செய்திகள்

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: மற்றொரு மிசோரம் கட்சியும் அறிவிப்பு

ஐஸ்வால், நவ. 03–

மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என, மற்றொரு மாநில கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் அறிவித்திருப்பது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் மற்றும் ஜோரம் மக்கள் இயக்கம் ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் பாஜகவும் களத்தில் நிற்கிறது.

மிசோரம் சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் பொதுவாக இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்குதான் சாத்தியம் என தெரிவித்துள்ளன. இதனால் மிசோ தேசிய முன்னணி – காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் அல்லது ஜோரம் மக்கள் இயக்கம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பாஜகவுடன் இருக்க மாட்டோம்

மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் மணிப்பூர் பிரச்சனையை முன்வைத்து பாஜகவுடன் தேர்தல் பிரசாரம் கிடையாது; பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரம் இல்லை என கழற்றிவிட்டது. இதனால் பிரதமர் மோடி, மிசோரமில் தேர்தல் பிரசாரம் செய்யாமல் ரத்து செய்துவிட்டார்.

இதனிடையே ஜோரம் மக்கள் இயக்கமும் பாஜகவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டது. ஜோரம் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் கே.சப்தங்கா செய்தியாளர்களிடம் பேசுகையில், மிசோரம் மக்கள் புதிய அரசாங்கத்தை எதிர்பார்க்கின்றனர். பொதுமக்கள் கூட்டணி அரசாங்கத்தை விரும்பவில்லை. ஜோரம் மக்கள் இயக்கம் முழு பெரும்பான்மை பெற்று தனித்தே ஆட்சி அமைக்கும். அப்படி ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும் பாஜகவுடன் கை கோர்க்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *