சிறுகதை

கோலங்கள் – ராஜா செல்லமுத்து

ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கலை முன்னிட்டு காந்தி தெருவில் கோலப்போட்டி நடத்துவார்கள்.

யார் அழகான கோலங்களை வரைந்திருக்கிறார்கள் என்று பாேட்டி வைத்து அவர்களுக்குப் பரிசுகள் வழங்க வேண்டும் என்று ஒரு குழுவை ஆரம்பித்திருந்தார்கள் விழாக் குழுவினர்.

காந்தி தெரு முழுக்க கோலங்களைப் பார்வையிட்டனர். அழகழகான கோலங்கள் .ஓவியம் போல அச்சில் வார்த்த அழகில் இருக்கும் கோலங்கள். வானவில்லைப் போல வண்ணமாக வரையப்பட்ட கோலங்கள். நட்சத்திரங்களை அடுக்கி வைத்தது போன்ற கோலங்கள் என்று வார்த்தையில் வர்ணிக்க முடியாத வகையில் காந்தி தெரு முழுக்கக் கோலங்கள் நிறைந்திருந்தன.

பரிசுக்குரிய கோலத்தைத். தேர்ந்தெடுப்பதற்கு குழம்பிப் போய் நின்றனர் குழுவினர். அத்தனையும் அவ்வளவு அழகாக இருந்தன.

கோலப் போட்டியில் மூன்று கோலங்களை முதல், இரண்டாம் மூன்றாம் என்று மூன்று பரிசுக்குரிய கோலங்கள், இரண்டு ஆறுதல் பரிசுக் கோலங்கள் என்று போட்டிக்கு கோலங்களை தேர்வு செய்தார்கள் குழுவினர் .

அன்று போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆறுதல் பரிசு வாங்கியவர்களை முதலில் அழைத்து அவர்களுக்கான பரிசை கொடுத்தார்கள்.

மூன்றாம் பரிசு ,இரண்டாம் பரிசு என்று வழங்கினார்கள். அப்போது எந்த சலனமும் இல்லை. ஆனால் முதல் பரிசு கொடுத்த போது தான் காந்தி தெருவில் இருந்த அத்தனை பேருக்கும் கடுப்பாக இருந்தது.

என்ன இது ? அது கோலமே இல்ல. அதுவும் தமிழ தப்புத் தப்பா எழுதி வச்சிருந்தாங்க பெங்கல் வழ்த்துகள் அப்படின்னு சந்திப்பிழை ஒற்றுப் பிழையோட இருந்த கோலத்திற்கா முதல் பரிசு கொடுக்கிறது? இது தவறு

என்று காந்தி தெரு முழுக்க அத்தனை பேரும் பரிசுக்குரிய கோலத்தைத் தேர்ந்தெடுத்தவர்களைத் திட்டி தீர்த்தார்கள்.

அப்போது அந்த பரிசுக்குரிய கோலத்தை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்று அந்த குழு தலைவர் ஓரு உண்மையை சொன்னார்

அது அத்தனை பேருக்கும் சரியாகப்பட்டது .ஒரு சிலர் இது ஓரவஞ்சனையான தேர்வு என்று வருத்தப்பட்டு கொண்டார்கள்.

அப்படி என்னதான் சொன்னார் என்று கூட்டத்தில் இருப்பவர்கள் ஆவலுடன் கேட்க ஆரம்பித்தார்கள்

காந்தி தெரு வாசிகளே உங்கள் எல்லாருக்கும் வணக்கம் .இங்க வரையப்பட்டிருந்த எல்லா கோலமும் ரொம்ப அழகானது. ஓவியர்கள் கூட தோத்து போற அளவுக்கு அவ்வளவும் தத்ரூபமா இருந்தது. நாங்களே எந்த கோலத்தை விடுறது எந்த கோலத்தை தேர்ந்தெடுக்கிறதுன்னு ரொம்ப குழம்பித்தான் போயிருந்தோம்

ஏன்னா அத்தனை கோலங்களும் பரிசுக்குரிய கோலங்கள் தான். எல்லாப் பரிசு கொடுக்கும் போதும் நீங்க அமைதியா இருந்தீங்க. ஆனா முதல் பரிசு கொடுக்கும் போது மட்டும் உங்களுக்குள்ள ஒரு சலசலப்பு ஏற்பட்டதப் பார்த்தேன். அதுவும் அது சரியான கோலம் இல்லை தவறுதலா எழுதப்பட்ட வார்த்தைகள்.காேலமும் அவ்வளவு அழகாகவும் இல்ல அப்படின்னு உங்களுக்கும் தெரியும் . எனக்கும் தெரியும் .ஆனா உங்க கோலங்கள் எல்லாம் உயிர் இல்லாம இருந்தது. ஆனால் தப்பா எழுதப்பட்ட கோலத்துல ஒரு உயிருக்கான விஷயம் இருந்தது.

நீங்க எல்லாம் வெறும் கோலமாவுல கோலப் பாெடியில கோலம் போட்டு இருந்தீங்க .

ஆனா அந்த முதல் பரிசுக்குரிய கோலம் அரிசி மாவுல போடப்பட்டிருந்தது. நீங்க போட்ட கோலத்துக்கிட்ட எந்த எறும்பும் போகல .ஆனா அந்த முதல் பரிசு கோலத்தை சுத்தி எறும்புக போயி சாப்பிட்டு பசியாறிச்சு. இத நாங்க நேரில் பார்த்தோம் .அதில இருக்கிற வார்த்தையும் கோலம் தான் அழகு இல்லையே தவிர, அந்த கோலத்தை போட்டவங்க மனசு ரொம்ப அழகானது. அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும், நம்ம கோலம் கண்டிப்பாக பரிசு வாங்காது அப்படின்னு. ஆனா அவங்க மனசுல இருந்த அந்த ஈரம், இரக்கம் அந்த சிறு உயிர்களுக்கு உணவு கொடுக்கணும் அப்படின்ற எண்ணம். எங்களை சிந்திக்க வச்சது. அவங்க கோலம் அழகு இல்ல தான்.

ஆனா அத்தனை எறும்புகளும் சாப்பிட்டு பசியாறுறதப் பாத்தோம். இதைவிட ஒரு அழகான உயிருள்ள ஓவிய கோலத்தை யாரும் போட முடியாது அப்படின்னு எங்களுக்கு தோணுச்சு. அதான் அதுக்கு முதல் பரிசு கொடுத்தாேம் என்று அந்த நடுவர் குழு சொன்னபோது அதுவும் சரிதான்.

அதுக்கு முதல் பரிசு நீங்க கொடுத்தது தப்பு இல்லை என்று அத்தனை பேரும் ஆமோதித்து எழுந்து நின்று கைதட்டினார்கள்

தவறுதலாக எழுதப்பட்டிருந்த அந்த கோலம் முழுவதையும் எறும்பு சாப்பிட்டு முடித்திருந்தது.

கோல மாவில், காேலப் பவுடரில் பாேடப் பட்ட கோலங்கள் எல்லாம் அழகாக அப்படியே இருந்தன.

தவறுதலாக எழுதப்பட்டிருந்த அந்த கோலம் முழுவதையும் எறும்புகள் ஊர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *