சண்டிகர், ஜன. 20–
பஞ்சாப் மாநிலம் தேராபஸியில் உள்ள திரிவேதி முகாமில் வசித்து வரும் 88 வயது முதியவர் ஒருவருக்கு லாட்டரியில் ரூ.5 கோடி பரிசு கிடைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் தேராபஸியில் உள்ள திரிவேதி முகாமில் வசித்து வருபவர் மகந்த் துவார்க்கா தாஸ். 88 வயதான இவர் 35 ஆண்டுகளுக்கு மேலாக லாட்டரி டிக்கெட் வாங்கி வருகிறார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லோஹரி மகர் சங்கராந்தி பம்பர் லாட்டரிக்கான முடிவுகளை ஜனவரி 16 ஆம் தேதி அறிவித்தது. இதில், துவார்க்கா தாஸ் முதல் பரிசான ரூ.5 கோடியை வென்றார்.
ரூ.3.5 கோடி கிடைக்கும்
பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் முடித்த பிறகு, 30 சதவீதம் வரி பிடித்தம் போக மீதம் உள்ள ரூ.3.5 கோடி அவருக்கு வழங்கப்படும் என்று உதவி லாட்டரி இயக்குநர் கரம் சிங் கூறியுள்ளார். தனக்கு கிடைத்துள்ள லக்கி பரிசு குறித்து துவார்க்கா தாஸ் கூறுகையில், நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் கடந்த 35-40 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வருகிறேன். வெற்றி பெற்ற தொகையை எனது இரண்டு மகன்களுக்கும், தன்னை பாராமரித்து வரும் முகாம் ‘தேரா’விற்கும் பகிர்ந்தளிப்பேன் என்று மகந்த் துவார்க்கா தாஸ் கூறினார்.