செய்திகள்

மகுவா மொய்த்ரா டெல்லி இல்லம்: உடனடியாக காலி செய்ய நோட்டீஸ்

டெல்லி, ஜன. 17–

மகுவா மொய்த்ரா தனது டெல்லி இல்லத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற குடியிருப்பு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கவுதன் அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வந்தார். இதனைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே, மகுவா மொய்த்ரா மீது லஞ்சம் வாங்கிக்கொண்டு கேள்வி எழுப்புவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டு பேரையும் நேரில் அழைத்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. ஆனால், அங்கு மகுவா மொய்த்ரா பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பரிந்துரை செய்தது. இது தொடர்பான அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதோடு, அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானமும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

மகுவாவுக்கு நோட்டீஸ்

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மகுவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த வழக்கானது கடந்த டிசம்பர் 15-ம் தேதி நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பாட்டி முன்பாக விசாரணைக்கு வந்தது. மகுவா மொய்த்ரா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக 3 வாரத்திற்குள் மக்களவை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை நிர்வகிக்கும் எஸ்டேட் இயக்குநரகம் மகுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அரசு ஒதுக்கிய பங்களாவை உடனடியாக காலி செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதற்கு எதிராக மகுவா மொய்த்ரா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் மகுவா மொய்த்ரா உடனடியாக வெளியேற வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *