சிறுகதை

கொய்யாப்பழம் – ராஜா செல்லமுத்து

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகரின் பிரதான சாலையில் இருக்கும் ஒரு பேருந்து நிலையத்தில் அழகம்மாள் கொய்யாப்பழம் விற்பதற்காக அமர்ந்திருந்தாள்.

அருகில் இரும்பு தராசு. அதன்மேல் எடைக்கல் அருகிலிருக்கும் கூடையில் பழுத்த கொய்யாப்பழம் ,

வெளிர் நிறத்தில் வெளிறிப் போன சேலை. திட்டுத் திட்டாகப் படிந்திருந்த ஜாக்கெட் ,வாய் நிறைய வெற்றிலை, இரண்டு பக்கமும் இரண்டு மூக்குத்திகள், காதில் கம்மல் ,எண்ணெய் தேய்த்த தலை. அள்ளி முடிந்த கூந்தல் என்று அழகம்மா அமர்ந்திருந்தது பார்த்தாலே ,அவள் பட்டிக்காட்டுப் பெண் என்று பார்க்காமலே தெரியும் .

அந்தப் பேருந்து நிலையத்தில் பேருந்து ஏறும் பயணிகள் ஏராளமாக நின்றுகொண்டிருந்தார்கள்

அவரவர் திசையில் போகும் பேருந்துகள் வெறிக்க வெறிக்க பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்கள் .

அழகம்மாளை அவர்கள் சற்றும் சட்டை செய்யவில்லை. அத்தர் பூசிய பெண்கள், அரைக்கால் டவுசர் ஆண்கள் ,தோளில் பை போட்டவர்கள், தொங்க தொங்க பூ வைத்தவர்கள் என்று அந்தப் பேருந்து நிலையம் முழுவதும் ஒரு ரம்யம் ஆகவே காட்சியளித்தது.

அழகம்மாள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு கொய்யாப்பழ வியாபாரம் சரியாக இருக்கிறதோ? இல்லையோ இந்த மனிதர்கள் எல்லாம் எங்கு செல்கிறார்கள்? எதற்காக செல்கிறார்கள் ? ஏன் இந்த பரபரப்பு ? என்று வியப்பின் உச்சிக்கு சென்றவள் வாய்பிளந்து அவர்களை பார்த்துக்கொண்டிருந்தாள்.

கூட்டம் நிரம்பி வழியும் பேருந்தில் ஆண்கள் பெண்கள் என முண்டியடித்துக் கொண்டு இருக்கிறார்களே இதெல்லாம் எதற்கு? இது என்ன வாழ்க்கை? என்று வைத்த கண் வாங்காமல் அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அழகம்மாவையும் அவள் கவனிப்பதை அவள் கவனிப்பதையும் எதிர்திசையில் நின்று கவனித்துக் கொண்டே இருந்தான் கிருஷ்ணன்.

அவனுக்கு அழகம்மாவைப் பார்த்ததும் அவன் கிராமத்து ஞாபகம் அவன் இதயத்தில் ஒட்டிக்கொண்டது .

சிறிது நேரம் அழகம்மாவின் செய்கையை பார்த்த கிருஷ்ணன் அம்மாவின் அருகில் வந்தான்.

தம்பி கொய்யாப்பழம் எத்தனை கிலோ என்றாள் அழகம்மா

இல்ல கொய்யாப்பழம் ரொம்ப நல்லா இருக்கு .என்ன விலை? என்றான்

ஒரு கிலோ 60 ரூபாய். 50 ரூபாய்க்கு தரலாம் என்றாள்.

கொய்யாப் பழங்களை கையில் எடுத்தவன்

‘‘ சரி ஒரு கிலோ கொடுங்க ’’ என்றான்.

எடை போட 50 ரூபாய்க்கு பதில் 100 ரூபாய் கொடுத்தான்.

மீதம் சில்லறையை அவளிடமே கொடுத்தான்.

அழகம்மா வேண்டாம் அதை நீங்களே வச்சுக்கங்க என்றான் கிருஷ்ணன்..

இல்ல தம்பி உழைக்காமல் சாப்பிடுறது தப்பு. உழைக்காம ஒருத்தவங்க கிட்ட பணம் வாங்குறது அதைவிட தப்பு. உங்க காசு எனக்கு வேண்டாம் தம்பி. பிடிங்க காசு என்று கிருஷ்ணன் கையில் திணித்தாள் அழகம்மாள்.

உங்களுக்கு எந்த ஊரு ? என்று கேட்டான் கிருஷ்ணன்.

தம்பி நமக்கு சொந்த ஊரு பிறந்த ஊரு எல்லாம் மதுரை பக்கம் ஒரு கிராமம். வாக்கப்பட்டது திண்டிவனத்து பக்கம் . அங்க ஒரு கிராமத்துல இருந்துவந்து ஒருவாரம் தங்கி கொய்யாப்பழத்தை வித்திட்டு வீட்டுக்கு போயிடுவேன்.

இந்த மனுஷங்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமா இருக்குப்பா .இவங்க எல்லாம் ஏன் இவ்வளவு வேகவேகமா போறாங்க . அவசரமா பேசுறாங்க ?என்ன வேலை செய்றாங்க? ஒன்னும் தெரியலையே. அதான் இவங்களப் பார்த்துகிட்டு இருந்தேன் என்றாள்.

அவள் பேச்சையும் அவளையும் பார்த்த கிருஷ்ணன், எல்லாமே இப்படித்

தான்ம்மா . பணம் சம்பாதிப்பது மட்டும் தான் இங்க இருக்க மக்களுடைய ஒரே ஒரு வேலை. .

பணத்துக்காகத்தான் இங்க இருக்கிறவங்க எல்லாம் ஓடிக்கிட்டு இருக்காங்க. பணம் சம்பாதிக்கிற அளவுக்கு மனுசங்கள சம்பாதிக்கல. அதுதான் இங்க பிரச்சினையே என்று கிருஷ்ணன் சொன்னான்.

நம்ம ஊரு ஆளுங்க அப்படி இல்லையே தம்பி என்றாள் அழகம்மா.

இங்க அப்படித்தான் போகப்போக தெரிஞ்சுக்குருவீங்க. இங்க வந்து நீங்க எவ்வளவு நாளாச்சு? என்றான் கிருஷ்ணன்

ஒரு வாரத்துக்கு ஒரு தரம் வந்து கொய்யாப்பழம் வித்திட்டு மறுபடியும் ஊருக்கு போயிடுவேன் என்றாள் அழகம்மாள் .

சரி இன்னும் ஒரு கிலோ கொய்யா பழம் குடுங்க என்று இன்னொரு கிலோ கொய்யாப்பழத்தை வாங்கினான் ,

அழகம்மாள் புன்முறுவலோடு கொய்யாப் பழத்தை எடுத்துக் கொடுத்தாள்.

அப்போது ஒரு பேருந்து நிற்க அந்த பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் வேகமாக ஏறினார்கள்..

இந்த பாருங்க தம்பி சொல்லி முடிக்கல அம்புட்டு பேரும் பஸ்ல ஏறுறாங்க. இது என்ன வாழ்க்கை என்றாள்| அழகம்மாள்.

2 கிலோ கொய்யாப்பழத்தை அந்த வெள்ளந்தி மனுஷியிடம் வாங்கி அவளின் கஷ்டத்தை சரி செய்த கிருஷ்ணன்,

நான் வரேன் நாளைக்கு இருப்பீர்களா ?என்று சொல்ல

நாளைக்கு எனக்கு தெரியல தம்பி இங்கேதான் எங்கேயோ சுத்திகிட்டு இருப்பேன் என்றாள், அழகம்மாள்.

உங்களுக்கு செல்போன் நம்பர் இருக்கா? என்று கேட்க

அதெல்லாம் இல்லப்பா. செல்போன் எல்லாம் எனக்கு இல்லை..இங்க எங்கேயாவது உட்கார்ந்துட்டு இருப்பேன் .நீ வந்து என்ன பார்க்கலாம் என்றாள்.

இரண்டு கிலோ கொய்யாப்பழத்தை விற்ற பணத்தைத் தன் சுருக்குப் பையில் போட்டுக் கொண்டாள் அழகம்மாள்.

வியாபாரம் செய்வதை விட்டுவிட்டு மறுபடியும் அந்தப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் மக்களின் நடவடிக்கையை வாய் திறந்து வேடிக்கை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் அழகம்மாள்,

Leave a Reply

Your email address will not be published.