சிறுகதை

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் | நஞ்சுகவுடா

இரவு….சரியாக இரண்டு மணி.

கால்..கை…உடல்…தலை என உடல் முழுவதும் மூடியுள்ள தடிப்பமான ராணுவ கம்பளி ஆடை மற்றும் ஜர்க்கின் போன்றவைகளை அணிந்த பின்பும் பனி குளிரின் தாக்கத்தை உணர்ந்த விங் கமேண்டர் ரகுவரன் புறப்படத் தயாரானார்.

அப்போது முகாமிலிருந்து முதல் போர் விமானம் கண்மூடி திறப்பதற்குள் விர்ரென்று பறந்து மறைந்தது.

விமான ஓட்டி இருக்கையில் அமர்ந்து உத்தரவுக்காக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த ரகுவரனின் எண்ணங்கள் குடும்பம், எதிரி முகாம், நமது நாடு என சுழன்று சுழன்று பின்னி பிணைந்து மனதை நிலை தடுமாற வைத்தது. ஆனாலும் சில வினாடிகளில் .மனதை ஒரு நிலை படுத்தினான் …

” கெட் ரெடி ” – தலையில் மாட்டி இருக்கும் காதுக் கருவியில் ஒலித்தது.

” எஸ்..சார் ” பதில் அளித்து விட்டு தயாரானான்.

” ரெடி.. திரீ- டூ – ஒன் -”

விமானத்தை முடக்கி, வானில் ஏறியதும் நெருப்பை கக்கியபடி , புர்ர்ர்ர்ரென வானில் இருட்டை பிளந்து மறைந்தது.

சில நிமிடங்களில் இலக்கை அடைந்து தீவிரவாதிகள் முகாம் மீது சரவெடியை போல் குண்டு மழையை கொட்டிவிட்டுபுறப்பட்ட இடத்தை நோக்கி திருப்பி விங் கமேண்டர் விரைந்தார்.

சில நொடிகளில் தாய்நாட்டை அடைந்து விடலாம் என்ற எண்ண அலைகள் காரணமாக ரகுவரனின் முகம் பிரகாசித்தது.

அடுத்த நொடி , ” டுமீல் டுமீல் ”

விமானம் தட்டு தடுமாறியது.

” குபீர்…குபீரென ” நெருப்பு பற்றி கொழுந்து விட்டு விமானத்தில் பின்புறம் எரிந்த படி பறந்தது.

தாய் நாட்டை எட்ட முடியாது என்பதை உணர்ந்த ரகுவரன், ‘ பேராசூட்டில்’ தரையிறங்க குதித்து வானில் மிதந்தார்.

கும் இருட்டு. .. கடும் நிசப்தம். .

இடை இடையில் விமானம் பறக்கும் சப்தம்.

மெதுவாக மிதந்த பேராசூட் பூமியை நெருங்கிய போது புவியீர்ப்பு விசையால் வேகமாக இறங்கியது.

கீழே என்ன இருக்கிறது ? என்பதுகூட அறிய முடியாத நிலை !

சடாரென்று ரகுவரனின் உடல் மோதி கீழே சரிந்தது…

மீண்டும் இன்னொரு, ‘ சடார்.. மோதல் ‘. , மீண்டும் சரிந்தது..

படாரென்று கால் முட்டி மோதியதில் வலியுடன் உருண்டார்.. உருண்டு சென்ற ரகுவரன் உடலை ஏதோ தடுத்து நிறுத்தியது.

தொட்டு, தடவி பார்த்தான் .

அது ஒரு பெரிய மரம்.

பாதுகாப்பான இடத்தில் இருப்பதை உணர்ந்து பெருமூச்சுடன் சாய்ந்தான்.

‘ விண்.. விண் ‘ என்று கால் வலி அதிகரிக்க, கடிகார ஓரத்தில் இருக்கும் சிறு குண்டை அழுத்தி, ஏற்பட்ட வெளிச்சத்தில் பார்த்தான்.

மணி சரியாக இரண்டேகால் !

மெதுவாக சரிவான பகுதியில் தவழ்ந்தபடி இறங்கினான்.

சுமார் 500 அடி அகல ஏரி நீர்…. சலனம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது.

மணி இரண்டரை.

ஏரியைக் கடக்க 15 நிமிடங்கள் ஆகும். காலில் காயம்…

நீந்திச் செல்வது கடினம்..

ரகுவரன் வேகமாக யோசித்தான்.

ஆங்காங்கே சிதறி கிடந்த ‘ பிசிலரி ‘ குடிநீர் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வேகமாக சேகரித்தான்.

கொஞ்சம் நஞ்சமாக இருந்த தண்ணீரை கீழே கொட்டி விட்டு, காலி பாட்டில்களின் மூடியை இறுக்கி மூடினான்.

தனது ஜர்க்கினை கழற்றி ஜிப்பை போட்டு அடி பக்கத்தில் தனது சூ கயிற்றால் இறுக்கிக் கட்டினான்.

ஏறத்தாழ முப்பதுக்கும் மேற்பட்ட காலி பாட்டில்களை அதில் போட்டு கழுத்து பகுதியில் இன்னொரு சூ கயிற்றால் மூட்டையாக கட்டினான்.

எதிரி விமானம் அவ்வப்போது வானில் பறந்தன.

விடிவதற்குள் ஏரியைக் கடக்க வேண்டும். இல்லையென்றால் எதிரியிடம் சிக்க வேண்டியதுதான் என்பதை உணர்ந்தான் ரகுவரன்.

ஏரி நீர் ஜில்லிட்டது.

பாட்டில் மூட்டையை நீரில் போட்டு அதை அணைத்தபடி, மறு கையால் தண்ணீரை பின்னுக்கு தள்ளிவிட்டு தள்ளிவிட்டு முன்னேறினான்.

ஒருவழியாகக் கரையை அடையும்பொது மணி இரண்டேமுக்காலை நெருங்கியது.

ஊர்ந்து சென்று பைன் மரத்தின் அடியில் அமர்ந்து , நிம்மதி பெருமூச்சு விட்டான்..

இங்கிருந்து பத்து நிமிடம் நடந்தால் நமது நாட்டு எல்லைக்குள் நுழைந்து விடலாம்.

அதேசமயம் ஏரியைக் கடந்த சோர்வு …கால் வலி…

உடம்பு ஓய்வைத் தேடியது.

சிறிது நேரம் கண் மூடினான்.

மணி மூன்றேகால்…

எழுந்தான்..

தரையில் கிடந்த ஆள் உயர காய்ந்தக் குச்சியை எடுத்து தரையில் ஊன்றி ஊன்றி நடந்தான்.

நடந்தான்.

சோலையைத் தாண்டியதும் நமது நாட்டு எல்லை தெரிந்தது.

ரகுவரன் முகம் மலர்ந்தான்.

சட்டைக்குள் அணிந்திருந்த வெண்ணிற உள் பனியனை கழற்றி குச்சியின் மேல்நுனியில் கட்டி நடையில் வேகத்தை கூட்டினான்.

எல்லையை நெருங்க நெருங்க கையில் இருந்த குச்சியைத் தூக்கி ஆட்டியபடியே நடந்தான்.

பைனாகுலரில் பார்த்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் , ” நம்ம வீரர் வருகிறார் ” என்றதும் மற்ற வீரர்களும் பைனாகுலரில் பார்த்து கை அசைத்தனர்.

எல்லைக்குள் நுழைந்ததும் ” நல்ல வேளை விடிவதற்குள் வந்தாய்.. இல்லையென்றால் எதிரியிடம் மாட்டியிருப்பாய்..” என்றார் இன்னொரு வீரர்.

ரகுவரனுக்கு பிசிலரி பாட்டிலில் குடிநீர் வழங்கினர்.

பாதி குடித்த விங் கமேண்டர் ரகுவரன் லேசாக சிரித்தான்.

காலி பாட்டில்களின் உதவியால் ஏரியை கடந்ததை நினைத்தான்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது நினைவிற்கு வந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *