சிறுகதை

என்ன இது புதுப்பழக்கம் – ஆவடி ரமேஷ்குமார்

அலுவலகம் முடிந்ததும் டூவீலரை எடுத்துக்கொண்டு நேராக ஒயின் ஷாப்பிற்கு போன நான், அங்கிருந்து வெளியே வந்து சாலை ஓரத்தில் நின்று கொண்டு நண்பன் சிவாவிற்கு போன் செய்தேன்.

அப்போது என் மனைவியின் உயிர் தோழி சௌம்யா என்னை பார்த்து விட்டு பார்க்காதது போல் சிறிது தூரம் நடந்து சென்று திரும்பிப் பார்த்து விட்டு சென்றாள்.

“ஹலோ சிவா”

” மாலை வணக்கம்…. கதாசிரியரே!”

” வணக்கம்.நீ எங்க இருக்க ஆபீஸ்லயா வீட்லயா?”

” என் ஆபீஸ்க்கும் வீட்டுக்கும் நடுவுல இருக்கிற ஒயின் ஷாப்ல.”

அழைத்தேன்.

” நல்லதா போச்சு.ஆரம்பிக்க வேண்டாம்.நான் பத்து நிமிஷத்துல அங்க வந்தர்றேன்.வெயிட் பண்ணு”

சிவாவும் நானும் பாரை விட்டு வெளியேறும் போது ஒரு மணி நேரம் கடந்து விட்டிருந்தது.

வீடு.

செருப்பை கழட்டிவிட்டு வீட்டிற்குள் நுழைந்த என்னை பத்மா முறைத்துப் பார்த்தாள்.

பக்கத்தில் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தார்கள்.

ஹால் சோபாவில் அமரப்போன என்னிடம், “இங்க உட்காராதீங்க.உங்க ரூமுக்கு போங்க.குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திட்டு

நானே அங்க வரேன்” என்றாள் சத்தமாக.

” ஏன் இப்படி சத்தம் போடற?”

” ம்…என்ன இது புதுப்பழக்கம்?

போங்க உங்க ரூமுக்கு!”

குழம்பிப் போனேன் நான். ஏன் கோபப்படறா? என்ன இது புதுப்பழக்கம்னா…இவ எதைச் சொல்றா? என்று எனக்குள் சில கேள்விகள் ஓட..பாத்ரூமிற்கு போய்விட்டு

வந்து பெட்ரூமிற்குள் நுழைந்து லுங்கிக்கு மாறி பக்கத்திலிருந்த என் எழுதும் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டேன்.

முக்கால் மணி நேரம் கழித்து கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் பத்மா.

நான் பேப்பரும் பேனாவுமாக நாற்காலியில் அமர்ந்திருக்க-

” என்னங்க இது புதுப்பழக்கம்

….எப்பயிருந்து குடிக்க ஆரம்பிச்சிருக்கீங்க” என்று கேட்டாள்.

” குடிச்சேன்னா….என்ன உளர்றே”

” நீங்க ஒயின்ஷாப்க்கு முன்ன நின்னுட்டிருந்ததை பார்த்ததா சௌம்யா சொன்னாளே..அது பொய்யா?”

” ஓ…அந்த கதையா?” என்றேன்.

என் அருகே வந்து என் உதட்டருகே அவள் மூக்கை வைத்து , ” என்னது வாசமே இல்ல.வாசமே வராத மாதிரி

இப்பெல்லாம் சரக்கை தயாரிக்கிறாங்களா?” என்று கேட்டாள்.

” ஓ…சந்தேகப்படறியா…

இன்னும் சொல்றேன் கேட்டுக்க” என்று நண்பன் சிவாவை பாரில்

சந்தித்ததையும் விளக்கமாக சொல்ல…அவளின் முகம் சிவந்தது.

” உங்களுக்கு எதுக்குங்க இந்த கெட்ட பழக்கம்.அந்த சிவாவால தான் கெட்டுட்டிருக்கீங்களா…

வரட்டும் அந்தாளு நம்ம வீட்டுக்கு பேசிக்கிறேன்”

விசயம் விபரீதமாக மாறிக்கொண்டு போவதை உணர்ந்த நான், “பத்மா…பத்மா…நான் முழுசா நடந்ததை உனக்கு புரியற மாதிரி சொல்லிடறேன். அப்புறம் நீயே முடிவு பண்ணு. சிறுகதைகள் எழுதிட்டிருக்கிற நான் இப்ப முதல் முதலா ஒரு நாவல் எழுதுவது உனக்கு தெரியும் தானே?”

” ம். தெரியும். இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்கு அவசரப்படாதே. அந்த நாவல்ல ஹீரோ காதல் தோல்வியால் குடிக்கு அடிமையாகிறான். பணக்காரன் அவன். அதனால விதவிதமான பிராண்டுகளை வாங்கி வாங்கி குடிக்கிறான். எனக்கு குடிப்பழக்கம் இல்லாததால அந்த காட்சிகளை தத்ரூபமா எழுதறதுக்காக இன்னிக்கு ஆபீஸிலிருந்து நேரா ஒரு ஒயின் ஷாப்பிற்கு போய் அங்கிருந்த சூப்பர் வைசர்கிட்ட என்னை அறிமுகப்படுத்திட்டு ஒரு பேப்பர்ல என்னென்ன வகையான பிராண்டுகள் இருக்குனு கேட்டு எழுதிட்டு, நண்பன் சிவாவுக்கு போன் பண்ணி அவன் இருந்த பாருக்கும் போயி அவன்கிட்டயும் என் நாவலை பத்தி சொல்லி அவனுக்கு தெரிஞ்ச பிராண்டு டீடெயிலையும் கேட்டு எழுதிட்டு வீட்டுக்கு வந்தேன். இடையில உன் தோழி சௌம்யாவையும் பார்த்தேன். அவ தப்பா புரிஞ்சிட்டு உன்கிட்ட சொல்லியிருக்கா… அதான்..”

மேற்கொண்டு என்னால் பேச முடியாமல் போனது. காரணம்,

பத்மா என்னை நெருங்கி அணைத்தபடி, ” முதல் நாவலை சூப்பரா எழுதி முடியுங்கள்; வாழ்த்துக்கள்!”

என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *