சிறுகதை

நிழல் -ராஜா செல்லமுத்து

முந்தைய வருடங்களை விட இந்த வருடத்தில் வெயில் அதிகமாகவே இருந்தது. ஓசோன் படலத்தைப் பிய்த்துக் கொண்டு சூரிய ஒளி பூமியில் சறுக்கி விழுந்தது போல வெப்பம் வீதி எங்கும் தெப்பம் கட்டி நிறைந்திருந்தது

வீதியில் நடக்கும் மனிதர்களின் வரத்து குறைந்திருந்தது இதுவரை அப்படி ஒரு உஷ்ணத்தை கண்டதில்லை என்று மனிதர்கள் எல்லாம் புலம்பித் தவித்தார்கள்.வசதி படைத்தவர்கள் குளிர்சாதன அறைக்குள் முடங்கி கிடந்தார்கள். வசதியற்றவர்கள் மர நிழல், கூரை வீடுகள், தண்ணீர் தடங்கள் என்று ஒதுங்கி நின்று வெப்பத்தைப் போக்கி நின்றார்கள். நகரம், கிராமம் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக வெப்பம் தன் சட்டையை விரித்து அனல் காற்று வீசிக் கொண்டிருந்தது.

அந்த மத்தியான வேளையில் கர்ணன் கால் எடுக்க நடந்து நடந்து நெற்றி வேர்வையும் உடம்பில் உள்ள மொத்த வேர்வையும் உருகி ஓட ஒரு தார்ச் சாலை வழியே நடந்து வந்து கொண்டிருந்தான்.

இங்கே விழுந்து விடுவோமா? அங்கே விழுந்து விடுவோமா ? என்ற பயத்தோடு அவன் நடையிருந்தது. எங்காவது நிழல் தட்டுப்படாதா? என்று ஏங்கி எதிர்பார்த்த வனுக்கு ஏமாற்றமே மிஞ்சி நின்றது .

அவனால் அந்த வெயிலைச் சமாளிக்க முடியாத காரணத்தால் அருகில் இருந்த ஒரு செல்போன் கடைக்குள் நுழைந்தான் :

அவனைப் பார்த்த போதே இவன் எதுவும் வாங்க மாட்டான் என்று தீர்மானித்த செல்போன் கடைக்காரர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி உள்ளே வரவேற்றவர்கள் ,கர்ணனை பார்த்ததும் கையைக் கட்டிக்கொண்டு அவனை வினோதமாக பார்த்தார்கள் .

என்ன வேணும் ? என்று வாயைத் திறக்காமலேயே புருவத்தை உயர்த்தி கேட்டார்கள்.

செல்போன் பாக்கணும் என்று உதடு விரியாமல் சத்தம் வராமல் பேசினான் கர்ணன் .

எவ்வளவு? என்று மெல்ல வாய் திறந்து கேட்டபோது அதற்கு பதில் சொல்ல முடியாமல் விழித்தான் கர்ணன்.

எங்களுக்கு என்னன்னு தெரியும். சூடு தாங்காம தான் ஏசிக்குள்ள வந்திருக்க. இது என்ன தர்மத்திற்கு ஏசி போட்டு வச்சிருக்காங்க. செல்போன் வாங்கினா கடைக்குள் இருக்கலாம் .இல்ல கிளம்பலாம் என்று துரத்தி விட்டார்கள்

கண்டுபிடித்துவிட்டார்களே? என்று வருத்தப்பட்ட கர்ணன் அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்க முடியாமல் பின்னங்கால் பிடரியில் அடிக்க வெளியேறினார் .

அடுத்து ஒரு உணவு விடுதிக்குள் சென்றான். அவன் உடம்பெல்லாம் வேர்த்து இருந்த அழகைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அவனை வினோதமாகப் பார்த்தார்கள். தொண்டை வறண்டு நாக்கு வற்றி உதடுகள் உலர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியது.

அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தவன் யாரையும் கேட்காமல் எதிரே இருந்த தண்ணீர் சக்கை எடுத்து மடமடவென குடித்தான். அதுவரை அமைதியாக இருந்த உணவு விடுதிச் சிப்பந்திகள் தண்ணீர் குடித்து பெருமூச்சு விட்ட கர்ணனை ஒரு மாதிரியாகப் பார்த்ததும் கையில் இருந்த தண்ணீர் சக்கை வைத்துவிட்டு வேகமாக அந்த உணவு விடுதியை விட்டு வெளியேறினான்.

எப்படியும் இன்னும் கொஞ்ச தூரம் நடக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரிந்தது.

சரி இன்னொரு கடைக்குள் நுழையலாம் என்று எண்ணி விரிந்து பரந்த ஒரு இடத்திற்குள் நுழைந்தான். அந்தக் கடை கர்ணனை விட பஞ்சமாக இருந்தது. பழைய துணிமணிகளைப் போட்டு வைக்கும் ஒரு இடம். ஒரே துர்நாற்றம் அடித்து வீச இந்த இடத்தில் நிற்பது உசிதமல்ல என்று ஓடி வந்தான்.

அவனின் நடை வேகம் எடுத்திருந்தது. கால்கள் தான் பின்னிக்கொண்டன .இனியும் நடந்தால் நிச்சயம் கீழே விழுந்து விடுவோம் என்ற பயம் அவன் மனதுக்குள்ளும் கண்ணிலும் தெரிய, ஒரு ஓரம் ஒதுங்கினான். அங்கே ஒரு மரம் நின்று கொண்டிருந்தது.

அந்த இடத்தில் யாருமில்லை நீண்ட தூரம் நடந்ததால் கால்கள் வலித்தன. சிறிது அமரலாம் என்று அந்த மரத்தின் நிழலில் அமர்ந்தான். அவனை அறியாமலே அங்கு தூங்கிவிட்டான்.

பொழுது மசங்கிக் கொண்டு வந்தது. இனியும் இங்கே படுத்திருந்தால் போய் சேரும் இடத்திற்கு பொழுதோட போக முடியாது என்று நினைத்தான் கர்ணன்.

இந்த மரத்தடியில் அவனை யாரும் துரத்துவதற்கோ அவனை ஏளனமாக பார்ப்பதற்கோ மனிதர்கள் இல்லை . அந்த மரமும் ஏன் என் நிழலில் நிற்கிறாய்? என்று மற்ற மனிதர்களைப் போலவும் விரட்டவில்லை. இதுதான் இயற்கை. கடவுள் எல்லாமே என்று நினைத்துக் கொண்டான் கர்ணன் .

அவன் போய்ச் சேர வேண்டிய இடத்தில் சற்று தாமதமாக சென்றாலும் அந்த வேலை முடிந்தது.

மறுநாள் இன்னொரு இடத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது.

அவன் கைகளில் பெரிய பெரிய மரங்களுக்கான செடிகளை ஒரு கூடையில் வைத்து தூக்கிக் கொண்டு நடந்தான் .

எங்கெங்கு மரங்கள் இல்லையோ அங்கெல்லாம் குழியைத் தோண்டி வைத்தான். நிச்சயம் இந்த மரங்கள் பாதசாரிக்கு கண்டிப்பாக நல்ல நிழல் கொடுக்கும் . மனிதர்களைப் போல் அது விரட்டாது என்று என் தன் மனதிற்குள் நினைத்தபடியே தூரம் தூரமாய் மரங்களை நட்டு வைத்துக் கொண்டே போனான்.

நீண்ட தூரம் மரக்கன்றுகளை நட்டு வைத்துவிட்டு கொடுமையான அந்த வெயிலிலிருந்து தப்பிக்க ஒரு மர நிழலில் மறைந்தான். அண்ணாந்து பார்த்தான்.

பெரிய மரத்தில் கிளைகள் தலையசைத்து அவனை வரவேற்பது போல் தலையாட்டின.

இந்த நிழல் போல், நாம் நட்டு வைத்த மரங்களும் நிச்சயம் மற்ற மனிதர்களுக்கு நிழல் தரும் என்ற நம்பிக்கை அவனுக்குள் துளிர் விட்டது.

செடிகள் நட்டபடியே சென்று கொண்டிருந்தான் கர்ணன்.

அவன் இளைப்பாறுவதற்கு நிழல் தரும் மரங்கள் கர்ணனை இரு கைகள் கூப்பி வரவேற்றன.

அதில் அவன் மயங்கி அங்கேயே கிடக்கவில்லை ; அடுத்த வேலையாக தான் நட்டுவிட்டு வந்த மரன்றுகளுக்கு உயிர்த் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *