ஆர். முத்துக்குமார்
உலக வரைபடத்தில் அச்சம் தரும் தீவிரவாதிகள் ஒரு சதுர கிலோமீட்டரில் அதிக எண்ணிக்கையில் நடமாட்டம் பாகிஸ்தானில் என்று ஒரு புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் பாகிஸ்தான், இந்தியா உட்பட மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், ஈராக், நைஜீரியா, சிரியாவில் மதவெறி தாக்குதல்கள் நடத்தி வரும் ஐ.எஸ், தாலிபன் போன்ற தீவிரவாத அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவிலும் சிறிதுசிறிதாக தீவிரவாத நடமாட்டம் குறைந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் நடைபெற்ற அசம்பாவிதங்களை விட மிகக் குறைந்த சதவிகிதமே நடந்துள்ளது.
இது உலகமே கைகோர்த்து எடுத்த பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளால் மட்டுமே கிடைத்திருக்கும் பலனாகும்.
இதே கட்டுப்பாடுகள் தீவிரம் குறையாது தொடர்ந்தால், மிகவும் பாதிப்படைந்துள்ள சிரியா, நைஜீரியா, பாகிஸ்தானிலும் நிலைமை சீராகிவிடும் என்ற எதிர்பார்ப்பு நம்பிக்கையை தருகிறது.
இதே தீவிரத்தை இந்தியாவில் கடைபிடிக்க வேண்டிய ஒன்று, ஊழல் என்ற அரக்கனை ஒழிப்பதில் தான்!
தீவிரவாதம் ஓர் கொடும் செயல் என புரிதல் வரவர அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வீரியம் பெற்று அதன் மீதான போர் நல்ல பயனைத் தரத் துவங்கி விட்டது.
ஆனால் ஊழல் என்றால் பல கோடிகள் புரளும் போது தான் என்ற மனநிலை, நம் நாட்டில் ஓங்கி வளர்ந்து விட்டதை மனதார ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதை தடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற முடியும் எனத் தோன்றுகிறது.
சிறிய தொகையை தருவது ‘டிப்ஸ்’ என்று பார்க்கிறோம்! நமக்கு சேவையைத் தரும் ஒருவருக்கு நன்றி கூறி பாராட்ட ஒரு தொகையைத் தருவது சரி தான்.
ஆனால் டிப்சை நிர்ணயித்து விட்டோம், அதை முன் பணமாக தந்தால் தான் காரியம் நடக்கும் என்ற வகை டிப்ஸ் உண்மையில் லஞ்சம் தானே?
கல்வித்துறை முதல் தேர்தல் களங்கள் வரை இந்த லஞ்ச ஊழல் வெகுவாகவே நம் சமுதாயத்தில் ஆழ வேரூன்றிவிட்டது!
இந்த நிலையில்தான் சென்ற மாதத் துவக்கத்தில் ஊழல் செய்பவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை தப்பித்து விட மாட்டோம் என பிரதமர் மோடி உறுதியுடன் பேசியிருக்கிறார்.
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) டெல்லியில் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியதாவது:–
‘‘ஊழலுக்கு எதிராக போராடவேண்டும் என செங்கோட்டையில் இருந்து சுதந்திர தின உரையாற்றியபோது அழைப்பு விடுத்தேன். அரசுத் துறையில் வசதிகள் குறைவாக இருப்பது, தேவையற்ற அழுத்தம் ஆகியவை ஊழலுக்கு இரண்டு முக்கிய காரணங்களாக உள்ளன. இவை மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறது. இந்த முறையை மாற்றி, வெளிப்படைத்தன்மையை உருவாக்க கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு முயற்சித்து கொண்டிருக்கிறது. விநியோகத்துக்கும், தேவைக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பவும் மத்திய அரசு முயற்சித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை அடைய தொழில்நுட்பத்தில் முன்னேற்றம், அடிப்படை சேவைகளை நிறைவை நோக்கி கொண்டு செல்லுதல் மற்றும் தற்சார்பு நிலை ஆகிய மூன்று வழிகள் பின்பற்றப்படுகின்றன.
ஊழலை எதிர்த்துப் போராட தேசிய ஜனநாயக கூட்டணி அரசு காட்டும் ஆர்வத்தைப்போல், அரசின் ஒவ்வொரு துறையும் காட்ட வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு நம்பகத்தன்மை முக்கியமானது. அரசு மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
75–வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில் நாம் தற்போது மாற்ற வேண்டும். பொது விநியோக முறை, தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டதால், கோடிக்கணக்கான போலி பயனாளிகள் நீக்கப்பட்டு ரூ.2 லட்சம் கோடி தவறானவர்களின் கைகளுக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
ஊழல்வாதிகள் சிறைக்கு சென்றாலும் அவர்கள் போற்றப்படுகின்றனர். இந்த சூழல் நாட்டுக்கு நல்லதல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும், நேர்மையான பாதையில் சென்று தங்கள் கடமைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லி அமைச்சர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவருக்கு கொடுக்கப்பட்டு வரும் சேவைகள் அதிர்ச்சியை தருகிறது.
அவரோ மத்திய அரசுக்கு பிடிக்காத எதிர்க்கட்சியை சார்ந்தவர், இப்படி உல்லாசமாக அனுபவிக்கும் காட்சிகளை வெளியிட்டதில் ஆளும் கட்சிக்கும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது, நமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆளும் கட்சி தலைவரோ, வேறு கட்சியாளரோ இந்திய சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, இப்படிப்பட்ட வீடியோ ஆதாரம் ஆளும் கட்சி பிரமுகராக இருந்தாலும் வெளிவரும் நிலை வர வேண்டும், அப்போதுதான் ஊழல் ஆசாமிகள் காவல்துறை முதல் அரசியல்வாதிகள் வரை தவறுகளை செய்யத் துணிவு வராது அல்லவா?