செய்திகள்

பட்டாசு ஆலை வெடி விபத்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் உள்பட 2 பேர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப்.26-

பட்டாசு ஆலை வெடிவிபத்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் உட்பட 2 பேர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் சிந்தப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 24-ந்தேதி (நேற்று முன்தினம்) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் அருணாச்சலபுரம் கிராமத்தை சேர்ந்த அழகுமாரிச்சாமி என்பவரின் மகன் அஜித்குமார் (வயது 21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் மற்றும் நகரம் பெலாகுப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டையை சேர்ந்த மாரி என்பவரின் மகன் தேவேந்திரன் (9) கடந்த 23-ந்தேதியன்று மாலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டாரை பயன்படுத்தியபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தான். உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *