்ளை சட்டை வேட்டியுடன் காணப்பட்டார்.

அந்த பதற்ற நிலையில் காளியப்பனை அழைத்து தம்பி எல்லா விசயத்தையும் கேள்விபட்டேன் எனக்கு ரெம்ப சங்கடமா போச்சி.

நூறு ரூபாய்க்காக சண்டை தேவையா. அந்த நூறு ரூபாய் நான் தர்றேன்.

நாலு பேரு சாப்பிட இடத்தில பிரச்சினை வந்தா நல்லாவா இருக்கு.

யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்தா என்ன தப்பு. நீங்க ஒன்னு பேச அவங்க ஒன்னு பேச பிரச்சினை மேல பிரச்சினை தான் ஏற்படும்

உன்னுடைய விசயத்துக்கு வர்றேன். நீ இந்தக் கடையில் சாப்பிட்டு ஐந்நூறு ரூபாயை கொடுத்து சில்லறை வாங்கும் போதே அதை சரியா அப்பவே பாத்து வாங்கி இருக்கணும்.

அதைச் செஞ்சிருந்தீங்கன்னா அப்பவே கிழிஞ்ச நோட்டு கொடுத்ததை பாத்து இருக்கலாம். அவங்களும் நல்ல நோட்ட கொடுத்திருப்பாங்க. பிரச்சினை அப்பவே முடிஞ்சிருக்கும்.

பொதுவாக சொல்லுறேன். இப்பப் புழங்குற ரூபாய் நோட்டுக சில கிழிஞ்சி சில நோட்டுக அழுக்காத்தான் இருக்கு. ஏன்னா புது நோட்டுத்தாள்கள் பல பேர் கிட்ட கைமாறி புழக்கத்துல சக்கரம் போல் சுத்தி வரும் அப்ப ரூபா நோட்டுக பழசாகித்தான் போகும்.

ஒருத்தர் தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு கிழிஞ்ச நோட்டையோ அழுக்கான நோட்டையோ கொடுத்துட்டா அங்கு தான் பிரச்சினை கால் முளைச்சி வரும்.

அப்ப நாம் தாம் விழிப்புணர்வா இருக்கணும். நோட்ட கவனமா பாக்கணும். அதைக் காட்டிலும் நமக்கு என்ன வேலை. அவசரத்துல நாம நோட்ட பாக்காம வந்துட்டா அதை அடுத்தவர் தலையில் கட்ட தயாராயிருப்போம். இது ஒரு கண்ணா மூச்சி விளையாட்டு போல விளையாடு வாங்க. இதில நாம கவனமா இருக்கணும். இல்லையின்னா இப்படி பிரச்சினை தான் வரும். ஒருத்தர் செய்யுற தவறு அது காத்து போல எல்லா இடத்துக்கும் போகும்.

இப்பத்தான் கிழிந்த நோட்டுக அழுக்கான நோட்டுகள பேங்குல கொடுத்து மாத்துற வசதி இருக்கு. உன்கிட்ட இருக்குற கிழிஞ்ச ரூபாயை என்கிட்ட கொடு. நான் வாங்கிக்கிறேன். இந்த விசியத்துக்கு கைகலப்பு வர்ற அளவு போயிடிச்சி. உன்னோட நேரம் விரையுமாகி மன உளச்சலாகி இது தேவையா தம்பி என்று பொறுமையாக விளக்கமாக பேசினார்.

காளியப்பன் அவர் சொல்லக்கூடிய விசியத்தை கவனமாக கேட்டு மன அமைதியானான்

அந்தப் பெரியவர் ஓட்டல்காரர்களிடம் ஐந்து நிமிடம் பேசினார். அவர்களும் அவர் பேசுவதைக் கேட்டு தங்களுடைய தவறை புரிந்து கொண்டனர். ஓட்டல்காரர்கள் காளியப்பனிடம் கிழிந்த நூறு ரூபாயை வாங்கி வேறொரு கிழியாதநூறு ரூபாயைக் கொடுத்தனுப்பினர்

எல்லோரும் அந்தப் பெரியவரை பாராட்டினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *