சென்னை, மார்ச் 20–
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் மொத்த உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான, தரமான தங்குமிட வசதிகளை வழங்கவும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் அம்மாணவர்கள் பயன்பெறும் வகையில் நான்கு புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் 100 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் கட்டப்படும். இந்த விடுதிகளின் பராமரிப்புப் பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்து அவர் பேசுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனை ஏற்று, இத்துணைத் திட்டத்தின் செயல்பாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக ஒரு சிறப்புச் சட்டத்தை இந்த அரசு இயற்றும். உரிய ஆலோசனைக்குப் பின்னர், அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.