சிறுகதை

பக்ரீத் விருந்து | மலர்மதி

ம்முறை பக்ரீத் பண்டிகையை விமரிசையாய் கொண்டாட முடியாது என்று எண்ணும்போதே இடிந்து போனார் தாரிக்.

ஒவ்வொரு வருடமும் ஆட்டுக்கிடாவை குர்பானி கொடுத்து பிரத்தியேக மான சமையல்காரரை வரவழைத்து வீட்டின் பின்கட்டில் பிரியாணியைச் சமைத்து, உற்றார், உறவினர், நண்பர்கள், வீட்டைச் சுற்றியிருப்போர் என எல்லோருக்கும் வழங்கி மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடுவார் தாரிக்.

எல்லா ஆண்டும் அமர்க்களமாய்க் கொண்டாடிக் கொண்டிருந்த பெரு நாளை இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாட முடியாமல் தடுத்துவிட்டது கொரோனா!

தொடர்ந்து லாக்டௌன், சோஷியல் டிஸ்டென்ஸிங், ஒர்க் ஃப்ரம் ஹோம் என ஏகப்பட்ட கெடுபிடிகள்.

அது மட்டுமா?

ஒவ்வொரு பெருநாள் அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து, புத்தாடை அணிந்து, கண்களுக்கு சுருமா இட்டு, அத்தர் பூசி, குழந்தைகளுடன் ஊர் எல்லையில் இருக்கும் ஈத்கா மைதானத்தை நோக்கி நடப்பார் தாரிக்.

அலை கடலென திரண்டு வரும் மக்களோடு ஐக்கியமாகி, பெருநாளின் விசேஷ தொழுகையில் கலந்துகொண்டு, நண்பர்கள், உறவினர்களைக் கட்டித் தழுவி பெருநாள் வாழ்த்துக் கூறி மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்.

அந்த மகிழ்ச்சியும் பரவசமும் வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

இவ்வருடம் எல்லா மசூதிகளும் கோவில்களும் ஆலயங்களும் மூடப் பட்டன. எப்போது மீண்டும் திறப்பார்கள் என்று தெரியாது.

வீட்டிலேயே சமைத்து, வீட்டிலேயே தொழுகை முடித்து, வீட்டிலேயே கொண்டாட வேண்டியதாகப் போய்விட்டது.

வேறு வழியில்லை.

வீட்டிற்கு யாரையும் அழைக்க முடியாதபடி காலவரையற்ற ஊரடங்கு வேறு அமல் படுத்தியிருந்தார்கள்.

சரி, விருந்தாளிகளை அழைக்கத்தான் முடியாது. பார்சல்களாகக் கட்டி அனுப்பினால் என்ன? என்று யோசித்தார் தாரிக்.

அதற்கும் விழுந்தது தடை!

அவருடைய நண்பர்கள், உறவினர்கள் அதிகம் வசிக்கும் ஏரியாக்கள் நோய் தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்டுவிட்டன.

செய்வதறியாமல் திகைத்து நின்றார் தாரிக்.

அப்போது அவருடைய அலைபேசி அலறியது.

எடுத்து, “ஹலோ…” என்றார்.

“ஈத் முபாரக்.” என்றார் அவர் நண்பர் தியாகராஜன்.

“ரொம்ப நன்றி தியாகு.”

“விடிஞ்சா பெருநாள். இந்த தடவை என்ன அரேஞ் பண்ணியிருக்கே தாரிக்?”

“அதுதான் ஒரே குழப்பமா இருக்கு தியாகு. உன்னோட ஏரியா எப்படி?”

“அதை ஏன் கேக்கறே? ஒரு வாரமா சீல் வெச்சுட்டாங்க. யாரும் உள்ளே வரமுடியாது. அதே போல் வெளியே போகவும் முடியாது. ரொம்ப சிரமமா இருக்கு தாரிக்.”

“அடடா… வேறு வழியில்லாம வீட்டிலேயே பெருநாள் கொண்டாட வேண்டிய நிலையில இருக்கேன் தியாகு.”

“பிறருக்கு வழங்கி மகிழ்வதுதானே பெருநாளின் தத்துவம்?”

“ஆமாம் தியாகு. அதைச் செய்ய முடியாத இக்கட்டான நிலைமை ஏற்பட் டிருக்கு.”

“நான் ஒரு ஐடியா சொல்லவா?”

“சொல்லு தியாகு?”

“நம்ம ஊர் அனாதை ஆசிரமம் சீல் வைக்கப்படாத ஏரியாவில இருக்கு. இம்முறை பிரியாணி விருந்தை அனாதை குழந்தைங்களுக்கு கொடு. புண்ணியமும் கிடைக்கும்.”

“நல்ல யோசனைதான். எப்படி சாப்பாட்டைக் கொண்டு போய் அங்கே சேர்ப்பது?”

“அட, என்னப்பா நீ? ஆசிரமத்தோட நம்பரை நோட் பண்ணிக்க. அவங்க கிட்ட பேசு.” என்று ஆசிரமத்தின் ஃபோன் நம்பரைக் கொடுத்தார் தியாகராஜன்.

“சரிப்பா. பேசிப் பார்க்கிறேன்.” என்று அலைபேசியை அணைத்தார் தாரிக்.

அனாதை ஆசிரமத்தைத் தொடர்பு கொண்டபோது, தாரிக் உடைய தொலை பேசி எண், வீட்டு முகவரி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, “இப்பச் சொல்லுங்க. என்ன விஷயம்?” என்று கேட்டார் ஆசிரம நிர்வாகி.

“சார்… நாளைக்கு பக்ரீத் பண்டிகை. அதை முன்னிட்டு மதிய சாப்பாட்டை உங்க ஆசிரம குழந்தைங்களுக்கு வழங்கலாம்னு இருக்கேன். அதுக்கு என்ன வழி?”

“ஒரு நிமிஷம்…” என்றவர், டைரியை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு, “நாளைக்கு வேறு எங்கும் ஏற்பாடு இல்லை. நீங்க தாராளமா மதிய சாப்பாட்டை அனுப்பி வைக்கலாம்.” என்றார்.

“அதுதான் எப்படி அனுப்பறதுன்னு..?”

“சார், வெரி சிம்பிள். குழந்தைங்க நாற்பது பேர். ஸ்டாஃப் அஞ்சு பேர். ஆக மொத்தம் நாற்பத்தஞ்சு பேருக்கு சாப்பாடு ரெடி பண்ணி வெச்சுட்டு கூப்பிடுங்க. ஆசிரமத்துக்குச் சொந்தமான வண்டியிருக்கு. அனுப்பி வைக்கிறோம். ஏத்தி அனுப்பி டுங்க.”

“ரொம்ப தேங்க்ஸ் சார்.”

“அப்ப, நாளைக்கு உங்க சார்பா மதிய உணவு கன்ஃபார்ம்டு.”

“ஆமாம் சார்.”

“ஓ.கே.” என்று ஃபோனை வைத்தார் ஆசிரம நிர்வாகி.

மறு நாள்.

சரியாக வந்து வாசலில் நின்றது ஆசிரமத்து வேன்.

சமையல்காரரின் உதவியோடு சாப்பாட்டு பாத்திரங்களை வேனில் ஏற்றி அனுப்பிவைத்தார் தாரிக்.

தன் வாழ்நாளில் எத்தனையோ பெருநாட்களைக் கொண்டாடியிருக்கிறார் தாரிக். ஆனால் இந்த முறை அவருக்கு மனநிம்மதியும் நிறைவும் கிடைத்தது போல் வேறு எந்த பெருநாளிலும் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *