போஸ்டர் செய்தி

12,915 அரசு ஊழியர் ஓட்டுக்கள் நிராகரிப்பு

சென்னை,மே.17–
எதிர்காலத்தில் தபால் ஓட்டுப்பதிவில் குழப்பம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், ‘பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்கள் ஆகியோர் தபால் மூலம் ஓட்டுப்போட வழிவகை செய்யப்பட்டது. இதில், காவல்துறையை பொருத்தவரை, 100 சதவீதம் தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரை பொருத்தவரை சுமார் 1.25 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு போடும் படிவம் வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் சிறு தவறுகளுக்காக அவர்களது படிவம் நிராகரிக்கப்பட்டது.
தற்போது பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணி வரை தபால் ஓட்டு போடலாம். அதனால், ஓட்டுப்போடாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய படிவத்தை வழங்கி தபால் ஓட்டு போட அனுமதிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அரசு ஊழியர்களுக்கு எத்தனை தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் வழங்கப்பட்டன? அதில் எத்தனை தபால் ஓட்டுக்கள் பதிவாகின? என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் என 4 லட்சத்து 35 ஆயிரம் 3 பேருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டன. அதில், முறையாக படிவங்கள் பூர்த்திய செய்யாததாலும், தவறுதலாக பூர்த்தி செய்ததாலும், 12 ஆயிரத்து 915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார். இதையடுத்து நீதிபதிகள், ‘தபால் ஓட்டுக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 2 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும். அதேபோல, எதிர்காலத்தில் தபால் ஓட்டு போடும் நடவடிக்கையில் இதுபோன்ற குழப்பங்கள் நடைபெறாத வண்ணம் இந்திய தேர்தல் ஆணையம் செயல்படவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *