செய்திகள்

சென்னையில் பெய்த திடீர் கன மழை: மின்சாரம் தாக்கியதில் 3 பேர் பரிதாப பலி

சென்னை, டிச. 31–

சென்னையில் நேற்று திடீரென கன மழை பெய்தநிலையில், மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

வானிலை முன்னறிவிப்பில் கணிக்கப்படாதபடி, சென்னையில் நேற்று மதியம் மற்றும் பிற்பகலில் திடீர் என கனமழை பெய்ய தொடங்கியது. 4 1/2 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாமல் பெய்த கனமழையால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி இருந்தது. இரவு 7 மணி வரையில் நீடித்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சுரங்க நடைபாதைகளில் தண்ணீர் தேங்கியது.

எழும்பூர் கெங்கு சுரங்கப்பாதை, தியாகராயர் நகர் மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, துறைமுகம் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஆகியன நீர் தேங்கியதால் மூடப்பட்டன. இதனால் அந்த வழித்தடங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சென்னையின் அனைத்து இடங்களிலும் பெருவெள்ளம் தேங்கி இருந்ததால், கடும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, நிலப்பகுதியை நோக்கி நகர்ந்ததே, நேற்றைய சென்னை திடீர் மழைக்கு காரணம் என்று வானிலை மையம் தெரிவித்தது.

மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

இந்நிலையில், மயிலாப்பூரில் சாலையில் தேங்கியிருந்த நீரில் மின்சாரம் கசிந்ததால் 13 வயது சிறுவன் இலட்சுமணன் உயிரிழந்தார். அதேபோல், புளியந்தோப்பு பகுதியில், இரண்டாவது மாடியில் குடியிருந்த பெண் மீனா, கடைக்குச் செல்வதற்காக மழைநீரில் நடந்துசென்ற போது மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஓட்டேரி பகுதியில் சாலையில் நடந்துசென்ற மூதாட்டி ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துபோனார்.

நேற்று முற்பகல் 11.45 மணிக்கு வெளியிடப்பட்ட அன்றாட முன்னறிவிப்பில், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால், சென்னையில் இலேசான, மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், திடீர் மழை பெய்து சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த நகரையே பெரும் அவதிக்கு உள்ளாக்கிவிட்டது.

பல இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் எல்லாம் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் உட்காரும் பெஞ்சுகளில் ஏறி நின்று கொண்டனர். இதன் காரணமாக பல இடங்களில் பேருந்துகள் தாமதமாக வந்தன, இன்னும் சில இடங்களில் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அலுவலகம் மற்றும் வெளியே சென்ற மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாற்று வழியாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

அனைத்து மக்களும் மெட்ரோ ரயில் பக்கம் திரும்பியதால்,அங்கேயும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதனால் பயணிகள் வீடு திரும்புவதற்கு வசதியாக மெட்ரோ ரயில்கள் இரவு 12 மணிவரை இயக்கப்பட்டன. வழக்கமாக இரவு 11 மணி வரையுடன் முடியும் மெட்ரோ ரயில் சேவை, மழை காரணமாக பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இரவு 12 மணிவரை இயக்கப்பட்டன. மக்கள் வரிசையில் காத்திருந்து மெட்ரோ ரயிலில் பயணித்து தங்கள் இருப்பிடங்களுக்கு சென்றனர்

மழை அளவு

நேற்று இரவு 7.45 மணி நிலவரப்படி, சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகர் வட்டாரத்தில் 19.8 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 15.9 செமீ, நந்தனம் பகுதியில் 15.2 செமீ, அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 12.1 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் 10.85 செமீ, மீனம்பாக்கத்தில் 10.8 செ.மீ. என மழைப்பொழிவு பதிவாகியிருந்தது.

இந்நிலையில் இன்று, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *