சிறுகதை

இயந்திர வேலைக்காரி! | சின்னஞ்சிறுகோபு

இது 2120-ம் வருடம்!

நீங்கள் இப்போது இருக்கிற இந்த 2020-ம் ஆண்டு அல்ல!

இன்னும் நூறு வருடங்களுக்குப் பிறகு வந்திருக்கிற மிகமிக நவீனமான உலகம்!

இது 2120-ம் வருடம்!

வட அமெரிக்காவின் சிகாகோ நகரின் ஒரு முக்கியமான பகுதியில் ஒரு மிக உயரமான கட்டிடத்தின் 11-வது மாடியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தான் ராஜேந்திரன். வயது 28தான் ஆகிறது. இந்தியாவில் பிறந்து, அங்கேயே படித்து, வேலை கிடைத்து இங்கே ஒரு சாஃட்வேர் கம்பெனியில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை!

கண்ணாடி ஜன்னல் வழியாக சாலையை பார்த்தான் ராஜேந்திரன். வரிசை வரிசையாக நிறைய கார்கள் சென்றுக் கொண்டிருந்தன. எந்த காரிலும் டிரைவர் இல்லை. எல்லா கார்களும் கம்ப்யூட்டர் முறையில் புரோகிராம் செய்யப்பட்டு, ஒருவித வரைமுறைபடி ஓடிக் கொண்டிருந்தன!

ஒருகாலத்தில் கார்கள் மனிதர்களால் இயக்கப்பட்டதாக அவன் படித்திருக்கிறான். பழைய படங்களில் பார்த்திருக்கிறான். தன்னுடைய பெயரே பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு தமிழ் மன்னரின் பெயர் என்பதையும் அவன் அறிந்திருந்தான்.

அவனுக்கு அலுவலக வேலையில் எந்தவித கஷ்டமும் இல்லை. பெரும்பாலான நேரங்கள் வீட்டிலேயே இருந்துதான் கம்ப்யூட்டர் மூலம் வேலைப் பார்த்தான்.

ஆனால் சமையல் செய்து சாப்பிடுவதுதான் கஷ்டமாக இருந்தது. நூற்றுக்கணக்கான ரெடிமேட் உணவு வகைகள், பிரிஜ், மிக்ஸி, ஓவன் என்று ஆரம்பித்து வாக்குவம் கிளீனர், வாஷிங்மெஷின் உட்பட இருந்தாலும் அவனுக்கு சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, துணிகளை வெளுப்பது போன்ற வேலைகள் செய்வது கஷ்டமாக இருந்தது. அதனால் அவன் ஒரு வேலைக்காரி வைத்துக் கொள்ளலாமென்று நினைத்தான்.

மிகவும் நவீனமான இயந்திர வேலைக்காரிகளை பல நிறுவனங்கள் வாடகைக்கு தந்துக் கொண்டிருந்தன. நூறு வருடங்களுக்கு முன்பெல்லாம் இயந்திர மனிதன் என்ற பெயரில் இருந்த ரோபோக்கள்தான் இப்போது அச்சு அசலாக மனிதர்களைப் போலவே உருவாக்கப்பட்டிருந்தன.

அவைகள் அசல் மனிதர்களைப் போலவே உருவம், தோல், நிறம், முடி, முகமென்று இயற்கைக்கு மிக நெருக்கமாக வந்திருந்தன. அதனால் இயந்திர மனிதர்கள் கண் இமைத்துப் பார்த்தன. ஓரளவு சிந்திக்க செய்தததுடன், தொடு உணர்ச்சிகளை கூட புரிந்துக் கொண்டன.

ராஜேந்திரன் ஒரு நிறுவனத்திலிருந்து ‘ரோஸி’ என்ற பெயருள்ள ஒரு இயந்திர வேலைக்காரியை ஐயாயிரம் டாலர் மாதவாடகைக்கு வரவழைத்தான்.

அந்த ரோஸி, ஒரு இளம் பெண்ணைப் போலவே பொன்னிற தலைமுடி, குறுகுறு கண்கள், சிவந்தமேனி, எடுப்பான மார்பகம் என்று ஒரு அமெரிக்க அழகியை போலவே இருந்தது. அது அமெரிக்க ஆங்கிலம், இந்தியத் தமிழ் மொழிகளில் செயல்படும்படி புரோகிராம் செய்து அனுப்பியிருந்தார்கள். அதனால் பேசினால் புரிந்துக்கொண்டு, பதில் சொல்லுகிற வகையில், சொல்லுகிற வேலைகளை செய்கிறவகையில் அது அமைக்கப்பட்டிருந்தது!

ராஜேந்திரனுக்கு அந்த ரோஸியை மிகவும் பிடித்திருந்தது. அந்த இயந்திர வேலைக்காரியை அவனால் ஒரு இயந்திரம் என்றே நம்பமுடியவில்லை. ஒரு சாயலில் பார்த்தால் அது அவன் அத்தைப் பெண் அமுதாவை போலவே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது!

அதற்கென்று ஒரு ரூம் ஒதுக்கப்பட்டிருந்தது.

தினந்தோறும் காலையில் அந்த ரோஸி என்ற இயந்திர வேலைக்காரி எழுந்து வரும். காபி போடும், டிபன் செய்யும், வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்யும். மதிய சாப்பாடு செய்யும். துணிகளை வெளுத்து மடித்து வைக்கும். இரவு மறுபடியும் டிபன் செய்துவிட்டு, தனது ரூமுக்குள் சென்று சார்ஜ் போட்டுக்கொள்ளும். மறுபடியும் மறுநாள் காலையில்தான் வரும்.

அன்றும் அப்படிதான்! அந்த இயந்திர வேலைக்காரி ரோஸி காலையில் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்தது. அது அழகான புதிய ஆடைக்கு மாறியிருதது. உதட்டில் ‘லிப்ஸ்டிக்’ கூட போட்டிருந்தது!

ராஜேந்திரனைப் பார்த்து, “காலை வணக்கம்” என்று இனிய தமிழிலேயே சொல்லிவிட்டு, வீட்டை ஒருதடவை நோட்டம் விட்டது. கீழே கிடந்த ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையை எடுத்து மேஜைமேல் வைத்துவிட்டு, சமையலறைக்கு காபி தயாரிக்கச் சென்றது!

ராஜேந்திரன் சமையலறைக்கு சென்றான். அங்கே ரோஸி காபி தயாரித்துக் கொண்டிருந்தது. மின்சார அடுப்பில் பால் சூடாகிக் கொண்டிருந்தது. ரோஸி அவனை திரும்பிப் பார்த்து அழகாக புன்னகை செய்தது!

இவன் சும்மா இருந்திருக்கலாம். ஒரு சபலத்தில் அந்த இயந்திர வேலைக்காரி ரோஸியின் அழகிய இடுப்பை செல்லமாக ஒரு கிள்ளு கிள்ளினான்!

அடுத்தவினாடி ரோஸி என்ற அந்த இயந்திர வேலைக்காரி, அவன் கன்னத்தில் ‘பளா’ரென்று ஒரு அறை அறைந்தது! “இந்த வேலையெல்லாம் என்னிடம் வெச்சுக்கிட்டா, தூக்கிப்போட்டு, மிதிச்சுட்டு, போய்க்கிட்டே இருப்பேன்!” என்றது கோபமாக!

ராஜேந்திரன் வெலவெலத்துப் போனான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *