செய்திகள்

‘மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது’: பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஏப்.27-

பள்ளிகளில், குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் இணைந்து வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டிருப்பதாவது:-–

பள்ளி மாணவர்கள் அதிகளவிலான உடல் ரீதியிலான தண்டனைகளை அனுபவிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பள்ளிகள், விடுதிகள், குடும்பங்களுக்குள்ளும் இதுபோன்ற தண்டனைகளை மாணவர்கள் சந்திக்கிறார்கள். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாத வகையில், நடவடிக்கை மேற்கொள்வது அவசியமாகிறது.

குழந்தைகளின் உடல் நலனையும், மனநலனையும் பாதுகாக்க வேண்டியது கடமை. தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி பள்ளி குழந்தைகளின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்தப்பட வேண்டும்.

பள்ளிகளில் குழந்தைகளை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது. தவறு செய்யும் குழந்தைகளை அடிப்பதற்கு பதிலாக, அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதற்கு ஆசிரியர்கள் உதவ வேண்டும். படிப்பில் கவனம் செலுத்தாத குழந்தைகளை மனரீதியாக துன்புறுத்தக்கூடாது. குறிப்பாக, அவர்களின் செயல்பாடுகளை வைத்தோ, சாதி பெயர் கூறியோ, பெற்றோர்கள் குறித்தோ விமர்சிக்கும் வகையில் பேசக்கூடாது. குழந்தைகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி அளிக்க வேண்டும். இதுகுறித்து, பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்களிடம் உறுதிமொழி பெற வேண்டும். குழந்தைகளின் குறைகளை அறிய பள்ளிகளில் புகார் பெட்டிகள் அமைக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *