செய்திகள்

54 பயணிகளுடன் கால்வாயில் விழுந்த பஸ்: 20 பேர் பரிதாப பலி

மத்தியப் பிரதேசத்தில் இன்று காலை பரிதாபம்

போபால், பிப். 16–

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து, கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 7 பெண்கள் உள்பட 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன பயணிகளை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் சித்தி பகுதியில் இருந்து சத்னா நகரை நோக்கி இன்று காலை 8.30 மணியளவில், 54 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது பாட்னா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டு இருந்த போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இருந்து விலகி அருகில் இருந்த பெரிய கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

7 பேர் உயிருடன் மீட்பு

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனே மீட்புப்படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த மீட்புப்படையினர், கால்வாயில் இருந்து 7 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். அவர்கள் தற்போது அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் 7 பெண்கள் உள்ளிட்ட 20 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் பேருந்து தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதால் மீதமுள்ள 25 க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகளை வெள்ளம் அடித்துச் சென்று இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தலா ரூ. 5 லட்சம் நிதி

அடித்து செல்லப்பட்ட பயணிகளை படகுகள் மூலம் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து, மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், இறந்த ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் நிவாரணமான, தலா ரூ. 5 லட்சம் நிதி அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் பான் சாகர் அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரை நிறுத்தி, காணாமல் போனவர்களை தேட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *