செய்திகள்

கர்னாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் மகள் அமலாக்கத்துறை முன் ஆஜர்

Spread the love

புதுடெல்லி, செப். 12

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் கர்னாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இன்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி அவர் இன்று ஆஜரானார்.

கர்னாடக காங்கிரஸ் கட்சியில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக பணியாற்றியவருமான டி.கே. சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது.

இதில் டெல்லியில் அவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து ரூ.8.59 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது.

இதுகுறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறையை வருமான வரித்துறை கேட்டு கொண்டது. அதன்படி அமலாக்கத்துறையினர், டி.கே. சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

விசாரணைக்கு ஆஜராகும்படி டி.கே. சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை ரத்து செய்ய கோரிய டி.கே. சிவக்குமாரின் மனுவை கர்னாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.

இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே. சிவக்குமார் ஆஜரானார். 4 நாட்கள் விசாரணை நடத்திய பிறகு கடந்த 3ந்தேதி அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவர் நாளை வரை போலீஸ் காவலில் உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாளை அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு அமலாக்கத்துறையினர் கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி.கே. சிவக்குமார் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

இதனிடையே, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இன்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று அவர் ஆஜரானார்.

நிர்வாக படிப்பு படித்து வரும் ஐஸ்வர்யா, டி.கே. சிவக்குமார் நடத்தி வரும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து வருகிறார். இதன்கீழ் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளும் மற்றும் தொழில்களும் நடந்து வருகின்றன. பொறியியல் மற்றும் பிற கல்லூரிகள் செயல்பட்டு வருவதுடன், அவற்றை பின்புலத்தில் இருந்து இயக்கும் முக்கிய நபராக ஐஸ்வர்யா இருந்து வருகிறார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டு பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *