சிறுகதை

விளையாட்டல்ல வாழ்க்கை | டிக்ரோஸ் (பாகம் 12)

தேசிய பேட்மிண்டன் போட்டிகள் சென்னையில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது மகளீர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் சைனா நேவல் 21–4, 21–5 என்று அர்ச்சனா கண்ணனை படு இலகுவாக ஜெயித்து கோப்பையை வென்றாள்.

மொத்த மேட்சிலும் 9 பாயின்ட்டுகள் மட்டுமே வென்றுள்ளாரே, ஏதேனும் கத்துக்குட்டி ஆட்டக்காரராக இருக்குமோ? என நீங்கள் கேட்கலாம்.

உண்மையில் செங்கல்பட்டு அருகே ஒரு சிறு கிராமத்தில் படித்து வளர்ந்த அர்சனா கல்லூரி படிப்புக்கு சென்னையில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க வந்தவுடன் தமிழக பேட்மிட்டன் தரவரிசையில் முதல் நிலைக்கு முன்னேறிவிட்டாள்.

பள்ளி நாட்களில் அப்பா கண்ணனுடனும் பிற பெரியவர்களுடனும் தினமும் விளையாடிக்கொண்டிருந்ததால் பள்ளிகளுக்கிடையே இருந்த போட்டிகளில் வென்று விடுவாள்.

பிளஸ் டூ வந்தவுடன் விளையாட்டை நிறுத்தி விடவேண்டிய கட்டாயம் வந்தது. ஆனாலும் வார இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விசேஷ பயிற்சியை தமிழக அரசு ஏற்பாடு செய்து இருந்தது.

பிளஸ் டூவில் 75 சதவிகித மார்க் மட்டுமே எடுத்து இருந்தாலும் மாணவிகள் பெரிதும் விரும்பும் மகளீர் கல்லூரிகளில் பேட்மின்டன் வீரர் என்பதால் வீடு தேடி அழைப்புகள் வந்துவிட்டது!

இறுதியில் பி.இ. படிப்பு வேண்டாம், பி.காம் படிக்கிறேன் என்று முடிவு செய்து விட்டாள். அதைக்கேட்டு அவள் பெற்றோர் வருந்தவில்லை. மாறாக உனக்கு பிடித்ததை நன்குபடி என்று கூறிவிட்டனர்.

ஆனால் பொறியியல் கல்லூரி அழைப்பை மறுக்க மாட்டாள் என்று நினைத்த பலருக்கு படு ஏமாற்றமாக இருந்தது, குறிப்பாக மணிகண்டனுக்கு!

மணியும் அர்சனாவும் போட்டிகளின் போது பேசிக் கொண்டு இருக்கும் நண்பர்கள். மணி ஆண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் மூன்று இடத்தில் மாறி மாறி இருப்பான், ராம், தொடர்ந்து சுதர்சன் மீதி இரண்டு இடங்களில் இருப்பதுதான் வாடிக்கை. கல்லூரிப் படிப்பிற்கு விண்ணப்பித்த போது மணிகண்டனுக்கு ஓர் அளவு நல்ல மதிப்பெண்ணும் பெற்றிருந்ததால் உடனே ஸ்போர்ட்ஸ் பிரிவில் தேர்வு செய்யப்பட்டு பிரபல பொறியியல் கல்லூரியில் உடனடியாக சேர்ந்துவிட்டான்.

அந்த கல்லூரியின் ஸ்போர்ட்ஸ் பொறுப்பு அலுவலர் மணியிடம் மேலும் மகளீர் பிரிவில் யாரையாவது அழைத்து வரச் சொன்ன போது, ‘சார், அர்சனா, நல்லா விளையாடுவா, ஆனா மார்க் 75சதவிகிதம் தான் என்று கேள்வி பட்டேன், இந்தாங்க அவ நம்பர்’ என கொடுத்து விட்டான்.

அர்ச்சனா வேண்டிய பிரிவில் சீட் தருவதுடன், விளையாட்டு பிரிவு மாணவி என்பதால் மிகக் குறைந்த கட்டணம் என்ற உறுதியும் தந்தார்.

மேலும் வெளியூர் ஆட்டங்களுக்கு சென்று வர கல்லூரியே செலவும் செய்யுமாம். அத்துடன் விஷேச பயிற்சிக்கு கல்லூரியிலேயே வசதியும் உண்டு, அதுவும் இலவசம்!

ஆனால் அர்சனா பி.காம், என்று முடிவு செய்து விட்டாள். அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தமிழகத்தின் தலைசிறந்த பேட்மின்டன் பயிற்சியாளர் சஞ்சீவ் சார் தான்!

அவர்தான் இவளுக்கு வாராவாரம் சிறப்பு பயிற்சி தந்து வந்தார். சென்னை கல்லூரி என்றால் தினமும் நேரு ஸ்டேடியம் சென்று பயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும், என்ற ஒரே காரணத்திற்காக பொறியியல் படிப்பையும் நிராகரித்து விட்டாள்.

மணிகண்டனுக்குத்தான் பெருத்த ஏமாற்றம்! காரணம் உடன் தினமும் விளையாட ஒரு நல்ல ஆட்டக்காரர் இருந்தால் தானே முழு திறனை காட்டி விளையாட்டுப் பயிற்சியை பெற முடியும்.

மூன்று ஆண்டுகள் படிப்பை முடித்துவிட்டவுடன் அர்சனா ஒரு வங்கியில் வேலையும் கிடைத்துவிட, சென்னையிலேயே அலுவலக நேரத்தில் கணக்கு புத்தகம், மீதி நேரத்தில் பேட்மின்டன் என்று முழுமையாக மூழ்கிவிட்டாள். மெல்ல தேசிய அளவிலும் முன்னேறினாள்.

இப்படியாக இருந்த போது பேட்மிண்டன் தர வரிசையில் மிகவும் பின்தங்கி விட்ட மணிகண்டன் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வளாக இன்டர்வியூவில் நல்ல வேலையையும் வாங்கிக் கொண்ட சந்தோசத்தில் நேரு ஸ்டேடியத்தில் தெரிந்தவர்கள் விளையாடும் ஆட்டங்களை கண்டு ரசிக்க சென்ற போது மகளீர் பகுதியில் தேசிய விளையாட்டு இறுதிப் போட்டியில் அர்சனா என்ற அறிவிப்பை கேட்டு அங்கு சென்றான்.

அங்கே அர்சனாவின் கோச் சஞ்சீவ் சார் எப்போதும் போல் மௌனமாக இருந்தார், அதற்கு நேர் எதிர்மாறாக தவித்துக்கொண்டிருந்தது அர்சனா தான்! ‘அமைதியாக இரு, போட்டிக்கு முன்பு உடலை வளைத்து நெளித்து தயாராகி விடு, மற்றபடி கவனித்து நன்கு விளையாடு’ என அறிவுரையை தந்து விட்டு சஞ்சீவ் சார் வேறு யாருடனோ பேச சென்று விட்டார்.

துணைக்கு எப்போதும் வரும் அம்மாவும் அப்பாவும் வெளியூர் சென்றுவிட்டதால் உடனிருந்து ஆறுதல் கூற யாரும் இல்லையே என கலக்கத்துடன் யோசித்துக் கொண்டிருக்கையில், ‘என்னம்மா ரெடியா?’ என கேட்டது மணிகண்டனின் அப்பா, கூட மணியும் இருந்தான்.

‘ஒரே டென்சனா இருக்கு, முதல்முறையாக தேசிய அளவில் இறுதிப் போட்டியில் ஆடுகிறேன், நல்லா விளையாட வேண்டும்’ என்று புலம்பினாள்.

‘ஏய், dont worry நீ நல்லா விளையாடுவே, ஜெயிக்கப் போற பாரு’ என்று நம்பிக்கையுடன் கூறியது மணியே தான்.

அன்றைய போட்டியில் அர்சனா விளையாட இருந்தது சைனா நேவல் என்ற சிறுமியை! 16 வயது பிரிவில் தேசிய பட்டம் வென்ற அவரே, மகளீர் சீனியர்கள் பிரிவில் முதல் முறையாக ஆட இருக்கிறாள்.

பின்னாளில் சைனா சர்வதேச தரவரிசையில் முதலிடத்தை பிடித்த போது தந்த பேட்டியில், ‘தான் முதன் முதலில் சென்னையில் வென்ற தேசிய பட்டத்தை என்றும் மறக்க முடியாது’ என கூறியது நினைவிருக்கலாம், அந்த ஆட்டம் தான் இது!

அர்சனா சற்றே உயரமாக இருந்தாலும், எதிரே சிறுமி சைனாவோ எம்பி குதித்து விளையாடி ஆட்டம் படு பரபரப்பாக இருந்ததால் ரசிகர்கள் அந்த மேட்சை பார்க்க திரளாக குழுமினர்.

11 –2 என்ற நிலையில்தான் முதல் இரண்டு நிமிட இடைவேளை அறிவிப்பு வந்தது.

அர்சனாவின் கண்களில் இதுவரை யாரும் பார்த்திராத தீர்க்கம் இருந்ததை மணி பார்த்தபடி, ‘ஏய் சூப்பரா விளையாடுற, பாயின்ட எடுக்க அந்த சின்ன பொண்ணு எப்படி ஓடுறா? என ஆச்சரியத்துடன் கேட்டபடி ஒரு வாழைப் பழத்தை உரித்து தந்தபடி, தண்ணீர் குடிக்கச் சொல்லி வற்புறுத்த, அவளும் மூச்சிரைக்க ‘மடக், மடக்’ என தண்ணீரை டி- சர்ட்டில் வழிய குடித்து விட்டு, சைனா பக்கம் முறைத்துப் பார்த்தாள்.

அவளோ சிரித்த முகத்துடன் அவளது பயிற்சியாளரிடம் பேசிக்கொண்டு இருந்தாள்.

முதல் செட்டை 21–4, இரண்டாவது செட்டில் 21–5 என்று அர்சனாவின் தேசிய விளையாட்டு கனவு முடிவுக்கு வந்தது.

அடுத்த சில மாதங்களில் அலுவல் பணி காரணமாகவும் நல்ல ஆட்டக்காரருடன் விளையாட வழியின்றி இருந்ததால் அர்சனாவின் ஆட்டம் சரிவை கண்டது.

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையும் கிடைக்க, பேட்மின்டன் கனவு ‘காலச்சக்கர சுழற்சியின் விளையாட்டால்’ சிதைந்தது.

சைனா நேவல் உலக ஆட்டகாரர்களின் பாராட்டை பெற்று பேரும் புகழும் சேர்த்து கொண்டிருக்கையில், ஒரு நாள் மணி, அலுவலகத்திற்கு வந்து அர்சனாவிடம் தனக்கும் இதே அலுவத்தில் பணி கிடைத்திருப்பதாகவும் ஆனால் சிங்கப்பூரில் தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக ஆனந்தமாக கூறினான்.

‘அட, நானும் சிங்கப்பூர் புராஜெக்டில் பணியாற்றிய வருவதால், மாற்றம் கேட்டால் தந்துவிடுவார்கள், என்ன நானும் அங்கு வரட்டுமா?’ என கேட்டாள்.

* * * 

சிங்கப்பூரில் அந்த பிரம்மாண்டமான உள்ளரங்கில் மணி சர்வ் செய்ய love all என துவக்கினான். மறுபுறம் தனக்கே உரிய தீர்க்கமான முகத்துடன் ‘பளீர்’ என ஸ்மேஸ் செய்து, one – Love என தன் பக்கம் பாயிண்டை தக்க வைத்துக் கொண்டாள்.

* * *

decrose1963@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *