செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 1.60 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை, பிப்.8-

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 60 லட்சத்து 75 ஆயிரத்து 672 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 267 ஆண்கள், 204 பெண்கள் என மொத்தம் 471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 151 பேரும், கோவையில் 48 பேரும், தஞ்சாவூரில் 29 பேரும், குறைந்தபட்சமாக கரூர், நாகப்பட்டினம், ராணிப்பேட்டையில் தலா இருவரும், விருதுநகர், திருவண்ணாமலை, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, தூத்துக்குடியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் புதிதாக பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 41 ஆயிரத்து 797 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 728 ஆண்களும், 3 லட்சத்து 33 ஆயிரத்து 35 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 495 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 52 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

ஒருவர் மட்டுமே உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் (ஜனவரி) 24ந்தேதி 67 வயது பெண் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரையில் தமிழகத்தில் 12,383 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 9 மாதங்களுக்கு பிறகு உயிரிழப்பு மிகக்குறைந்த அளவை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 498 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், கோவையில் 56 பேரும், செங்கல்பட்டில் 52 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 25 ஆயிரத்து 25 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் 4 ஆயிரத்து 389 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 60 லட்சத்து 75 ஆயிரத்து 672 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஒரே நாளில் 53 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கி விட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்” என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் குழந்தைகள் மும்பையில் பாட்டி வீட்டில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு மும்பை சென்றார். நேற்று முன்தினம் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *