சென்னை, ஜன. 6–
பணி நிரந்தரம் செய்யக்கோரி இன்று 6வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா நெருக்கடி காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2300 தற்காலிக செவிலியர்களுக்கு கடந்த டிசம்பர் 31-ந்தேதியுடன் பணிக்காலம் நிறைவடைந்தது. இனிமேல் பணிநீடிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்திலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பணி நீக்கம் செய்யப்படமாட்டார்கள் என்று அரசு உறுதியளித்தது. ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் தரப்பில் இனி தற்காலிக நர்சுகளாக வேலையில் சேர மாட்டோம். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
இதையடுத்து சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஆர்.வி. நர்சுகள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று 5-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க தலைவர் ரவீந்திரநாத், டாக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 நர்சுகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். இதேபோல், செவிலியர்கள் போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த அமலடைகோ கூறுகையில், நர்சுகளின் இந்த போராட்டத்தை அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அரசு எங்களுக்கு பணியை தொடருவதற்கான அரசாணையை தரும்வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்என்று கூறினார்.
இந்நிலையில் 6-வது நாளாக இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகம் முன்பாக 200 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.