நாடும் நடப்பும்

தியேட்டர்களுக்கு ஆதரவு கிடைக்குமா?

கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கி வரும் நிலையில் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டுக்கள் நடத்தப்பட ஆரம்பித்திருப்பது சரியா? என்ற சர்ச்சை கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெளியாட்கள் தொடர்புக்கு வழியின்றி, பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தாலும் தனது அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து தானே ஆக வேண்டும். அதில் ஒருவரிடமிருந்துதான் வெள்ளை மாளிகைக்குள் கோவிட் 19 கிருமி நுழைந்திருக்க வேண்டும்.

ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் தாக்கியதுடன் பல வெள்ளை மாளிகை ஊழியர்கள், மூத்த அதிகாரிகளையும் தாக்கியுள்ளது.

இப்படி பாதுகாப்பான பிரத்தியேக இடத்தில் பரவிவரும் பரவி விடும் கொரோனா தொற்று விளையாட்டு வீரர்களை பாதிக்காமல் இருக்க எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், முதியர்கள் என அனைத்து தரப்பினரும் வெளியே செல்வதை விட வீட்டிலேயே இருப்பதே பாதுகாப்பானது என்பதை உணர்ந்து வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் சோம்பேறிகளாக இப்படி இருப்பதை விரும்புவதில்லை.

ஆகவே ஏதேனும் காரணம் கிடைத்தால் வெளியே சென்றுவிட துடித்துக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் பரபரப்பான விளையாட்டுப் போட்டிகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

குறிப்பாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஜன நெரிசல் ஏதுமில்லாத துபாய், சார்ஜா மற்றும் அபுதாபியில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் நடத்துவது சரியான முடிவாகவே தெரிகிறது.

கிரிக்கெட் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற பல நட்சத்திர ஆட்டக்காரர்கள் இப்படி தினமும் மாலை நேரத்தில் விளையாடுவதை நேரலையில் பார்க்க முடிகிறதால் வெளியில் சென்று விட ஆர்வம் கொண்டவர்களுக்கு நல்ல மாற்று திட்டமாக இருக்கிறது.

விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்காக எடுத்துள்ள மிக விரிவான ஏற்பாடுகள் இதர துறைகளுக்கும் நல்ல முன்னுதாரணங்களாக இருக்கிறது.

குறிப்பாக அடுத்த வாரம் முதல் திரையரங்குகள் மீண்டும் இயங்க ஆரம்பித்து விட இருக்கும் நிலையில் கூட்ட நெரிசலை தடுப்பது முதல் உள்ளரங்க பாதுகாப்பு அம்சங்கள் வரை மிக கவனத்துடன் கண்காணித்து செயல்படுத்தியாக வேண்டும்.

திரையரங்குகளில் அடைக்கப்பட்ட சூழ்நிலையில் ஏ.சி. குளிரில் படத்தை கண்டு ரசிப்பார்கள். அவர்களில் ஒருவர் தொற்று பெற்றுவிட்டவராக இருந்தால் உடன் படம் பார்க்க வந்தவர்களுக்கும் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

திரையரங்கை மூடிவிட்டால் திரையுலக பணியாளர்கள் பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கும் சூழ்நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கடைநிலை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு திரையரங்குகள் திறக்கப்பட்டாக வேண்டிய நிர்ப்பந்தத்தை மனதில் கொண்டு மீண்டும் திரையரங்குகள் திறக்க முடிவு செய்திருந்தாலும் அவர்களின் சிக்கல்களை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொண்டு சலுகைகள் அறிவித்தாக வேண்டும்.

கடந்த ஆறு மாதங்களாக திரைக்காட்சிகள் இடம் பெறவில்லை. ஆனால் எல்லா திரையரங்குகளும் அடிப்படை மின்சார கட்டணத்தை செலுத்தியாக வேண்டும்.

இதை மாநில அரசுகள் தான் கவனத்தில் கொண்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு சலுகையாக மின் கட்டண தள்ளுபடி அறிவிக்கவேண்டும்.

தியேட்டர்களின் நிறுத்தத்தில் பணியாற்றுபவர்கள், கேன்டீன் நடத்துபவர்கள் மற்றும் அதற்கான பணியாளர்கள் என பலர் ஊரடங்கு காரணமாக வேலை ஏதுமின்றி வீட்டில் முடங்கி இருந்தது அறிந்தது தான்.

ஆக திரையரங்குகளை திறக்கலாம் என்று அறிவித்தாலும் 50 சதவிகித டிக்கெட் விற்பனைக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையில் தியேட்டர் உரிமையாளர்களின் நிலையை பார்த்தால் திறந்தாலும் தின வருவாய் கணிசமாக இருக்குமா? என்ற கவலை இருப்பதால் உடனே திறக்க தயங்குபவர்களே அதிகமாக இருப்பார்களோ? என்ற அச்சக்கேள்வியும் எழத்தான் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *