சிறுகதை

பந்தி – ராஜா செல்லமுத்து

ஆடம்பரமான ஒரு திருமண வரவேற்பு விழாவிற்கு விஜய் தன் நிறுவன முதலாளியுடன் சென்றிருந்தான்.

எப்படியும் இன்றைக்கு நாவுக்கு ருசியான சாப்பாடு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாயில் எச்சில் ஊற அமர்ந்திருந்தான் விஜய்.

ஆனால் திருமண வரவேற்பு முடிந்ததும் சட்டென கிளம்பினார் முதலாளி.

ஏன் இவர் சாப்பிடாம போறாரு? சாப்பிட்டு போலாமா? என்று கேட்டு விடலாமா ? என்று கூட விஜய்க்கு தோன்றியது .

இதை எப்படிக் கேட்பது ? என்று மனதுக்குள்ளே ஊறப்பாேட்டு அந்தத் திருமண வீட்டை விட்டு வெளியேறினான் விஜய்.

போலாமா? என்று முதலாளி சொன்னதும்

சரி, இன்னைக்கு நல்ல சாப்பாடு நமக்கு கெடைக்காம பாேச்சே என்று நொந்தபடியே வந்தான் விஜய்.

முதலாளியுடன் சென்றால் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

அதிலிருந்து முதலாளி ஏதாவது ஒரு விழாவிற்கு கூப்பிட்டால் நிச்சயம் அவருடன் சாப்பிட முடியாது என்று விஜய்க்கு தெரியும்.

ஒரு நாள் வாய் விட்டு முதலாளியிடம் கேட்டு விட்டான் விஜய்.

ஐயா நீங்க எந்த பங்சனுக்கு போனாலும் ஏன் சாப்பிட மாட்டேங்கிறீங்க ?என்று கேட்க

அது மரியாதையா இருக்காது விஜய். நம்ம கௌரவம் என்ன? நம்ம தகுதி என்ன? நம்ம போயி அடுத்தவங்க வீட்ல சாப்பிட்டா நல்லா இருக்குமா? அதனாலதான் நான் சாப்பிடுறதில்லை என்றார் முதலாளி .

அது இல்ல முதலாளி… நீங்க சாப்பிடாட்டி கூட பரவால்ல. உங்க கூட வர்ற ஆளுகளையாவது சாப்பிட வைக்கலாமே என்று விஜய் கேட்க

அதற்கு பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே சென்றார் முதலாளி.

பெரிய பெரிய முதலாளிகள் எல்லாம் இப்படித்தான் வரட்டுகெளரவம், அந்தஸ்து அப்படி இப்படின்னு மத்தவங்களையும் நோகடிச்சுருவாங்க என்று நொந்து கொண்டான் விஜய் .

காலங்கள் கடந்தன

விஜயின் நண்பன் வேலு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.

ஒரு திருமண வரவேற்பு விழாவிற்காக வேலுவின் முதலாளியும் வேலுவும் செல்ல வேண்டியிருந்தது.

அந்த நேரம் பார்த்து விஜய் வேலுக்கு போன் செய்தான்.

என்ன விஜய் எங்க இருக்க ?

வீட்டுல தான் இருக்கேன் என்று விஜய் சாெல்ல

நானும் எங்க முதலாளியும் ஒரு ஃபங்சனுக்கு போறோம் வரியா என்று வேலு கேட்க

அய்யய்யோ நான் வரலப்பா இந்த முதலாளிகளுடைய சமாச்சாரமே வேற மாதிரி இருக்கும். நீ போயிட்டு வா எனக்கு நேர்ந்த விஷயம் உனக்கும் நேராம இருக்கும்னு நெனைக்கிறேன் என்றான் விஜய்.

அவன் சொல்வது என்னவென்று புரியாத வேலு

என்ன சொல்ற? என்று வேலு கேட்க

இல்ல உனக்கு நான் சொல்லி புரிய வைக்க வேண்டியது இல்ல. நீ பாேயிட்டு வா என்றான் விஜய்.

இல்ல விஜய். கண்டிப்பா நீ பங்க்சனுக்கு வா எங்க முதலாளியும் உன்னையும் கூப்பிட்டு வர சொன்னாரு

என்று சொல்ல இருமனதாக புறப்பட்டான் விஜய்.

முதலாளியுடன் பத்து பதினைந்து தொழிலாளிகளும் புறப்பட்டு வந்தார்கள் .

அது ஒரு ஆடம்பரமான திருமண வரவேற்பு விழா. திருமண வரவேற்பு முடிந்ததும் அத்தனை பேரையும் டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார் அந்த முதலாளி.

ஐயா நீங்க அந்த பக்கம் போய் உட்காருங்க என்று வேலு சொல்ல

ஏன் நான் இங்கே உக்காந்தா என்ன? என் கூட நீங்க உட்காருங்க என்றார் வேலுவின் முதலாளி

வேலுவின் முதலாளியை பார்த்த திருமண வீட்டுக்காரர்கள் விழுந்து விழுந்து கவனித்தார்கள்.

அவருக்கு மட்டுமல்ல அவருடன் வந்த 10, 15 பேருக்கும் தட புடலான விருந்து வழங்கப்பட்டது.

அத்தனையும் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள் . பந்தி முடிந்து வெளியே வரும்போது வந்தவர்களுக்கு கண்ணீர் மல்கியது .

அவர்களை பார்த்த முதலாளி அத்தனை பேரையும் தோள்தட்டி கொடுத்தார்.

வேலு நாம என்ன நினைக்கிறோமோ அதைத்தான் மத்தவங்கள நினைப்பாங்க. எனக்கு என்ன மாதிரியான உணர்வு இருக்கோ அதே மாதிரி தான் மத்தவங்களுக்கு இருக்கும். நான் பணக்காரன் , முதலாளி அப்படின்னு வேற இடத்தில உட்கார்ந்து சாப்பிட்டா எனக்கு ஒரு மாதிரியாவும் உங்களுக்கு ஒரு மாதிரியாகவும் பந்தி வைப்பாங்க. உங்க பக்கத்துல நான் உட்காந்துனால எனக்கு என்ன வைக்கிறாங்களோ அதையே தான் உங்களுக்கும் வச்சாங்க இதுல என்ன இருக்கு. உன் நண்பர்கள் இன்னைக்கு ஒரு நாள் நல்ல சாப்ட்டாங்கல்ல. அது பாேதும்

என்று வேலுவின் முதலாளி சொல்ல

ஐயா நானும் எத்தனையோ மனுசங்க கூட பழகி இருக்கேன். உங்கள மாதிரி ஒரு ஆள நான் பாத்ததில்ல. எங்க முதலாளி கூட கௌரவம் ,அந்தஸ்து அப்பிடின்னு எங்கயும் சாப்பிட மாட்டார் .அவர் மட்டும் இல்ல எங்களையும் சாப்பிட விட மாட்டார்.

ஆனா நீங்க பாருங்க உங்களுக்கு என்ன கிடைக்குதோ அதுவே மத்தவங்களுக்கும் கிடைக்கணும் அப்படின்னு நினைச்சு எங்க கூட சமமாக உட்கார்ந்து சாப்பிட்டீங்க பாருங்க. நீங்க நல்ல மனுசன்ங்கிறதுக்கு இதுக்கு மேல என்ன வேணும்.

இன்னைக்கு தான் ஐயா நாங்க நல்லா சாப்பிட்டு இருக்கோம் ரொம்ப நன்றி

என்று சொன்னான் விஜயும் நண்பர்களும் .

தம்பி இந்த விழா மட்டுமில்ல உங்களுக்கு எப்பவெல்லாம் நல்லா சாப்பிடனும்னு தோணுதோ அப்ப எல்லாம் எங்க வீட்டுக்கு நீங்க வரலாம் . எப்பவும் உங்களுக்காக என்னோட வாசல் கதவு திறந்தே இருக்கும் என்று வேலுவின் முதலாளி சொன்ன போது

அந்த விழாவிற்கு வந்திருந்த வேலு, விஜயின் நண்பர்களுக்கு இப்படியும் சில முதலாளிகள் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எல்லாரையும் தவறாக நினைப்பது தவறு என்று நினைத்தார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *