செய்திகள்

அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து, இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும்

ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை

அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து, இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழி எடுக்க வேண்டும்

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள்

மதுரை, பிப். 23–

அம்மாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அம்மா கோவில் தொடங்கி அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்து கழகக் கொடியை ஏற்றியும், மாலையில் அனைத்து இல்லங்களில் தீபம் ஏற்றி உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க கழக அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் அம்மாவின் 73 வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை கூட்டம் டி.குண்ணத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கழக ஜெயலலிதா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து இன்றைக்கு 8 கோடி தமிழக மக்களின் இதய தெய்வமாகவும், ஒன்னரை கோடி கழகத் தொண்டர்களின் குலதெய்வமாகவும் திகழ்ந்துவரும் அம்மாவின் புகழ் இப்பூவி உள்ளவரை மங்கா புகழாக திகழச் செய்யும் வகையில் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் அம்மாவிற்கு இங்கு திருக்கோவில் அமைக்கப்பட்டது. இதனை முதலமைச்சரும் துணை முதலமைச்சரரும் திறந்து வைத்து அம்மாவிற்கு புகழ் சேர்த்தனர்.

அம்மாவிற்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் அம்மாவின் நினைவு இடத்தை 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை தோற்றத்தில் உருவாக்கியும், அதனைத் தொடர்ந்து அம்மா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியது மல்லாது, இதற்கெல்லாம் மேலே அம்மா அவதரித்த பிப்ரவரி 24 ஆம் தேதியை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் துணையாக இருந்தார். மேலும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக அனைத்து மாவட்டங்களில் நடத்தி எம்.ஜி.ஆர். பெயரில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தினார் முதலமைச்சர். இந்த இரு பெரும் தலைவர்களுக்கு இந்தியாவிலேயே எந்த தலைவருக்கும் இல்லாத வகையில் நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் அழியாப் புகழை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உருவாக்கி வருகின்றனர்.

200 ஆண்டுகள் ஆனாலும் கழக ஆட்சி

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஆணைக்கிணங்க அம்மாவின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குன்னத்தூரில் உள்ள அம்மா திருக்கோவிலில் காலை 6 மணிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து அதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் பொங்கல் வைத்தும் , கழகக் கொடியினை ஏற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி அதனைத் தொடர்ந்து மாலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் அறிவித்துள்ளபடி அனைத்து இல்லங்களிலும் தீபம் ஏற்றி அதில் வரும் தேர்தலில் எதிரிகளை வீழ்த்தி கோட்டையில் நம் கொடியை உயர பறக்க செய்திடுவோம், உயிர் மூச்சு உள்ளவரை அம்மா வழியில் மக்களையும் இயக்கத்தையும் காப்பதே இலட்சியம் என உறுதிமொழி ஏற்க வேண்டும்.

மேலும் அம்மாவின் வழியில் இன்றைக்கு முதலமைச்சர் நான்காண்டு கால ஆட்சியில் 400 ஆண்டுகால வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார் இதற்கு துணை முதலமைச்சர் துணையாக நின்று வருகிறார். இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் இறுதியாக லட்சிய முழக்கமிட்டார் அந்த இலட்சியத்தை வேதவாக்காக எண்ணி அம்மாவின் பாத தடத்தில் ஆட்சி செய்து 100 ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகள் ஆனாலும் அன்னை தமிழகத்தில் ஆட்சி செய்ய தகுதி படைத்த ஒரே இயக்கம் இந்த இயக்கம் தான் என்ற வரலாற்றை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் மகத்தான சாதனை படைப்போம் அந்த வெற்றி விழாவினை அம்மா திருக்கோவிலில் கொண்டாடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், கழக பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம் ரவிச்சந்திரன், பிச்சைராஜன், செல்லம்பட்டி ராஜா, நகரச் செயலாளர் பூமாரராஜா, பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, கொரியர் கணேசன், அழகுராஜா, குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், பால்பாண்டி, லட்சுமி ,சிங்கராஜ பாண்டியன், காசிமாயன், மகேந்திர பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *