சிறுகதை

ஆசை நிறைவேறியது – மு.வெ.சம்பத்

கீதா தனது படிப்பு முடிந்ததும் திருச்சியில் வேலைக்குச் சேர்ந்தாள். திருவரங்கத்தில் உள்ள ராகவனுக்கும் கீதாவிற்கும் திருமணம் முடிந்து திருவரங்கத்தில் அவர்கள் வாசம் தொடர்ந்தது.

கீதா வேலை பார்க்கையில் தனது பொழுது போக்காக கதைகள் எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பி அது பிரசுரம் ஆகி வந்தது கண்டு ஆனந்தம் அடைவாள். நாளடைவில் இவளது பெயர் சற்று பிரலமான வேளையில் தனது குடும்ப பொறுப்புக்கள் காரணமாக கதை எழுதுவதில் கீதாவிற்கு தொய்வு ஏற்பட்டது.

குழந்தைகள் இரண்டு பிறக்கவே அவர்களை கவனிக்கும் பொறுப்பு வேறு சேர்ந்ததால். முற்றிலும் அவள் கதை எழுதுவதில் இருந்து விலகியே விட்டாள். ராகவன் இதைப்பற்றி ஒரு வார்த்தையும் கூற மாட்டான். ஊக்கமும் செய்ய மாட்டான். ஆனால் அவ்வப்போது கீதா மாமியார் மற்றும் மாமனார் அவளிடம் ஏன் இப்பொழுதெல்லாம் எழுத மாட்டேன் என்கிறாய் என்பார்கள். சிறு புன்னகையே அவர்களுக்கு விடையாகக் கிடைத்தது.

இன்று திருவரங்கம் வந்த கீதா பெற்றோர் கோவிலுக்கு சென்று வந்த பின் கீதா அலுவலகம் கிளம்ப தயாரான போது கீதா மாமியார் நாங்கள் இவர்களை கவனித்துக் கொள்கிறோம். நீ பத்திரமாகச் சென்று வா என்றார்கள். அன்று மதியம் 2 மணியளவில் கீதா அம்மாவும் கீதா மாமியாரும் சேர்ந்து பிள்ளைகளுக்காக கார வகைகள் தயார் செய்தனர். அப்போது பேசுகையில் கீதா மாமியார் கீதா இப்போதெல்லாம் கதை எழுதுவதில்லை. நானும் சொல்லிப் பார்த்தேன். பதிலேயில்லை என்று கூறியதும் கீதா அம்மா அவள் சின்ன வயதில் நன்றாகவே வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டு சில கச்சேரிகளில் கூட பாடியுள்ளார் என்றார்.

திடீரென ஒரு நாள் நிறுத்தி விட்டாள் என்றார். எனக்குத் தெரியாமல் போச்சே என கீதா மாமியார் கூறினார். தற்போது கீதாவிற்கு அலுவலகத்தில் வேலை அதிகமோ என்னமோ, வீட்டிற்கு வரும் போது மிகவும் களைப்பாக வருகிறாள் என்றார் கீதாவின் மாமியார்.

எது கேட்டாலும் அவளிடமிருந்து பதில் வாங்குது கடினம் என்றார் கீதாவின் அம்மா. எனது பையன் எதுவுமே கண்டுகொள்வதில்லை என அங்கலாய்த்தார் கீதாவின் மாமனார்.

பள்ளியிலிருந்து வந்த குழந்தைகள் மிகவும் மகிழ்வாக தாத்தா பாட்டி எனக் கூவிக் கொண்டே வந்தார்கள். கை, கால்கள் சுத்தம் செய்து வேறு உடை மாற்றியவர்கள், பாட்டியிடம் என்ன இன்று வீடு முழுக்க நல்ல வாசனையாக உள்ளதே எனக் கேட்டனர்.

அதற்குள் பாட்டி இரண்டு தட்டுகளில் பலகாரங்கள் கொண்டு வர, பயங்கர ஆனந்தத்துடன் பெற்றுக் கொண்டு, பேரன் ஒரு பாட்டியின் மடியிலும் பேத்தி வந்த பாட்டியின் மடியிலும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். வீட்டில் உணவு வாசனை அலையுடன் மகிழ்வலையும் சேர்ந்து கொண்டது.

அலுவலகத்திலிருந்து கீதா வந்ததும் அவள் மாமியார், அவள் ஆசுவாசப் படுத்திக் கொண்டு வந்ததும் உனக்கு நன்றாகப் பாடத் தெரியுமாமே ஏன் சொல்லவில்லை என்றார்.

கீதா மனதிற்குள் அம்மாவைத் திட்டினாலும் வெளியில் அவள் எப்போதும் உதிர்க்கும் புன்னகையே பதிலாக அமைந்தது. கீதா தனது மனதிற்குள் தனது ஒவ்வொரு ஆசையும் புதைக்கப்பட்டது என உணர்ந்தாள்.

காலங்கள் தன் வேகத்தில் உருள, கீதாவின் மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து இப்பூவுலகைத் துறக்க, கீதா துவண்டு போனாள். அன்று வந்த கணவர் மிகவும் மகிழ்வாக தனக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்துள்ளதாகவும் அடுத்த மாதம் சென்று வேலையில் சேர வேண்டும் என்றதும் கீதாவிற்கு தலை சுற்றலே வந்தது.

கீதாவை வேலையை விடச் சொன்ன ராகவன், நான் சென்று என்னை நிலைப்படுத்திக் கொண்டு உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றதும் கீதா சற்று நிம்மதியானாள்.

ராகவன் இந்த வீட்டை விற்று விடலொமெனக் கூற கீதா பிடிவாதமாக மறுத்ததோடு மட்டுமல்லாமல், இது அம்மா அப்பா வாழ்ந்த இல்லம் என்றாள். அதோடு இந்த வீட்டை விற்று விட்டு வாடகை வீட்டில் என்னால் வாழ முடியாதென்றாள். ராகவன் முடிவில் உன் இஷ்டம் என்றான்.

ராகவன் வேலைக்குச் சேர்ந்து விளையாட்டுப் போக்காக இன்றுடன் ஒன்பது மாதங்கள் ஓடி விட்டது. எப்போது தான் ராகவனுடன் இணைய நாள் வருமோவென கீதா மனதிற்குள் குழம்பினாள்.

இதற்கிடையில் கீதா தனது மகளுக்கு சாயந்திரம் கர்நாடக இசை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள். வீட்டில் பாட்டுச் சப்தம் கேட்கவே அருகிலுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளையும் பாட்டுக் கத்துக் கொடுக்க அனுப்பினார்கள்.

நீங்கள் வெளிநாடு சென்றாலும் இணைய வழியில் கற்றுக் கொடுங்கள் என்றார்கள். மேலும் நீங்கள் உங்கள் பெண்ணிற்கு நன்கு கற்றுத் தந்து சிறந்த பாடகியாக ஆக்குங்கள். ஏனெனில் அவளுக்கு நல்ல ஞானம் உள்ளது என்றார்கள்.

கீதாவிற்கு சற்று ஆறுதலாக இந்த வார்த்தைகள் அமைந்தது. மேலும் புதைக்கப்பட்ட வித்து ஒன்று முளைக்க ஆரம்பித்தது போல் எண்ணினாள்.

இன்று ராகவன் தொடர்பு கொண்டபோது வரும் கல்வியாண்டு முதல் பிள்ளைகளை இங்கு சேர்த்து விடலாம் என்றான். நீ பாதுகாப்பாக இருந்து கவனித்துக் கொள் என்றான்.

பள்ளியிலுருந்து வந்த மகன் கீதாவிடம் தானொரு கட்டுரைப் போட்டியில் பங்கேற்கப் போவதாகவும் அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டுமெனக் கூற கீதா மகிழ்ந்து அவனிடம் தலைப்பைக் கேட்டு இரவோடு இரவாக தயாரித்துத் தந்தாள்.

காலையில் படித்த மகன் எவ்வளவு அழகான கட்டுரை, என்ன அழகான வார்த்தை அலங்காரம், கருத்தைச் சொல்வதில் முதிர்ச்சியான போக்கு என்று அடுக்கிக் கொண்டே போனான்.

கீதா நீ நிச்சயம் நல்ல எழுத்தாளாராக வரவாய்ப்புள்ளதெனக் கூறிக்கொண்டு மனதிற்குள் புதைந்த இன்னொரு வித்து மலரப் போவதாக எண்ணினாள். தனது ஆசைகள் இவர்களால் மலரப் போகிறது என்று எண்ணம் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது.

ஓய்வு நேரத்தில் எழுதினாள்; பத்திரிகைகளில் பிரசுரமாகி பேரும் புகழும் வரத்தொடங்கியது.

அவள் மனதில். குடும்பப் பாரம்பரிய மரபணு அமைப்பே இதற்குக் காரணமாக அமைகிறதா என்றோ எப்போதே படித்தது நினைவில் வந்தது.

கீதாவிற்கு. அப்போது கைப்பேசி அழைப்பு வர அதை எடுக்கச் சென்றாள். மறு முனையில் ராகவன் நமது எண்ணம் எல்லாம் பூர்த்தியாகும் என்றான்.

கீதா அளவு கடந்த மகிழ்ச்சியில் அழுதாள்.

ஆனால் ராகவனோ ஏதும் அறியாமல் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *