கோகிமா, மார்ச் 1–
நாகாலாந்தின் 4 தொகுதிகளில், தலா ஒரு வாக்குச் சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 16-ஆம் தேதி திரிபுராவிலும், மேகாலயா நாகலாந்திற்கு 27-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு, இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு
இந்நிலையில் தேர்தல் பொது பார்வையாளர்கள் அளித்த அறிக்கையின்படி, நாகாலாந்து சட்டசபை தொகுதிகளில் உள்ள நான்கு வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அந்த வகையில் ஜூன்ஹிபோட்டா சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள நியூ காலனி, சனீஷ் தொகுதியின் கீழ் பாங்க்ரி வீ, டிஷீட் சட்டமன்ற தொகுதியின் கீழ் ஜபோகோ கிராம வாக்குச்சாவடி மற்றும் தேனாக்கியூ சட்டமன்ற தொகுதி என் கீழ் பாஸ்தோ கிழக்கு பகுதி போன்றவற்றில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.