சிறுகதை

நன்றி – ராஜா செல்லமுத்து

செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது நம் மனதுக்கும் சந்தோஷத்திற்கும் ஒரு இணைப்பு பாலம்.

பேசும் மனிதர்களிடம் கிடைக்காத சந்தோஷம். ஒரு உறவு – ஒரு பற்று– ஒரு அன்பு–செல்ல பிராணிகளிடம் எளிதாகக் கிடைக்கும். அதுமட்டுமல்ல செல்லப் பிராணிகள் வீட்டில் இருந்தாலே அது ஏதாவது நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் என்பது செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு பரிச்சயம்.

ஹேமா வாடகை வீட்டில் குடி இருந்தாலும் செல்லப் பிராணிகளை வளர்த்து வந்தாள். அவள் பவி என்ற ஒரு பெண் நாயை வளர்த்து வந்தாள். வீடு முழுவதும் வளைய வளைய வருவதும். வீட்டிற்கு வரும் புதியவர்களை பார்த்தால் குரைப்பது என்று ஹேமாவின் வீட்டை மட்டுமல்ல, ஹேமாவிற்கு வாடகைக்கு வீடு விட்ட ரவியின் வீட்டையும் சேர்த்து காவல் காத்தது பவி.

ஆனால் இது தெரியாத வீட்டுக்காரர் ரவி திட்டிக்கொண்டே இருப்பார்.

ஏன்மா வாடகைக்கு குடியிருக்காங்க. நாய் எதுக்கு? அது கத்திக்கத்தி மத்த மனுசங்கள தூங்க விட மாட்டேங்குது . ஒரே தொந்தரவா இருக்கு. நீங்க நாய் வச்சிருக்கிறது தெரிஞ்சா நான் கண்டிப்பா உங்களுக்கு வீடு கொடுத்திருக்க மாட்டேன் என்று வீட்டுக்காரர் ரவி ஹேமாவை திட்டினார்.

சார் எங்க வீட்டில ஆம்பளைங்க யாரும் இல்ல. என் தம்பி வெளி நாட்டுக்கு போயிட்டான். எங்க அப்பா இறந்துட்டாரு. அம்மா நான் அக்கா .நான் மட்டும் தான் வீட்டில. அதுவும் தனியா இருக்கோம். எங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேணும் இல்ல. அதுக்காக தான் இத வளர்க்கிறோம் என்று ஹேமா தன் பக்கம் உள்ள நியாயத்தை சொன்னாள்.

அது சரி மா அது உங்க சொந்த வீடா இருந்தா பரவால்ல. வாடகை வீட்டில் வைத்து வளர்க்க அது எங்களுக்கும் ரொம்ப தொந்தரவாக இருக்கு என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார் ரவி.

சார் நானும் காலையில வீட்டை விட்டு வெளியே போனா நைட்டு தான் வருவேன். வீட்டில் அம்மா அக்கா மட்டும் தனியா இருப்பாங்க. அவங்க நீங்க பாதுகாப்பு கொடுக்க முடியுமா? இல்ல மதிய நேரம் அவங்க அசந்து தூங்கினாக் கூட இந்த நாய் குறைச்சு யாராவது வந்தால் காட்டிக் கொடுக்கும். அதுக்காக தான் சார் இது வச்சிருக்கோம். மத்தபடி நாய் காலையில பத்து லிட்டர். சாயங்காலம் 10 லிட்டர் பால் குடுக்குதா என்ன? ஒரு பாதுகாப்பு தான் சார் அதைத்தாண்டி சின்ன பிள்ளைங்க இல்லாத எங்க வீட்டில இந்த பவி ஒரு குழந்தை மாதிரி இருக்கு. அத பாக்கும் போது அது பேசும்போதும். அது சாப்பிடும் போதும் எங்களுக்கு ஒரு விதமான சந்தோஷம் ஏற்படுது . அது அனுபவிச்சா தான் உங்களுக்கு தெரியும் .நான் சொன்னா தெரியாது என்று ரவிக்கு விளக்கினாள் ஹேமா

அது இருக்கட்டும் நீ என்ன இருந்தாலும் வாடகை வீட்டுல நீங்க நாய் இருக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. நீங்க வீட்டை காலி பண்ணலாம் என்று பிடிவாதமாக சொன்னார் ரவி .

சரி சார் நான் காலி பண்ணிடலாம் என்றாள் ஹேமா.

நீங்க இந்த நாய விட்டுட்டு இருக்கிறதா இருந்தா நீங்க தாராளமா இருக்கலாம். நாய் உன் கூட தான் இருக்கும்னா நீங்க வீட்ட காலி பண்ணலாம் என்று மறுபடியும் அதையே சொன்னார் ரவி.

நாய் எங்க கூட தான் இருக்கும். அதை விட்டுட்டு நாங்க இருக்க முடியாது. நான் வீட்டை காலி பண்ணி இருக்கறோம் என்று ஹேமா சொன்னாள்.

நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது பவி. என்கிற நன்றியுள்ள நாய் அவர்கள் தன்னைத் தான் பேசுகிறார்கள், தன்னைப் பற்றித்தான் புகார் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல் ரவியிடம் போய் வாலை ஆட்டிக்கொண்டு நின்றது. அதை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை.

இங்க வா என்று ஹேமா கூப்பிட்டாள். அது வர மறுத்துரவின் காலைச் சுற்றியது அதைக் கண்டு கொள்ளாத ரவி அவர்களை வீட்டை காலி செய்துவிட்டுப் போங்கள்என்று அதையே சொல்லிக் கொண்டிருந்தார் .ஒரு வாரத்திற்குள் காலி பண்ணுவதாக கேட்டார் ஹேமா.

சரி என்றார் ரவி

நாட்கள் நகர்ந்தன .ஹேமா வீட்டைக் காலி செய்வதற்கு இரண்டு நாள் இருக்கும் இடைவெளியில்

ஓரிரவு ரவியின் வீட்டிற்குள் திருடர்கள் போக பார்த்தார்கள்.

எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் பவி விழித்துக்கொண்டது. அந்தத் திருடர்களைப் பார்த்து குரைத்து அவருடன் சண்டை போட்டது. எப்படியும் ரவியின் வீட்டுக்குள் நுழைந்து திருட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த திருடர்களுடன் மூர்க்கமாக கத்திக் குரைத்துச் சண்டை போட்டது.

அப்போது ரவிக்கு காேபம் கிளம்பியது . மறுபடியும் இந்த நாய் நம்ம தூங்கவிடாம கத்திக்கிட்டு இருக்கு என்று வெளியே வந்து பார்த்தபோது தான் அவருக்கு திடுக்கென்றது.

வந்த திருடர்கள் தன் வீட்டில் தான் திருட வந்தார்கள்; அவர்களைத்தான் குரைத்து அந்த நாய் விரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்த ரவி உடனே போலீசுக்கு தகவல் சொன்னார். நிலைமையை தெரிந்துகொண்ட திருடர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.

அத்தனை திருடர்களையும் துரத்தி விட்ட சந்தோஷத்தில் ரவியிடம் வந்து வாலை வாலை ஆட்டி நின்றது பவி.

அவருக்கு என்னவோ போல் ஆனது.

இந்த பவி மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நம்மள கொன்னு கூட போட்டுட்டு திருடங்க திருடிட்டு போயிருப்பாங்க .பவி தான் நம்ம காப்பாத்தி இருக்கு என்று ரவி குடும்பத்தார்கள் ஒருசேர பவியைக் கட்டிப்பிடித்து அதற்கு சோறு கொடுத்தார்கள்.

ஏன் நாய் குரைக்கிறது என்று வெளியே வந்த ஹேமாவுக்கு விவரத்தையும் சொன்னார்கள்.

ஹேமா நாங்கதான் பவிய தப்பா புரிஞ்சுகிட்டோம். வீட்டுல ஒரு செல்லப்பிராணி இருக்கிறது நல்லது தான். அது இருந்ததனால் தான் நாங்க தப்பிச்சோம். இல்லன்னா என்ன நடந்திருக்கும்னு எங்களுக்கு தெரியாது என்று ரவி சொல்லி

நீங்க வீட்ட காலி பண்ண வேண்டாம் .இங்கேயே இருங்க என்றும் சொன்னார்.

அப்பொழுதும் ரவியின் காலடியிலேயே இருந்தது பவி.

முதன்முறையாக பவியின் தலையை, தொட்டு தடவி அதற்கு உணவு கொடுத்தார் ரவி.

அது நன்றியுடன் வாலை ஆட்டிக் கொண்டு நின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *