செய்திகள்

தொடக்கத்தில் மோடியை நானே நம்பிவிட்டேன்: கமல்ஹாசன் பேச்சு

ஈரோடு, மார்ச் 30–

நாடு காக்க வந்துள்ளேன் என்று மோடி தொடக்கத்தில் சொன்ன போது, நானே கூட நரேந்திர மோடியை நம்பிவிட்டேன் என்று, பிரதமர் மோடி குறித்து கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:–

“நாட்டைக் காக்கும் உரிமை தமிழர்களுக்கும் உள்ளது. தேசிய நீரோட்டத்தில் கலக்காத திராவிடக் கூட்டம் இது என சிலர் பேசிக் கொள்கிறார்கள். வடநாட்டில் யாராவது காமராஜர், சிதம்பரம் என்று பெயர் வைத்துள்ளார்களா? ஆனால், இங்கு காந்தி, நேரு, சுபாஷ்சந்திரபோஸ் என்று தங்கள் குழந்தைகளுக்கு எத்தனை பேர் பெயர் வைத்திருக்கிறார்கள். நீங்கள் இப்போதுதான் சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கு சிலை எழுப்பி உள்ளீர்கள். தமிழர்களாகிய நாங்கள் எங்கள் இதயத்தில் பட்டேலுக்கு சிலை எழுப்பி ரொம்ப நாள் ஆகிவிட்டது. தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டார்கள் என்பது வடிகட்டிய பொய்.

கமல்ஹாசன் பிரசாரம்

எப்படியாவது நாட்டைப் பிடித்துவிட வேண்டும் என்பது வெறி; நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பது வீரம். 10 ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை சந்திக்காத பிரதமர் மோடியிடம் வீரத்தைப் பற்றி பேசி என்ன பயன்? இதற்கு முன் கிழக்கு இந்தியா கம்பெனி நம்மை சுரண்டிச் சென்றார்கள். அது மாறிவிட்டது என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, மேற்கு இந்தியாவில் இருந்து அதாவது குஜராத்தில் இருந்து ஒரு கம்பெனி வந்துள்ளது. அந்த கம்பெனி இங்கிருந்து எடுத்துச் செல்லும் காசை அந்த மக்களுக்காவது செலவிட்டார்களா என்றால் அதுவும் இல்லை. அதனால்தான், அங்கிருக்கும் மக்கள் தமிழ்நாட்டை நோக்கி தொழிலாளர்களாக வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை கலைக்க டிரோன் மூலம் கண்ணீர் புகைகுண்டை வீசுகின்றனர். விஞ்ஞானத்ததை விவசாயத்துக்கு பயன்படுத்தாமல், விவசாயிகளை விரட்ட பயன்படுத்தவதுதான் இன்றைய இந்தியாவின் நிலையாக இருக்கிறது. எங்களுக்கென்று ஒரு மொழி உள்ளது. இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள். தேவையென்றால் நாங்கள் கற்றுக் கொள்வோம். வெள்ள காலத்தில் கூட ஒன்றிய அரசு உதவி செய்யவில்லை. சரி கொடுக்க வேண்டியதை கேட்டால்; ஏற்கெனவே கொடுத்ததே பிச்சை என்று கூறுகிறார்கள்.

மோடியை நானே நம்பிவிட்டேன்

நாடு காக்க வந்துள்ளேன் என்று மோடி தொடக்கத்தில் சொன்னபோது, நானே கூட அவரை நம்பிவிட்டேன். கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார் மோடி. பின்னர் கருப்பு பண முதலைகளை பிடிப்பேன் என்றார். இறுதியில் கருப்பு முதலைகளெல்லாம் தப்பிவிட்ட பின்னர், குளத்தை தூர்வாரி என்ன பயன்?. அரசியலில் மதம் கலந்து சீரழிவைச் சந்ததித்தற்கு பேருதாரணம் ஐரோப்பா கண்டம். இதனால், அவர்கள் சந்தித்த இழப்புகள் ஏராளம்.

இதன் படிப்பிணையில் அவர்கள் எடுத்த முடிவு அரசியலில் மதம் கலக்க கூடாது. ஆனால், இன்றைய இந்தியாவை அந்த நிலையை நோக்கி ஒரு கூட்டம் நகர்த்துகிறது. நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. குழந்தைகளை படிக்க வைக்க காலை உணவுத் திட்டத்தை அளிக்கும் அரசு தேவையா? அல்லது படிக்கும் குழந்தைகளை நுழைவுத் தேர்வு என்ற பெயரில் அவர்களின் கல்வியைப் பறிக்கும் அரசு தேவையா என்று மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *