செய்திகள் வர்த்தகம்

‘கொரோனா’ சிகிச்சையில்’விராபின்’ மருந்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி

புதுடெல்லி, ஏப். 24–

மிதமான கொரோனா பாதிப்புக்கு, ‘சைடஸ் கெடிலா’ நிறுவனத்தின், ‘விராபின்’ வைரஸ் எதிர்ப்பு மருந்து பயன்படுத்த, மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

தீவிர கொரோனா பாதிப்புக்கு பயன்படும், ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கெடிலா ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்வில் படேல் கூறியதாவது:–

‘‘எங்கள் தாய் நிறுவனமான, சைடஸ் கெடிலா, கொரோனா சிகிச்சைக்கு, ‘விராபின்’ என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதை, கொரோனா அறிகுறி தோன்றிய உடன் பயன்படுத்தினால், வைரஸ் தாக்கம் குறையும்.

இது, மூன்றாம் கட்ட பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதர வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை விட, விராபின் மருந்தில் கூடுதல் பயன்கள் உள்ளன. கொரோனா மட்டுமின்றி, இதர வைரஸ் பாதிப்புகளுக்கான சிகிச்சைக்கும் இந்த மருந்து உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து விரைவாக விடுபட உதவும் இந்த மருந்தை, அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில், வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய, மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.இது, தற்போது பெருகி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உதவும்’’.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *