செய்திகள்

பவானிசாகர் தொகுதியில் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 1,991 மகளிருக்கு ரூ.1.54 கோடி சிறப்பு, நேரடி கடனுதவி

பவானிசாகர் தொகுதியில் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 1,991 மகளிருக்கு ரூ.1.54 கோடி சிறப்பு, நேரடி கடனுதவி

அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் வழங்கினர்

 

ஈரோடு, மே 26

பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 144 மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 1,991 பேருக்கு சிறப்பு மற்றும் நேரடி கடனுதவிகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் வழங்கினர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் நகராட்சி மீனாட்சி திருமண மண்டபம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கேஜி திருமண மண்டபம் ஆகியவற்றில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 135 மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 1,877 மகளிருக்கு ரூ.93.85 லட்சம் மதிப்பில் சிறப்பு கடனுதவியும், 9 மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 114 மகளிருக்கு ரூ.60.45 லட்சம் மதிப்பில் நேரடி கடனுதவியும் என மொத்தம் 144 மகளிர் சுய உதவிக்குழுவைச் சார்ந்த 1,991 உறுப்பினர்களுக்கு ரூ.1.54 கோடி மதிப்பில் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து, கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி பள்ளி, மகாத்மா பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம், சதுமுகை ஊராட்சி சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருமண மண்டபம், சத்தியமங்கலம் கொமராபாளையம் கொங்கு மண்டபம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி ஆகிய பகுதிகளில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் என சுமார் 3500 பேருக்கு உணவு வழங்கினார்கள்.

அம்மா இருசக்கர வாகனம்

தொடர்ந்து, சதுமுகை ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் இணைப்பு, சத்தியமங்கலம் மற்றும் விளாமுண்டி வனச்சரக அலுவலகத்திற்கு தலா ரூ.18 லட்சம் வீதம் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய கட்டிடம் திறந்து வைத்தார்கள்.

மேலும் சத்தியமங்கலம் மீனாட்சி திருமண மண்டபத்தில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 20 மகளிருக்கும், புஞ்சைபுளியம்பட்டி கே.ஜி. திருமண மண்டபத்தில் 41 மகளிருக்கும் என 61 மகளிருக்கு ரூ.15.25 லட்சம் மதிப்பில் அம்மா இருசக்கர வாகனங்களையும் வழங்கினார்கள். தொடர்ந்து, பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிகளுக்கு பேட்டரியால் இயங்கும் ரூ.52.18 லட்சம் மதிப்பிலான 21 குப்பை அள்ளும் வண்டிகளையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் நாகநாதன், சத்தியமங்கலம் வன கோட்ட மாவட்ட வன அலுவலர் துணை இயக்குநர் அருண்லால், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தலைவர் கே.கே.காளியப்பன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் புதூர்கலைமணி, கூடுதல் பதிவாளர் மேலாண்மை இயக்குனர் எஸ்.சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், மாவட்ட முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி, கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *