செய்திகள்

தொடர்மழை: சென்னை ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

10 மாதத்திற்கு தேவையான நீர் இருப்பு கைவசம்

சென்னை, நவ.27-

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர்மழையின் காரணமாக சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னை மாநகருக்கு அடுத்த 10 மாதங்களுக்கு தேவையான குடிநீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டு உள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 நீர்த்தேக்கங்களின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கும்மிடிப்பூண்டியில் 5.6 செ.மீ, சோழவரத்தில் 5 செ.மீ, செங்குன்றம் பகுதியில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்று விநாடிக்கு 164 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது 532 கனஅடியாக உயர்ந்துள்ளது. ஏரியிலிருந்து 162 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 24 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.19 அடியாக உயர்ந்துள்ளது. முழுக் கொள்ளளவை எட்டி வரும் நிலையில் இப்பகுதியில் தொடர்மழை பெய்தால் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதேபோல் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 18.89 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 281 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னையின் குடிநீர் தேவைக்காக இதிலிருந்து 189 கன அடி வெளியேற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 16.05 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு விநாடிக்கு 174 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் தற்போது 30.62 அடியாக உயர்ந்துள்ளது. விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் ஏரியிலிருந்து 38 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருப்பை பொறுத்த வரையில், பூண்டி 1,886 மில்லியன் கன அடி (1.8 டி.எம்.சி.), சோழவரம் 743 மில்லியன் கன அடி, புழல் 2 ஆயிரத்து 788 மில்லியன் கன அடி (2.7 டி.எம்.சி.), கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை 437 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் 3 ஆயிரத்து 170 மில்லியன் கன அடி (3.1 டி.எம்.சி.), வீராணம் 1,014 மில்லியன் கன அடி உள்பட 10 ஆயிரத்து 38 மில்லியன் கன அடி (10.38 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.

சென்னை மாநகருக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு 1 டி.எம்.சி. வரை தேவைப்படுவதால் தற்போதைய நிலையில் அடுத்த 10 மாதத்திற்கு தேவையான நீர் இருப்பு கைவசம் உள்ளது என்று நீர் வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *