செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்கா, நாட்டோ நாடுகளுக்கு புதுசவால்; அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதி புதின்: ரஷ்யாவுக்கு தெம்பு


ஆர்.முத்துக்குமார்


ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபர் தேர்தலில் 87 சதவிகித வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சியில் தொடர்கிறார் புதின். எதிர்த்து போட்டியிட்டோரில் இரண்டாவது இடத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிக்கோலாய் வெறும் நான்கு சதவிகித வாக்குகளே பெற முடிந்தது.

ரஷ்யாவில் ஜனநாயகம் உண்மையில் நிலை நாட்டப்பட்டு இத்தகைய தேர்தல் நடத்தப்படுகிறதா? என்ற கேள்வியை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குறை கூறிவருவது புரிந்தது தான்.

ஆனால் தேர்தலின் முடிவை அறிவித்த வேகம் ஆன்லைன் சமாச்சாரத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி என்று தான் நாம் பாராட்டி ஆக வேண்டும். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு மறுநாள் காலை 9 மணி அளவில் தேர்தல் முடிவுகள்! பிரமிக்க வைக்கும் வேகம் இது.

பிரான்சு, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் இப்படி ஆன்லைன் வாக்குப்பதிவும் நிமிடத்தில் வாக்குப் பதிவை எண்ணி முடிவுகளை அறிவக்கும் வேகமும் இனி நாம் இதை எப்படி நமது தேர்தல் முறையில் கொண்டு வருவது என சிந்திக்க வைக்கிறது.

இம்முறை புதின் பெற்ற வெற்றியால் அவரது ஆட்சி மேலும் ஆறு ஆண்டுகளுக்கு உறுதியாகி விட்டது.

உலக வரைபடத்தில் மிகப்பெரிய வட்டம் இன்று ரஷ்யாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்தி உள்ளதை அறிவோம்.

அமெரிக்காவின் கெடுபிடியால் ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா உட்பட பல நாடுகள் ரஷ்யா மீது கடினமான பொருளாதாரத் தடைகளை அறிவித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தியும் உள்ளது.

தற்சமயம் ரஷ்யாவின் பொருளாதார வளர்ச்சிகள், ராணுவ வலிமையும் அந்நாட்டின் மிகப்பெரிய அரண்ஆகும். இந்நிலையில் ரஷ்யாவின் எண்ணை வளம் மட்டுமே அவர்களின் பாதுகாப்பு கேடயமாக இருக்கிறது. நாட்டோ நாடுகளின் விரிவாக்கம் ரஷ்ய எண்ணை வளத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உருவாக்கிட முடியும்.

கிட்டத்தட்ட 18 நாடுகளுடன் தங்கள் எல்லையை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ரஷ்யாவுக்கு இருப்பதுடன் கால்பகுதி கடல் சூழ இருக்கிறது.

அதில் 12 ஐரோப்பிய கண்டத்திலும் 5 ஆசிய பகுதியிலும் இருக்கிறது.

தற்போது பின்லாந்து நாட்டோவில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பிறகு 11 சதவிகித ரஷ்ய எல்லைகள் நாட்டோ நாடுகளுடன் பகிர்ந்து இருப்பதை மறந்து விடக்கூடாது.

இப்படி அமெரிக்காவின் கெடுபிடி அரசியல் சர்வதேச நிகழ்வுகளில் பல வகைகளில் ரஷ்யாவையும் சீனாவையும் வீழ்த்தவும் அடி பணிய வைக்கவும் இருப்பதை துணிவுடன் எதிர்த்து வரும் புதின் மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

சர்வதேச தலைவர்கள், குறிப்பாக அமெரிக்காவும் நாட்டோ அமைப்பு நாடுகளும் இத்தேர்தலை போலித்தனம் என்று விமர்சிப்பது தொடர்கிறது.

ஆனால் அமெரிக்காவின் செயல் திட்டங்களை விமர்சிக்கும் தலைவர்களை அவர்கள் ஏற்கவா போகிறார்கள்?

போர் குற்றவாளி என ஓர் நாட்டின் தலைவரை அறிவித்து எந்த நாட்டிற்கும் பயணிக்க முடியாத கடுமையான சூழ்நிலையிலும் பல நாடுகளின் ஆதரவை புதின் பெற்றிருப்பது ஆச்சரியம் தான்.

என்றேனும் அமெரிக்காவின் கெடுபிடி சர்வாதிகாரப் போக்கால் விபரீத எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தால் தாக்குபிடிக்க முடியாமல் திணறுவோம் என்ற அச்சத்தால் ரஷ்யாவை ஆதரிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

இதில் இருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ள இந்தியா செய்தது விஞ்ஞான வலிமையை பெற்றுக் கொண்டதால் தான்.

அணு மின் உற்பத்தியிலும் விண்வெளி சாதனைகளிலும் இந்தியர்கள் கண்டு வரும் முன்னேற்றங்கள் அமெரிக்காவின் சர்வாதிகார அரசியலை எதிர்த்து நின்று உலக அரசியலில் தலைநிமிர்ந்து நடைபோட வைக்கிறது.

இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவும் நாட்டோ நாடுகளும் நடத்திய ரஷ்யாவுக்கு எதிரன நடவடிக்கைகளுக்கு இதுவரை எந்த பிரதி எதிர்ப்பு நடவடிக்கைகளை ரஷ்யா அறிவித்ததாக தெரியவில்லை.

ஆனால் தொடர்ந்து பல்வேறு தலைவலிகளை தந்து வரும் உக்ரைனுக்கும் அதன் ஆதரவு நாட்டோ அணிக்கும் என்றேனும் திருப்பித் தரும் நடவடிக்கைகள் ஏற்பட வழி இருப்பதால் மூன்றாம் உலகப்போர் பற்றிய அச்சம் எழத்தான் செய்கிறது.

மீண்டும் வெற்றி பெற்று விட்ட புதின் தன் நன்றி உரையில் ரஷ்ய வாக்காளர்களுக்கு பாராட்டையும் நன்றிகளையும் கூறியதுடன் ரஷ்யாவின் பெருமைக்கு பணியாற்றுவேன் என்று முழக்கமிட்டுள்ளார்.

இதன் பின்னணியில் தங்களது எல்லைப் பகுதிகளில் சிக்கல்கள் ஏற்படுத்துவோரை விரட்டி அடிக்க தயங்கப் போவது இல்லை என்பதையும் மறைமுகமாக கூறுகிறார் என்பது புரிகிறது.

இது வலை தற்காப்பு என்றும் இழந்த நிலப்பரப்பை மீட்பது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்த புதின் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு தாக்கும் வல்லமையை உருவாக்கும் தொழில்நுட்ப வல்லமைக்கும் கவனம் செலுத்துவார் என்று யோசிக்க வைக்கிறது.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால் அவர்கள் கவனம் வாக்காளர்களைத் திசை திருப்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முற்படுவார்கள்.

முன்பு குவைத்தில் யுத்தம், ஆப்கானில் யுத்தம், சிரியாவில் புரட்சி என கலங்கிய குட்டையில் மீன் பிடித்து வந்த அமெரிக்க அரசியல்வாதிகள் உக்ரைனில் அரசியல் ஆதாயம் தேடத் துணிந்தால் புது பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள புதின் திருப்பி தாக்கும் சக்தியுடன் இருப்பதால் தயங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

புதினின் வெற்றியைத் தொடர்ந்து பிரிக்ஸ் அமைப்பின் தலைமையில் இருக்கும் ரஷ்யா பல நடவடிக்கைகள் எடுக்கத் தயாராகி விட்டது. அவை வல்லரசாய் உயர்ந்து வரும் இந்தியாவுக்கும் நிச்சயம் நல்ல செய்திகள் வரஇருப்பதை பார்க்கத்தான் போகிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *