செய்திகள்

தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த பொங்கல் பண்டிகை சிறப்பு ரெயில் முன்பதிவு

பயணிகள் ஏமாற்றம்

சென்னை, ஜன. 11–

பொங்கல் பண்டிகை சிறப்பு ரெயில்களின் முன்பதிவு தொடங்கிய நிமிடங்களில் விற்று தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

15–ந் தேதி பொங்கல்பண்டிகையையொட்டி, தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வழக்கமான ரெயில்களின் அனைத்து இருக்கைகளும் நிரம்பிவிட்டன. ஏற்கனவே அறிவித்திருந்த சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுவிட்டது.இதனால் தெற்கு ரெயில்வே கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிட்டு உள்ளது. எனவே, பயணிகளின் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மேலும் 2 சிறப்பு ரெயில்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. தாம்பரம்- தூத்துக்குடி இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலும், தாம்பரம்- நெல்லை இடையே முன்பதிவு சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வரும் 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி நோக்கி செல்லும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண். 06001) அதேநாள் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியிலிருந்து காலை 6 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06002) அதேநாள் இரவு 9.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இதேபோல, வரும் 11, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் முன்பதிவு சிறப்பு ரெயில் (06003) மறுநாள் காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, வரும் 12, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் முன்பதிவு சிறப்பு ரெயில் (06004) மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தாம்பரம் நெல்லை இடையேயான சிறப்பு ரெயில் அறிவிப்பு வெளியான அதே நேரத்தில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது. எனவே, முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்தது. மேலும், இந்த தேதிகளுக்கான ஏ.சி. டிக்கெட்டுகள் மட்டும் சற்று நேரம் நீடித்த நிலையில் ஒரு மணி நேரத்தில் அந்த டிக்கெட்டுகளுக்கும் முன்பதிவு முடிந்தது. இதனால் சிறப்பு ரெயில்களுக்காக டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருந்த பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *