செய்திகள் நாடும் நடப்பும்

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் மோடி பிரச்சாரம்


ஆர்.முத்துக்குமார்


2024–ல் வர இருக்கும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தன் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி மகத்தான வெற்றியை பெற்று அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடித்து விடும் என்று உறுதியாக தனது தேர்தல் பிரச்சார முழக்கத்தை ‘லட்சிய தாலுகா’ திட்ட மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

செப்டம்பர் மாதம் இந்தியாவின் சிறப்புகள் உலக பார்வையில் தலைப்புச் செய்தியாகவே இருந்ததை அறிவோம். இன்று உலக தலைவர்களில் முதன்மை இடத்தை பிடித்திருப்பது பிரதமர் மோடியாவார். அவரே கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து முதன்மை இடத்தில் இருப்பதாக ஓர் ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது.

ஆனால் அரசியல் யதார்த்தத்தால் அல்லவா இயங்குகிறது! உலக தலைவர்களால் பாராட்டுகளை பெற்று விட்டால் அவரே மக்கள் மன்றத்திலும் முழு ஆதரவை பெறுவாரா?

இந்த கேள்விக்கான பதிலை மக்கள் தீர்ப்பாக தரப்போவது 2024ல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தான்!

ஆனால் அதற்கு முத்தாய்ப்பாய் நான்கு மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் விரைவில் நடைபெற இருக்கிறது.

அம்மாநிலங்கள் எது? என்பதை தெரிந்து கொள்ள பிரதமர் மோடி அக்டோபர் 6 வரை பங்கேற்கும் பிரச்சார மாநாடுகளின் பட்டியலே சுட்டிக்காட்டி விடும்.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய4 மாநிலங்களில் பிரதமர் மோடி அக்டோபர் 6–-ம் தேதி வரை ஒரு வார காலப் பயணம் மேற்கொள்கிறார்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூருக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பாஜகவின் 2 பரிவர்தன் யாத்திரை நிறைவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த பரிவர்தன் மகாசங்கல்ப் கூட்டத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். சத்தீஸ்கர் மாநிலத்துக்கு அக்டோபர் 3-–ம் தேதி திரும்பி வரும் பிரதமர், பஸ்தர் பகுதியில் உள்ள ஜக்தல்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

தெலங்கானா மாநிலத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் பிரதமர் மோடி ரூ.13,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இங்கு ரெயில் சேவையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸிங் முறையில் துவக்கி வைக்கிறார். ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் 5 புதிய கட்டிடங்களையும் பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார். இங்கு அக்டோபர் 3-ம் தேதி திரும்பிவரும் பிரதமர் மோடி நிசாமாபாத் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் மோடி குவாலியர் நகரில் நடைபெறும் 2 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இங்கு அக்டோபர் 6-ம் தேதி திரும்பிவரும் பிரதமர் மோடி ஜோத்பூர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.இது தேர்தல் பிரச்சாரம் மட்டுமில்லை, அரசு செலவில் விளம்பர யுத்தி என எதிர்க்கட்சிகள் கூற துவங்கி விடும்! உண்மையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை தந்துள்ள மக்களுக்காக முழு மனதோடு செயல்படும் அரசியல்வாதிகளுக்கு முதல் நாள் முதலே மக்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டு மீண்டும் அரசியல் பரீட்சையில் வெற்றி மதிப்பெண் தரலாமா? என்று பார்க்கத் துவங்கி விட்டனர்.

ஆகவே தேர்தல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு வரும் வரை நாட்டு வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தவறு இல்லை. ஆனால் அங்கே தன் ஆட்சிக்கு மீண்டும் சந்தர்ப்பம் தாருங்கள் என்று கோருவது தான் தவறான முன் உதாரணம்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *