செய்திகள்

தகவல் புரட்சியும் இந்திய பொருளாதார வளர்ச்சியும்


நாடும் நடப்பும்


உலக பொருளாதாரங்களின் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இந்திய பொருளாதார வளர்ச்சிகள் மகிழ்ச்சியான ஒன்றாகவே இருக்கிறது. பணவீக்கமும் கட்டுக்குள் இருப்பதும் கட்டுமானத் துறை சுறுசுறுப்பாக செயல்படுவதுடன் துல்லியமாக நேரத்திற்குள் செய்து முடிக்கும் திறனையும் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு (2023) முதலே கடன் வட்டிகளின் விகிதம் அதிகரிக்கப்பட்டு இருந்தாலும் சாமானியனால் அதை பெரும் சுமையாக பார்க்காது சமாளித்து வருவதும் தனிநபர் வருமானத்தின் வளர்ச்சிகளை சுட்டிக் காட்டுகிறது.

கொரோனா பெரும்வீழ்ச்சியை தொடர்ந்து உன்ரைன் போர் சிக்கல், எண்ணெய் வள வளைகுடா பகுதியில் போர் காட்சிகள் தொடர்வதால் உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் துவழ்ந்து கொண்டிருக்கையில் இந்திய பொருளாதாரம் பிரகாசமான விடிவெள்ளியாய் ஜொலிக்கத்தான் செய்கிறது.

இவற்றின் பின்னணியில் இந்திய ரியல் எஸ்டேட் துறை புதிய வளர்ச்சிகளை எதிர்நோக்கி உயர்ந்து பறக்க துவங்கி விட்டது.

நாடு முழுவதும் கடந்த 2023ம் ஆண்டின் முடிவில், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், புனே ஆகிய 7 முக்கிய நகரங்களில் புதிய குடியிருப்புகள் விற்பனை, 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் 3 லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல அலுவலகம் மற்றும் வர்த்தகக் கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள், காலி மனைகள் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

நடப்பு ஆண்டில் கடன் வட்டி 0.6% முதல் 0.8% வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 மற்றும் 3ம் நிலை நகரங்களிலும் குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

மேலும் வரும் ஆண்டிலும் (2024) வர்த்தக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான தேவையும் விற்பனையும் அதிகரிக்கும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு கடந்த ஆண்டில் சுமார் 40 லட்சம் கோடியாக இருந்தது. இது வரும் 2030ல் ரூ.83 லட்சம் கோடியாக (1 டிரில்லியன் டாலர்) ஆகவும் வரும் 2047ல் (100வது சுதந்திர தினம்) 483 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரியல் எஸ்டேட் துறையின் பங்கு கடந்த ஆண்டில் 7.3% ஆக இருந்தது. இது வரும் 2047ல் 15.5%ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சமீபமாக சென்னை உட்பட பல நகரங்களில் தங்கு தடையில்லா மின் வசதிகள் 100% என்ற நிலை உறுதியாகி வருவதால், மெல்ல தகவல் திரட்டுக்குத் தேவையான பெரும் தகவல் திரட்டு சமாச்சாரங்கள் இப்பகுதிக்கு தேர்வு செய்யப்பட்டு முழு வீச்சில் வளரத் தயாராகி விட்டது.

சென்னை வெளிவட்டார பகுதிகளான ஆவடி, செம்பரம்பாக்கம் பகுதிகளிலிருக்கும் உயர்மின் கட்டுமானங்கள் நகர்புற வளர்ச்சிகளுக்கு தடையாக இருந்து வந்தது அல்லவா?

ஆனால் சமீபமாக இதுபோன்ற உயர்மின் ஆழ்ந்த மின் கம்பங்கள் இருக்கும் பகுதிகளை தேடி தொலைத்தொடர்பு சேவை தரும் ஐடி நிறுவனங்கள் பல புதுப்புது சேவைகளை தர கட்டுமானங்களை செய்து வருகிறார்கள்.

சிங்கப்பூரில் இருந்து வரும் தொலைத்தொடர்பு சேவை கம்பிகள் முதலில் சென்னை வழியாகத்தான் நுழைகிறது. அதன் பயனமாக உலகிற்கு அதிவேக கணினி சமாச்சாரங்கள் நொடிப்பொழுது குறைபாடில்லா தங்கு தடையற்றச் சேவைகளை தர முடியும்.

இதில் பெங்களூரையும், மும்பையையும் கூட மிஞ்சி வரும் நகரம் சென்னை. இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சென்னை சாப்ட்வேர் உருவாக்குவதில் புரட்சியை கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை வான்நோக்கி வளர வைத்தது.

அது போன்றே அடுத்த யுகப் யுரட்சியாக உயர்ந்து வரும் தகவல் திரட்டு சமாச்சாரத்திலும் சென்னை நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் எல்லைகளை கடந்து புதிய உச்சத்தை தொட தயாராகி விட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *