போஸ்டர் செய்தி

விவசாயிகள், மீனவர்களுக்கு 12 திட்டங்கள் செயல்படுத்த அரசு நடவடிக்கை

சென்னை, ஜன. 10–

விவசாயிகள், மீனவர்களுக்காக நபார்டு வங்கி உதவியுடன் 12 திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (10–ந் தேதி) சென்னையில் நடைபெற்ற நபார்டு வங்கியின் மாநில வங்கிக் கடன் குறித்த கருத்தரங்கில் பேசினார்.

அவர் கூறியதாவது:–

நபார்டு வங்கி நடத்தும் 2019–20–ம் ஆண்டிற்கான மாநில வங்கிக் கடன் நிதி கருத்தரங்கு, உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

வேளாண் உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக ஆக்கி வளமான தமிழகத்துக்கு வித்திடுவதை தமிழ்நாடு அரசு கொள்கையாகக் கொண்டுள்ளது. விவசாயிகள் இடர்பாடுகளில் இருக்கும்போது, அம்மாவின் அரசு அவர்களுக்கு எப்போதும் அரணாக இருந்து வருகிறது. அந்த அடிப்படையிலேயே இந்தக் கருத்தரங்கம் அமைவது சிறப்பானது.

உணவு உற்பத்தியில் சாதனை

* தமிழ்நாட்டில் இரண்டாம் பசுமை புரட்சி ஏற்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக 2011–12 முதல் 2017–18 ஆண்டு வரையிலான காலத்தில் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன்னை ஐந்து முறை கடந்து சாதனை படைத்தது. அதற்காக மத்திய அரசின் ‘‘கிரிஷி கர்மான்” விருதினை தமிழ்நாடு அரசு நான்கு முறை பெற்றுள்ளது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

* டெல்டா விவசாயிகளின் நலன் காக்க குறுவை தொகுப்பு திட்டம் 115 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்த ‘‘நீரா’’ பானம் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* 802 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மானாவாரி சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* கூட்டு பண்ணைய முறையை ஊக்குவிக்க 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 2 லட்சம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம்

* பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 2016–17–ம் ஆண்டில் அதிக அளவிலான காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றது. அதாவது, கடந்த 2016–17–ம் ஆண்டில் மட்டும் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து 3 ஆயிரத்து 526 கோடியே 78 லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை ஒப்பளிக்கப்பட்டு, வேளாண் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அது போல, 2017–18–ம் ஆண்டில் ஆயிரத்து 8 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீட்டுத் தொகை இது வரை ஒப்பளிக்கப்பட்டுள்ளது. 2018–19–ம் ஆண்டில் இதுவரை 16 லட்சத்து 39 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகள் கூடுதலாக இந்த ஆண்டு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

* தமிழ்நாட்டில் பெரிய மற்றும் மிகப்பெரிய உணவுப் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை ஒன்றினை அம்மாவின் அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கிராம அளவில் குறிப்பிட்ட விளைபொருட்களுக்கான உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை அமைத்து செயல்படுத்தி வருகிறது.

* பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற பொருட்கள் தன்மை மாறாமல் விநியோகம் செய்வதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, அறுவடைக்கு பிந்தைய சேதத்தைத் தவிர்க்கவும், நுகர்வோருக்கு ஆண்டு முழுவதும் தரமான பொருட்கள் நல்ல விலைக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் விநியோகத் தொடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 495 சேகரிப்பு மையங்களும், 31 பிரதான பதனிடும் அலகுகளும், 34 பிரதான சந்தைகளும் 1,720 கிராமங்களில் 10 மாவட்டங்களில் 398 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.

உணவுப் பூங்காக்கள்

* அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பெரிய மற்றும் மிகப் பெரிய உணவுப் பூங்காக்கள் 10 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்களின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிப்பதுடன், விவசாயிகளின் வருமானமும் இருமடங்காக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

விவசாயிகள் வளமான வாழ்வு வாழ, உற்பத்தித் திறன், சரியான விலை மற்றும் வேளாண் பொருட்களின் பசுமை மாறாமல் பாதுகாத்தல் ஆகியவை முக்கியமாகும்.

வேளாண்மை உற்பத்தியை மட்டும் அதிகரித்தால் போதாது, சரியான நேரத்தில் அதனை சந்தைப்படுத்தி, வேளாண் பெருமக்களின் உழைப்பிற்கு ஏற்ற சரியான விலையை பெற்றுத்தந்தால்தான் அவர்களின் வாழ்வு வளம் பெறும். இதற்காக வேளாண் உற்பத்தியாளர் சங்கங்களை ஊக்குவித்து, வேளாண் பெருமக்களுக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நபார்டு வங்கியின் மாநில வங்கிக்கடன் கருத்தரங்கில் 2019–20–ம் ஆண்டில், தமிழ்நாட்டு மக்களுக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வங்கிக்கடன் வழங்குவதற்கான திட்ட கையேட்டினை இன்று வெளியிடுவதில், நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத்தொகையில் 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண் பெருமக்களுக்காகவும், வேளாண் சார்ந்த தொழில்களுக்காகவும் ஒதுக்கியிருப்பதை அறிவதில் ஒரு விவசாயி என்ற முறையில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விவசாய கூட்டு பொறுப்புக்குழுக்கள் – பால் பண்ணை குழுக்கள் முதல் பட்டுத்துணி நெசவாளி குழுக்கள் வரை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. மேலும் இந்த குழுக்கள் நிலுவையின்றி வங்கியில் பெற்ற கடனை திரும்பி செலுத்தி வருகிறது என்று நபார்டு வங்கி கூறியிருப்பது, விவசாயிகளின் பொறுப்புணர்வைக் காட்டுகிறது. அதற்காக விவசாயப் பெருமக்களை நான் மனதார பாராட்டுகிறேன்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடனுதவி பெறுவதற்கு நபார்டு வங்கி முக்கிய பங்காற்றியுள்ளது. பெண்களின் முகத்தில் மலர்ச்சியும், அவர்களின் வாழ்வில் வளர்ச்சியும் நபார்டு வங்கி ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

பிளாஸ்டிக் மாற்று பொருள் உற்பத்திக்கு கடன்

1.1.2019 முதல் தமிழ்நாட்டில் ஒரு முறை உபயோகித்து தூக்கி எறியக்கூடிய 14 பிளாஸ்டிக் பொருட்களை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே மாற்று பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இம்மாற்றுப் பொருட்களை அதிக அளவில் தயாரிக்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த தொழில் நிறுவனங்களுக்கு, வேறு தொழில்கள் தொடங்குவதற்கும் கடனுதவி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சென்ற ஆண்டும், நபார்டு வங்கி ஏற்பாடு செய்த சுய உதவிக் குழுக்களுக்கு விருது வழங்கும் விழாவில் நான் பங்குகொண்டேன் என்பதை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டிலுள்ள 2 லட்சத்து 72 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் அதாவது சென்ற ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு கடன் வழங்க வங்கிகள் திட்டமிட்டிருப்பது, ஏழை பெண்களின் வாழ்வு மேலும் ஒளிர வழிவகை செய்யும்.

கிராமச்சாலைகள் முதல் பாடசாலை வரை, கால்நடை மருத்துவ மையங்கள் முதல் மீன்பிடி துறைமுகங்கள் வரை அனைத்து விதமான ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு நபார்டு வங்கி ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் அளவில் கடன் அளித்து வருவதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வெண்மை புரட்சி

சென்ற வருடம் 30 நாட்களுக்கு மேல் காவேரியில் தொடர்ந்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட காரணத்தால், 182 ஆண்டுகள் பழமையான அணைக்கட்டின் மதகுகள் சேதமடைந்தன. புதிய நீரொழுங்கி அமைக்கும் திட்டத்திற்கு 387.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென நபார்டு வங்கி 368 கோடி ரூபாய் கடனுதவி வழங்க திட்டமிட்டுள்ளது. வழக்கமாக நபார்டு வங்கியால் தமிழ்நாட்டிற்கென ஒதுக்கீடு செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டினை காட்டிலும், இந்தத் தொகை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இது தமிழ்நாட்டின் மீது இந்த வங்கி கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சி ஏற்படுத்த 5 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 500 கோடி ரூபாய் கடன் உதவியை தேசிய பால் வளர்ச்சி கழகத்தின் மூலம் நபார்டு வங்கி வழங்க உள்ளது என்பதை கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்களின் நடவடிக்கைகளை நவீனப்படுத்த மின்னணு கொள்முதல் மற்றும் நவீன சேமிப்பு கிடங்குகள் அமைக்க 468 கோடி ரூபாய் அளவில் இந்த வருடம் நபார்டு வங்கி கடனுதவி அளித்துள்ளது.

விவசாயிகள், மீனவர்களுக்கு 12 திட்டங்கள்

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து விவசாயிகளையும், மீனவர்களையும் பாதுகாப்பதற்காக பசுமை பருவக்கால நிதியிலிருந்து நபார்டு வங்கியின் உதவியுடன் 12 திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக நபார்டு வங்கி தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து கடனுதவி அளித்து வருகிறது. இனி வரும் காலங்களிலும், மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக அளவில் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி அளிக்க நபார்டு வங்கியை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண் பெருமக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் வங்கிக் கடன் கொடுத்தல், கடன் பெறும் வழிமுறைகளைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக விருது பெறும் வங்கிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தன் பணிகளை நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கையாள்வதற்கான விருது பெறுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த முறையில் பணியாற்றி முன்மாதிரி வேளாண்மை விற்பனைக் குழுக்கள் விருதினைப் பெற்ற வேளாண்மை உற்பத்தி குழுக்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்கிறார் இறைவன். இறைவனே விரும்புகின்ற இந்த மார்கழி மாதத்தில், இக்கருத்தரங்கினை துவக்கி வைத்து மாநில கடன் திட்டத்தினை வெளியிடுவது மிகவும் பொருத்தமானதாகும். இந்த திட்டத்தின் பயனாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு இணங்க, வேளாண் பெருமக்களின் வாழ்வில் தை திங்கள் முதல் மென்மேலும் வளமும், வசந்தமும் பெருகும் என்று உறுதியாக நம்புகிறேன். வேளாண் பெருமக்கள் உட்பட இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நபார்டு வங்கி அலுவலர்களுக்கும் எனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்

ஹன்ஸ் ராஜ் வர்மா, இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் கே.பாலு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆர்.சுப்பிரமணிய குமார், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா, நபார்டு வங்கியின் சென்னை துணை பொது மேலாளர்

வி.மஷார், சென்னை நபார்டு வங்கியின் பொது மேலாளர் எஸ்.விஜயலட்சுமி, பல்லவன் கிராம வங்கியின் தலைவர் தன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நபார்டு வங்கியின் தலைமைப் பொது மேலாளர் பத்மா ரகுநாதன் வரவேற்புரை ஆற்றினார். நபார்டு வங்கியின் பொது மேலாளர் டி.ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *