சிறுகதை

சில புல்லுறுவிகள் | கௌசல்யா ரங்கநாதன்

அவன் சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டான் தன் மகன் படித்த பள்ளி நிர்வாகி குமார் தன் அலுவலகத்துக்கு வருவார் என்று.

அவன் 15 நாட்கள் முன்புதான் தன் மகன் இதுவரை படித்துக் கொண்டிருந்த பள்ளியிலிருந்து டி.ஸி. வாங்கி திருவாளர் குமார் நிர்வாகியாய் இருக்கும் பள்ளியில் அதுவும் மிகுந்த பிராயசைக்கு பின் சேர்த்திருந்தான்.

ஆனால் அந்த புதுப் பள்ளியில் சேர்த்த 15 நாட்களுக்குள்ளேயே ஏதேதோ பொய்யான , அதாவது தான் பணி புரியும் அலுவலகம் தனக்கு திருச்சி கிளைக்கு மாற்றல் கொடுத்து விட்டது. .அதனால் டி.ஸியை கனத்த மனதுடன் வாங்க வேண்டியிருக்கிறது என்றெல்லாம் சொல்லி……எப்படியோ டி.ஸியை திரும்ப வாங்கி விட்டான்.

உண்மையான காரணம் என்னவென எப்படி குமாரிடமே சொல்ல முடியும் என்பதால் ஏதேதோ சொல்ல வேண்டியாதாயிற்று என்பதே நிதர்சனம்.

ஊம்.. அவன் நினைத்து பார்க்கிறான். எவ்வளவெல்லாம் சிரமப்பட்டு திருவாளர் குமார் அவர்களை பற்றி பலரிடமும் விசரித்து இந்தக் காலத்திலும் இப்படியொரு தன்னலம் கருதாத மனிதனா? அதுவும் கல்வி சேவையில் அர்ப்பணிப்புடன் என்றெல்லாம் வியந்து அந்த பள்ளியில் தன் மகனுக்கு அட்மிஷன் கிடைக்குமா? யாரை அணுகி கேட்பது? தனக்கு பண பலமும் சிபாரிசும் செய்ய ஆட்கள் பலமும் இல்லையே என்ற கவலையுடனேயே

‘‘சார் எதற்கும் அந்த பள்ளி வளாகத்தினுள் நுழைந்து விசாரித்துதான் பார்ப்போமே , ஆனால் உள்ளே விடுவார்களா? அப்படியே விட்டாலும் யாரைப்போய் விசாரிப்பது… அது மட்டுமல்ல.. தனக்கு சேர்ந்தார்ப்போல நாலு வார்த்தைகள் கோர்வையாய், தான் சொல்ல வந்த விஷயத்தை பளிச்சென நறுக் தெறித்தாற்போல பேசவும் முடியாதே என்று தயங்கித் தயங்கி, பிறகு ஒரு நாள் அந்த வளாகத்து வாட்ச்மெனை மிகுந்த தயக்கத்துடன் விசாரிக்க அவன் ,

“ஐயா.. உள்ள போய் (ஒரு பெயரை குறிப்பிட்டு) விசாரிங்க. அவர் எல்ப்(ஹெல்ப்) பண்ணுவாருங்க” என்ற போது அவன் தன் கண்களையே நம்ப முடியாமல் அதுவும் அட்மிஷன் நேரத்திலா இப்படி கனிவான பேச்சு .. சார் போய்த்தான் பார்ப்போமே என்று உள்ளே போய் ஒரு சில நொடிகளே காத்திருந்து திருவாளர் குமாரை பார்த்தான்.

அவ்வளவு பெரிய மனிதர் படு சிம்பிளாய் இருந்தார். சாதாரண சட்டை, மற்றும் வேட்டி.. ஒரு மின் விசிறி மட்டுமே.

அந்த அறையில் அவர் தலைக்கு மேல் அண்ணல் காந்தி அடிகள் படம், அதை தொடர்ந்து பண்டித ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத் அடுத்தடுத்து ராஜாஜி, கர்ம வீரர் காமராஜர் தவிர பள்ளியில் இதற்கு முன் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் திருவுருவ படங்கள் வாரிசையாய் ஒரு ஒழுங்கு முறையுடன் மாட்டப்பட்டிருந்தது.

அன்னார் படங்களுக்கு மேல் ஒரு மின் குத்து விளக்கு ஒளியை பாய்ச்சிக் கொண்டிருந்தது. எல்லா பெருந்தகைகள் படங்கள் மேலும் அன்று பறித்து

சரமாய் கட்டப்பட்ட பூமாலைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஊதுபத்தியின் நறுமணம் அறை முழுவதும் நிரம்பி வழிந்தது.

அவனுக்கு லேசாய் உடலில் நடுக்கம் கண்டது பார்த்து அங்கு வீற்றிந்திருந்த பெரியவர் அகவை 70 க்கு மேல் இருக்கலாம்… அவர்தான் குமார் என்று பிறகு தொரிய வந்தது அவனுக்கு கை கூப்பி தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு,

“நான்தான் குமார். இந்த பள்ளி நிர்வாகி.. என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்கனு தொரிஞ்சுக்கலாமா? பை தி பை உங்க குட் நேம் பிளீஸ்” என்றார் புன்னகையுடன்.

அவனுக்கு வியர்த்து போயிற்று அவர் அணுகுமுறை பார்த்து.

மெல்லத் தயங்கி தான் வந்த விஷயத்தைச் சொல்ல,

“பூ இவ்வளவுதானா? இதற்கா இவ்வளவு தயங்கினீங்க?

பையன் இப்ப என்ன படிக்கிறான்? எந்த ஸ்கூல்? ஏன் இங்கே கொண்டு வந்து சேர்க்க நினைக்கிறீங்கனுல்லாம் எதுவும் எனக்கு தேவையில்லை.

விண்ணப்ப படிவம் பூர்த்தி செஞ்சு கொடுத்துட்டு

பீஸ் கட்டிட்டு போங்க? என்ற போது மறுபடி அவன் தயக்கமுடனே

“எவ்வளவு பீஸ்?என்றான்.

அப்போது அவர் சொன்ன தொகை அவனை மேலும் வியப்புக்குள்ளாக்கியது. ஏன் எனில் அது மிக மிகக் குறைந்த அவன் நினைத்தே பார்க்க முடியாத ஒரு தொகை.

இது பர்ஸ்ட் டேமுக்கா? அப்புறம் எவ்வளவு ஒவ்வொரு டேர்முக்கும் கட்டணும் என்றவனிடம் “மொத்த தொகையும் இவ்வளவுதான்..சார்..இன்னொண்ணு..இங்கே மதிய உணவும் இலவசம்” என்றார் குமார்.

இவர் என்ன பைத்தியக்காரரா? அல்லது இந்த சீட்டில் வேறு யாராவது ஏமாற்று பேர்வழிகள் அமர்ந்துகொண்டு என்றெல்லாம் அவன் சிந்தை ஓடியது.

ஆனால் அவர் அவனை யோசிக்க விடாமல் “சரி போய் வாங்க” என்றார். நிசமாலுமே இப்படியொரு பள்ளியா? அதுவும் கல்வி இன்றைக்கு வணிகமயமாகிவிட்ட போது என்ற நினைப்பே அவனுள் மேலோங்கி நின்றது.

அவன் பள்ளி பருவம் நினைவுக்கு வந்தது.. அது ஒரு 1950 களின் ஆரம்ப காலம். தஞ்சை மாவட்டத்து திருவிடைமருதூரில் அவன் தந்தை ஒரு டாக்டர்.

டாக்டர் என்றால் இன்றைய டாக்டர்கள் போல கால் நகம் பெயர்ந்தாலும் உடனடியாய் ஸ்கேன் எடு, எக்ஸ்ரே எடு, பிளட் டெஸ்ட் எடு என்றெல்லாம் சொல்லாத கால கட்டம். பணப்புழக்கம் அதிகமில்லாத கால கட்டம் அது.

கூடியவரை எந்த வியாதியானாலும் வீட்டிலேயே பாட்டி வைத்தியம்தான். அதையும் மீறி ஏதாவதொன்றென்றால் அப்பாவை தேடி வருவார்கள். அவரும் மருந்து கொடுத்து மூணு வேளை சாப்பிடு என்பார்.

உயிர் காக்கும் வைத்தியத்துக்கு பணம் வாங்குவார்களா என்பார்.ஓரளவு வசதியான குடும்பம். ஊரில் நல்ல செல்வாக்கு. அதை மட்டும் சம்பாரித்து வைத்திருந்தார்.

அங்கு மஹாலிங்க சுவாமி கோவிலுக்கு போகும் வழியில் ஒரு ஆரம்ப பள்ளி இருந்தது. ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை அங்கு செயல்பட்டு வந்தது. பக்கத்து பக்கத்து ஊர்களான ஆடுதுரை, திருபுவனம், நடுவக்கரை, இந்த பக்கம் திருவிசனல்லூர், வேப்பத்தூர் ஆகிய சிற்றூர்களிருந்து கால்நடையாய் செருப்பு கூட அணியாமல் வந்து படித்தவர்கள் ஏராளம்.

தமிழ் வழி கல்விதான்.

ஐந்து முடித்ததும் திருவாவடுதுரை ஆதீனகர்தர் நடத்தும் உயர் நிலைப்பள்ளியில், புகைவண்டி நிலயம் அருகில் இன்றும் செயல் பட்டு வரும் பள்ளிக்கு பழைய பள்ளியிலிருந்து ஆறாம் வகுப்புக்கு அனுப்பபடுவார்கள். ஆறாம் வகுப்பில்தான் ஆங்கிலம் தொடங்கும். அப்போது பள்ளி இறுதி வகுப்பென்பது 11 வருடங்களை உள்ளடக்கியது. அதில் தான் அவன் படித்தான்.

அனேக வகுப்புகளில் உட்கார பெஞ்ச் கூட இருக்காது. தரையில் உட்கார்ந்துதான் படிக்க வேண்டும். நாமினல் பீஸும் உண்டு. ஆனால் இன்று ஏகப்பட்ட பள்ளிகள்…மெட்ரிக், ஸீ.பீ.ஏஸ்.ஸீ  லொட்டு லொசுக்கென்று மூலைக்கு மூலை.

இந்த பள்ளியில் கல்வி மிக நன்றாய் இருக்கும் என்று மிகுந்த சிரமத்துக்கிடையே கொண்டு சேர்த்தால் பிறகு ஏன் அங்கு சேர்தோம் என்று புலம்பியாவாறு அடுத்த கல்வியாண்டில் வேறு ஒரு பள்ளியை முற்றுகையிடுவது.. அதற்கு அமைச்சர்கள் வரை சிபாரிசுக்கு போவது… பிறகு லட்சங்களில் கொட்டுவது,

டியூஷன் என்று வேறு சொல்லி பணம் கறப்பது வாடிக்கையாகிவிட்ட சூழலில் தன் மகன் முன்பு படித்த பள்ளியில் கல்வி திறம் நன்றாய் இல்லையென யாரோ முணு முணுக்க அவனும் தன் மகனை வேறு பள்ளியில் சேர்த்தாக வேண்டும் என்ற மனோ நிலைக்கு தள்ள பட்டான்.

ஆனால் ஒரு மிகச்சிறிய நிறுவனத்தில் குறைவான ஊதியம் வாங்கிக் கொண்டு வாய்க்கும் கைக்கும் பத்தாத நிலையில் இருக்கையில் வேறு ஒரு தரமான பள்ளி என்று சொல்லப்படும் பள்ளியை எப்படி நாட முடியும்.

அப்போதுதான் அவனுக்கு திருவாளர் குமார் நடத்தும் பள்ளி பற்றி கேள்விப்பட்டு அங்கு வந்து குமாரை பார்த்து அட்மிஷன் வாங்கிய பிறகும் அவன் வியப்பு அடங்கவில்லை.

இது நிசம்தானா என்று தன்னையே கிள்ளி பார்த்துக் கொண்டான். பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்த பிறகும் அவன் பள்ளி பற்றி அங்கு அட்மிஷனுக்கு வந்திருந்தவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அனைவருமே இது ஒரு மிகச்சிறந்த தரமான பள்ளிதான் என்று ஒருமித்த குரலில் கூறினார்கள்.

அதுமட்டுமல்ல! திருவாளர் குமார் பரம்பரை செல்வந்தர் என்றும் அவர் முன்னோர்கள் வறிய நிலையில் உள்ளவர்களுக்கு வாரி, வாரி கொடுத்தவர்கள் என்றும் ஆனால் குமார் மட்டும் இப்படி பணமோ, பொருள்களாகவோ கொடுத்து அப்போதைக்கு ஏழைகளின் பசி தீர்க்க விரும்பவில்லை என்றும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டுமானால் அவர்களின் வாரிசுகளுக்கு தரமான அதே சமயம் மிக குறைவான கட்டணத்தில் கல்வியை கொடுக்க வேண்டும் கூடவே மதிய உணவையும் கொடுக்க வேண்டும் என்று நினைத்து செயல் பட்டார்.

அள்ள, அள்ளக்குறையாத செல்வம் இருக்கும்போது ஏன் அதை புதையலை பூதம் காப்பது போல் காக்க வேண்டும். புண்ணியம் செய்வோம்.. அதுவும் நல்ல படிப்பறிவை கொடுத்து என்றெண்ணியதால் குமாருக்கு மிகப்பிடித்த பாடல் வரிகளே “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், அன்னவாயினும் புண்ணியம் கோடி, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”.

ஆனால் பிறகு என்னவோ அந்த பள்ளியிலிருந்து அவன் மகனுக்கான அட்மிஷன் லெட்டர் வரவே இல்லை என்ற போது அவன் நொந்து நூலாகி போனான்.

சே.. என்ன மனிதர்கள்!

வெற்று சம்பிரதாயத்துக்காக அவனை அன்று அந்த பள்ளி நிர்வாகி உள்ளே அழைத்து தேன் தடவிய வார்த்தைகளால் பேசிவிட்டு யார் அதிக டோனேஷன் கொடுப்பார்கள் என்றெல்லாம் நினைத்து செயல்படுகிறாரோ?

இவரை நம்பி தன் மகன் முன்பு படித்த பள்ளியிலிருந்து டி.சியை வேறு வாங்கியாகி விட்டது. மறுபடி இன்னொரு பள்ளி நோக்கி எப்படி படையெடுக்க முடியும்? எப்படி, யாரை பார்த்து அட்மிஷன் வாங்க முடியும்” என்றே நினைத்து ராத்தூக்கம் தொலைத்திருந்த வேளையில் அன்று காலையில் அவன் மகனுக்கான அட்மிஷன் கடிதம் வந்ததும் அவன் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தான்.

அன்றே அந்த பள்ளிக்கு தன் மகனை அழைத்துச்சென்று சேர்க்கையை முடித்து திருவாளர் குமாரையும் அந்த அட்மிஷன் நேரத்திலும் சுலபமாய் பார்த்து நன்றி சொன்ன போது “இதுக்கு நன்றியெல்லாம் ஏன் சொல்றீங்க? விஷ் யூ ஆல் தி பெஸ்ட்” என்ற போது அவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

இப்படி ஒரு வாரம் போல பள்ளிக்கு ஆர்வத்துடன் சென்று வந்த அவன் மகன் இப்போதெல்லாம்…. சோர்வுடனே காணப்பட்டான்.

ஒரு சில நாட்கள் வரை அவன் தன் மகன் பள்ளிக்கு சென்று வருவதால் அயர்வுடன் காணப்படுகிறான் போலும் என்றே நினைத்திருந்தான்.

ஆனால், எப்போதும் மாலை வீடு திரும்பியதும், பால் மற்றும் ஸ்னாக்ஸ் முடித்து வெளியில் தன் சகாக்களுடன் விளையாடச் செல்பவன் இப்போதெல்லாம் மாலை வேளைகளில் வெளியே போவதையே தவிர்த்ததோடல்லாமல் எங்கோ வெறித்து பார்த்தவாறோ, அல்லது அந்த மாலை வேளைகளில் தூங்கிக்கொண்டோ இருந்தான்.

“என்னங்க நம்ம பிள்ளையாண்டான் இப்படி இருக்கிறவனில்லை.

ஏதோ முனி, கினி அடிச்சுருச்சோ, ஸ்கூல் விட்டு வரப்ப. எதற்கும் மாரியம்மன் கோவில் பூசாரிகிட்ட வேப்பிலை அடிச்சு பார்த்தா என்ன என்று அவன் மனைவி சொன்ன போது அவனுக்கு சிரிப்பு வந்தாலும் அவள் திருப்திக்காக சரி என்றான்.

ஆனால் பூசாரிவேப்பிலை அடித்தும் தர்காவுக்கு போய் ஊதி விட்ட பிறகும் எதுவுமே முன்னேற்றம் தெரியாததால்

“என்னங்க பண்ணலாம்? என்ற போது

“உன் மகன்கிட்டயே கேளேன் என்னடாச்சு உனக்குனு” என்ற போது அவன் மனைவி “கேட்காம இருப்பேனுங்களா? ஒண்ணுமில்லைன்றான்.

ஆனா எனக்கு பயமாயிருக்கு” என்றாள்.

அவனை ஏன் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் கொண்டு போய் காண்பிக்ககூடாது ? அப்படியெனில் எந்த டாக்டரை போய் பார்ப்பது? அவர் என்ன சொல்வாரோ? எத்தனை சிட்டிங்குகள் வரச்சொல்வாரோ? ஏன் தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது என்றெண்ணியாவாறு இருக்கையில் தான் அவன் தன் மகனுடன் தன் இன்னொரு சகா வீட்டுக்கு, அந்த சகா அழைப்பின் பெயரில், அன்னார் மகனின் பிறந்த நாள் விழாவுக்கு போனான்.

அந்த சகாவுடன் அவன் சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்த போது தன் மகன் பிரச்சினையை பற்றி பகிர்ந்து கொள்ள அந்த சகா சொன்னான் :

“இது சிம்பிளான ஜுஜுபீ மாட்டர். ஆமாம்பா.. உன் மகன் இதுவரை படித்த பள்ளியிலிருந்து வேற புது பள்ளியில் சேர்ந்திருக்கிறான். தன் பழைய சகாக்களை விட்டுட்டு, அந்த பழைய சூழலை விட்டு.. இது மாற கொஞ்ச நாட்களாகும்..

நாமே கூட ஒரு வாடகை வீட்டில் சில வருடங்கள் இருந்துட்டு சந்தர்ப்ப சூழல் காரணமாய் வேற இடம் போனாலோ, இல்லை சொந்த ஊரை விட்டு வேற ஊருக்கு மாற்றலில் போனாலோ அந்த சூழலுக்கு நம்மை அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ள கொஞ்ச காலமாகும்ல. அப்படித்தான்பா உன் மகனுக்கும் இருக்கலாம்..அதாவது கூடப் படிச்ச ஃபிரெண்ட்ஸை விட்டுட்டு வரமேனு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் அவன் மகனும் வேறு சில குழந்தைகள் அந்த பங்கஷனுக்கு வந்தவர்களுடன் அந்த மாலைப் பொழுதினில் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஒருக்கணம் அங்கு கவனம் செலுத்தியபோதுதான் ஓரளவுக்கு அவன் மகனின் பிரச்சினைக்கான மூல காரணம் இப்படியும் இருக்குமோ என தோன்றியது..

மனம் சொல்லொணா வேதனையில் ஆழ்ந்தது.

ஒட்டுமொத்த கல்வியுமே வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில் நிசமான சேவை மனப்பான்மையுடன் தன்னலம் கருதாமல், சாதி,மதம், இருப்பவர் – இல்லாதவரென பாராமல் கல்வியறிவூட்ட நினைப்பவருக்கு அவர் அருகில் உள்ளவர்களாலயே பிரச்சினை என்றால்..இதுகூட போட்டி கல்வி நிறுவனங்களின் செயல்பாடு காரணமாக இருக்குமோ என்றும் தோன்றியது..

அது என்ன விளையாட்டு தெரியுமா? அவன் மகன் ஒரு பள்ளி ஆசிரியராகவும், மற்ற குழந்தைகள் ஸ்டூடண்டுகளாகவும் பாவித்து விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்து மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானான் அவன்.

அதாவது அவன் மகன், வகுப்பு ஆசிரியராய் நடிப்பவன், தன் சகாக்களிடம் கேட்கிறான்.

“டேய் உன் பெயர் என்ன?

இதுக்கு முன்னால எந்த ஸ்கூல்ல படிச்சே?

ஏன் அங்கிருந்து இங்கே வந்தே?

பாவம்டா நீங்க.. போயும் போயும் இந்த ஸ்கூல்தானாடா கிடைச்சுது உனக்கு, வேற நல்ல ஸ்கூல் எவ்வளவோ இருக்கச்சொல்ல. உங்க தலைவிதி அவ்வளவுதான்.. முடிஞ்சா உங்கப்பா கிட்ட சொல்லி வேற நல்ல பள்ளியாய் பார்த்து சேரு “என்று.. அவனுக்கு எல்லாமே புரிந்து போயிற்று தன் மகன் சோர்வுக்கான காரணம்..

ஒன்றுமறியாத பிஞ்சு குழந்தைகள் மனதில் இப்படியா நஞ்சை விதைப்பது, அதுவும் அங்கேயே பணி புரியும் ஒரு ஆசிரியர். இதைப்போய் குமாரிடம் சொன்னாலும் நம்புவாரா?

அப்படியே நம்பி, அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தாலும் தன் பிள்ளை மனதில் ஆழப்பதிந்திருக்கும் அந்த தீய எண்ணத்தை எப்படி அகற்றுவது என்றெல்லாம் குழம்பித் தவித்தான்.

குமாரை சந்தித்தான்.

“ஐயா இதுதான் நடந்தது ’’என்று சொல்லிவிட்டான்.

சில புல்லுறுவிகளின் கெடுமதி கண்டு குமார் மிகுந்த மன வேதனைக்கு தள்ளப்பட்டார்.

எல்லாம் ஒரு நொடிதான். தீர்க்கமான முடிவுக்கு வந்தார். திடமான நடவடிக்கை எடுத்தார்.

தன் பள்ளியைப் பற்றி தன் வகுப்பு மாணவர்களிடமே தரக்குறைவான கருத்துக்களைச் சொன்ன ஆசிரியரை வேலையை விட்டு நீக்கினார். அந்த வகுப்புக்கு குமாரே ஆசிரியரானார்.

இப்போதெல்லாம் மகன் மிகுந்த ஆர்வத்துடன் அந்த புதிய பள்ளிக்கு சென்று வருகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *